

மீண்டும் தொற்றா?
ஒரு தடவை ஒரு நோய்த் தொற்றுக்கு உள்ளாகிப் பிறகு உடல் நலம் தேறிவிட்டால் ஒருவருக்கு மீண்டும் அந்த நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஏனெனில், அந்த நோயை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தியை உடல் உருவாக்கிக்கொள்ளும். கரோனா தொற்றிலும் அப்படியே இருக்கும் என்றே நம்பிவந்தார்கள். அந்த நம்பிக்கையில் தற்போது இடி விழுந்துள்ளது. தென் கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறியவர்களுக்கு மறுபடியும் பரிசோதனை செய்துபார்த்தபோது அவர்களில் 91 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பதாகத் தெரியவந்தது. கொரியாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனத்தின் தலைவர் ஜியோங் என் கையோங் இது குறித்துச் சொல்வதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு மறுபடியும் தொற்று ஏற்பட்டிருக்கும் சாத்தியத்தைவிட உடலில் அமைதியாக இருந்த கரோனா வைரஸ்கள் மறுபடியும் செயல்பட ஆரம்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றிருக்கிறார்.
சுற்றுச்சூழலும் எரிபொருளும்
பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. இதனால், வாகனப் பயன்பாடு பெரிதும் குறைந்துள்ளது. பல நாடுகளில் விமானப் போக்குவரத்தும் கிட்டத்தட்ட முற்றிலும் நின்றுபோயிருக்கிறது. இது உலக அளவில் படிம எண்ணெய் உற்பத்தியிலும் விலையிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படிம எண்ணெய்க்கான தேவை ஒரு நாளைக்கு 3 கோடி பேரல் அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால், கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் படிம எண்ணெயின் விலை குறைந்திருக்கிறது. ஆகவே, ஓபெக் (பெட்ரோலியம் ஏற்றுமதிக்கான நாடுகளின் அமைப்பு) எண்ணெய் உற்பத்தியை 10%, அதாவது நாளொன்றுக்கு ஒரு கோடி பேரல் அளவுக்குக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. சுற்றுச்சூழலில் இதன் தாக்கம் எப்படியிருக்கிறது என்பதை இப்போது ஆய்ந்துவருகிறார்கள்.