Last Updated : 09 Aug, 2015 11:28 AM

 

Published : 09 Aug 2015 11:28 AM
Last Updated : 09 Aug 2015 11:28 AM

வனங்களை இழக்கும் பழங்குடிகள்!

ஆகஸ்ட் 9 - பழங்குடியினர் தினம்

*

வனப் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வனப் பகுதிகள் அறிவிக்கப்படுவதுடன், வேட்டைத் தடுப்புப் படைகளும் அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. ஆனால், இதன் விளைவாக ஏராளமானோர் குறிப்பாகப் பழங்குடியினர் விரட்டியடிக்கப்படுவதுடன் துன்புறுத் தலுக்கும் ஆளாகின்றனர். மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளும் அதிகரித்திருக்கின்றன. எனவே, இவ்விஷயத்தில் புதிய அணுகுமுறை அவசரத் தேவையாக இருக்கிறது. வனப் பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட மக்களின் நில உரிமையை பாதுகாப்பது என்பதை வனப் பாதுகாப்புத் திட்டங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

தங்களின் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதிலும் கவனித்துக் கொள்வதிலும் மற்ற எவரையும்விடச் சிறந்தவர்கள் பழங்குடியினர்தான். அவர்களது வாழ்வே அதைச் சார்ந்துதான் இருக்கிறது. 1974-ல் தான்சானியாவின் கோரோங்கோரோ கிரேட்டர் வனப் பகுதியிலிருந்து மாசாய் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதியில் வன விலங்கு வேட்டை அதிகரித்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் பார்க் பகுதியிலிருந்து பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், எல்க் எனப்படும் காட்டு மான்களாலும் மற்றும் பைசன் என்றழைக்கப்படும் காட்டெருமைகளாலும் அதிக அளவு மேய்ச்சலுக்குட்பட்டு அப்பகுதி நிலங்கள் பாழாகின. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, ஆஸ்திரேலியாவின் அபராஜின்கள் கட்டுப்பாடான எரிப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர். பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

வனங்களைக் காத்தவர்கள்

தெற்காசியக் காடுகளின் பழங்குடி மக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் புலிகளின் அருகில் வாழ்ந்துவந்தவர்கள். ஆனால், இன்று ‘புலிகள் பாதுகாப்பு’ என்ற பெயரில் அம்மக்கள் காடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். நேபாளத்தின் சிட்வான் தேசியப் பூங்காவின் சில பகுதிகளிலிருந்த பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதிகளைவிடவும் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் பழங்குடி மக்களின் நில உரிமையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அதிகமான எண்ணிக்கையில் வனவிலங்குப் பூங்காக்களை நிறுவி, அங்கிருந்த பழங்குடி மக்களை வெளியேற்றிவருவதுடன், அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவர முயற்சிக்கின்றன அரசுகள்.

அமேசான் காடுகளில் பழங்குடி எல்லைகள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, பழங்குடி மக்களாலேயே நிர்வகிக்கப்படும் நிலையில், அமேசான் வனப் பகுதிகள் அதிகப் பாதுகாப்புடன் இருப்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. இதற்கு மிக எளிய காரணம் உண்டு. பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாகத் தங்கள் நிலங்களை நிர்வகித்து, பாதுகாத்துப் பராமரித்தவர்கள். எனவே, மற்ற எவரைவிடவும் வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் அறிவும் முனைப்பும் கொண்டவர்கள் அவர்கள்தான்.

பிடுங்கப்படும் வேர்கள்

தற்போதைய வனப் பாதுகாப்பு முறையில் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளை மூன்று உதாரணங்கள் விளக்குகின்றன.

தென்கிழக்கு கேமரூனில் பாக்கா பிக்மி மக்கள் தங்கள் மூதாதைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்த வனப் பகுதிகள் தேசியப் பூங்காக்களாகவும் வேட்டைச் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. விலங்குகளை வேட்டையாடி உண்பதை வாழ்க்கை முறையாகக் கொண்ட பாக்கா மக்கள் தற்போது வேட்டைக்காரர்களாகக் குற்றம்சாட்டப்பட்டு காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவருகிறார்கள். வேட்டைத் தடுப்புப் படைகளால் துன்புறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாவதுடன் தங்கள் உயிரையே பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். காட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், தங்கள் உடல்நிலை சீர்குலைந்துவிட்டதாக அவர்களில் பலர் தெரிவிக்கிறார்கள். அம்மக்கள் வேட்டைக்காரர்களாகச் சித்தரிக்கப்பட்டு சித்திரவதையை அனுபவிக்கும் அதேவேளையில், வன விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைக் கடத்தும் சட்ட விரோதத் தொழில் மறுபுறம் துரிதமாக நடந்துவருகிறது.

போட்ஸ்வானாவின் புஷ்மேன் பழங்குடியினர் கலஹாரி பாலைவனத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்தனர். இன்று அவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர். அம்முகாம்களை ‘மரணப் பிரதேசங்கள்’ என்றே அழைக்கிறார்கள் புஷ்மேன் பழங்குடிகள். ‘சென்ட்ரல் கலஹாரி கேம் ரிசர்வ்’ பகுதியில் வசிக்கவும் வேட்டையாடவும் அவர்களுக்கு உரிமை உண்டு என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பு கூறினாலும், வேட்டையாடுகிறார்கள் என்று காரணம்காட்டி, வனத்துறை அதிகாரிகள் அவர்களைக் கைது செய்வதுடன் தாக்கியும் வருகிறார்கள். இன்று ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று அழைக்கப்படும் அம்மக்கள் வசித்த இடங்களில் வைரம் மற்றும் புதுப்பிக்கவியலாப் பொருட்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களும், சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு விடுதியும், நீச்சல் குளமும் இருக்கின்றன. புஷ்மேன் பழங்குடிகள் வாழ்ந்ததாலும், வேட்டையாடியதாலும் வன உயிர்களுக்கு மிகப் பெரிய அழிவு ஏற்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு மையங்களில் ஏராளமான பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் அல்லது துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். தங்கள் வனப் பகுதியை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இழப்பீடுகள் மிகச் சிறியவை. பழங்குடி மக்களின் குடும்பங்கள் சிதைந்துவிட்டிருக்கின்றன. பிளாஸ்டிக் தகடுகளாலான ‘வீடு’களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் தன்னிறைவு வாழ்க்கையையும் பெருமையையும் இழந்துநிற்கும் அவர்கள், இன்று பிறரிடம் உதவிகளை எதிர்பார்க்கும் நிலையிலும், கூலி வேலைகள் செய்து பிழைக்கும் நிலையிலும் இருக்கிறார்கள்.

அக்கறை தேவை

பழங்குடி மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் மிகச் சில உதாரணங்கள் இவை. உலகம் முழுவதுமே வனப் பாதுகாப்பு முறைகளின் பாதகமான விளைவுகளை அம்மக்கள் சந்திக்கிறார்கள்.

எத்தனையோ கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டாலும், பழங்குடிகளைத் தனிமைப்படுத்துவதிலும் துன்புறுத்துவதிலும் தான் வனப் பாதுகாப்புத் துறை தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், வனப் பாதுகாப்புக் கொள்கையில் துரிதமான மாற்றம்தான் இப்போது தேவை. வன உயிர்கள் விஷயத்திலும் சரி, பழங்குடி மக்கள் விஷயத்திலும் சரி, நேரம் அதிகமில்லை. வனப்பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் பழங்குடிகளின் நில உரிமையைப் பாதுகாப்பதுடன் அவர்களது வார்த்தைகளுக்குச் செவிமடுத்து அவர்களை ஆதரிக்க வேண்டும்.

© ‘தி கார்டியன்’

தமிழில் சுருக்கமாக:வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x