

தாமிரபரணி. தமிழகத்தில் பிறந்து தமிழகத்திலேயே கடலில் கலக்கும் வற்றாத அரிய நதி. தமிழர்களின் உணர்வுடன் கலந்துவிட்ட ஜீவ நதி. திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களின் வாழ்வோடு பிணைந்துவிட்ட தாய் நதி. நதியின் ஒவ்வொரு துளியிலும் வழிகிறது அன்பு. நதியில் கை நனைக்காமல் ஒருநாளையும் தொடங்குவதில்லை அந்த மக்கள். உலகமே சுற்றி வந்தாலும் ஊர் தண்ணீரை குடித்தால்தான் தாகம் தணிகிறது அவர்களுக்கு. உலகப் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா தொடங்கி பத்தமடை பாய் வரை தாமிரபரணி தண்ணீர் இல்லாமல் சாத்தியம் இல்லை.
தாமிரம் கலந்த தாமிரபரணியின் தண்ணீருக்கு தனித்தன்மை இருக்கிறது என்பது அறிவியல்பூர்வமான உண்மை. இன்றைக்கும் தாமிரபரணியின் தண்ணீரை வெளியூர்களுக்கு வரவழைத்து அல்வாவும் பிரியாணியும் தயாரிக்கும் உணவுக் கடைகளே அதற்கு சாட்சி.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தாமிர பரணி தொடரை எழுதத் திட்டமிட்டபோது ஏதேதோ காரணங்களால் பயணம் தள்ளிக்கொண்டேச் சென்றது. அப்போது ஓர் ஆன்மிக அன்பர், “தாமிரபரணியின் நதிமூலம் பொதிகை மலை. தென் கைலாயம் அது. நாம் நினைத்தபோதெல்லாம் அங்குச் செல்ல முடியாது. அகத்தியர் அழைக்கும் போதுதான் செல்ல முடியும்” என்றார். ஆம், நதியின் ஒவ்வொரு துளியிலும் ஒளிர்கிறது ஆன்மிகம். இந்தியாவில் வடக்கு நோக்கி பாயும் ஒரே நதி தாமிரபரணி மட்டுமே. பொதிகையில் தனது பிறப்பிடம் தொடங்கி பாபநாசம் வரை வடக்கு நோக்கி பாயும் நதி, அங்கிருந்துதான் கிழக்கு நோக்கி திரும்புகிறது. அதனால்தான் பாப நாசம் தாமிரபரணியில் பாவம் கழிக்க சடங்குகளை செய்கிறார்கள். நதியின் உச்சி முதல் பாதம் வரை படர்ந்திருக்கின்றன திருத்தலங்கள்.
பொதிகை மலை உச்சியில் அகத்தியர் வழிபாடு எனில் நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் சங்குமுக வழிபாடு என நதிக்கரை நெடுக ஆன்மிக மணம் கமழ்கிறது. தாமிரபரணி நதியே அகத்தியர் கமலக் குண்டலத்திலிருந்து சிந்தியதுதான் என்கிறது புராணம்.
தமிழகத்தின் எல்லா நதிகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றன எனில் தாமிரபரணி மட்டும் அழிவில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருப்பதை பயணம் முழுவதும் பார்க்க முடிந்தது. காரணம், நெல்லை, தூத்துகுடி மக்கள் மற்றும் தமிழக வனத்துறை. நதியின் நீர் பிடிப்பு பகுதியான கேரளத்தின் பொதிகை மலை உச்சியில் தொடங்கி, கடலுடன் சங்கமிக்கும் தூத்துகுடி மாவட்டம், பழைய காயலின் சங்குமுகம் கடல் வரை வனப் பல்லுரியம், பழங்குடிகளின் பண்பாடு, சமவெளி நதிக்கரை மக்களின் பண்பாடு, கலாச்சாரம், ஆன்மிகம், வணிகம், வரலாறு, இலக்கியம் என ‘தி இந்து’-வுக்காக நதியோடு இயைந்த ஒரு பன்முகப் பயணம் இதோ...
கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம். பனிக்காற்று முகத்தில் அறைகிறது. செங்குத்தான வழுக்குப் பாறையில் கயிற்றை பிடித்து ஏறிக்கொண்டிருக்கிறோம். மேகக் கூட்டம் உடலை வருடிச் செல்கிறது. மேகக் கூட்டத்தை தலைக்கு மேல் பார்த்து தான் பழக்கம். இங்கேதான் காலுக்கு கிழேயும் பார்க்க முடிகிறது. பக்கத்தி லிருப்பவரை பார்க்க முடியாத அளவுக்கு கண்களை மறைக்கின்றன மேகங்கள். வானத்திலிருப்பதுபோல் பிரமிப்பு தட்டுகிறது. கீழே பார்த்தால் தலை சுற்றுகிறது. நினைத்தால் பொழிகிறது வானம். எப்போதும் நனைக்கிறது சாரல். இந்த இடத்தை அடையவே முழுதாக ஒன்றரை நாள் ஆகிவிட்டது. இன்னும் மூவாயிரம் அடி ஏற வேண்டும் என்றார்கள் உடன் வந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள்.
தற்போது ஏறிக்கொண்டிருக்கும் சிகரத்தின் பெயர் ‘அத்திரி’மலை. பொதிகை மலையின் ஒருபகுதி இது. கேரளத்தின் நெய்யாறு வன சரணலாயத் துக்கு உட்பட்டது. இதற்கு நேர் கீழே தமிழகத்தின் களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலயம் இருக்கிறது. கடும் ஏற்றத்தால் அவ்வளவு குளிரிலும் வியர்த்துக்கொட்டியது. மூச்சு முட்டியது. பிடிமானம் தேடி கை, கால்கள் அலைந்தன. திடீரென்று மாலை நான்கரை மணிக்கே வானம் இருட்டத் தொடங்கியது. “இங்கே இப்படிதான், இந்தியாவில் அதிகம் மழைப் பொழியும் இடங்களில் ஒன்று பொதிகை மலை. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 4000 மி.மீட்டர் மழை பொழிகிறது. ஆண்டு முழுவதும் மழைப் பொழிவு இருக்கும். தவிர, இப்போது மழைக்காலம் வேறு. வானம் எப்போது இருட்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. வேகமாக ஏறுங்கள்” என்றார்கள் காவலர்கள்.
சொன்னது போலவே சில நிமிடங்களில் வானம் கொட்டித் தீர்த்தது. எங்கும் நகர முடியாது. மழையிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை. கண்களை இறுக்கி மூடிக் கொண்டோம். மழை சற்றே தணிந்தது. மீண்டும் மலைச் சரிவில் ஏறத் தொடங்கினோம். மழையால் பாதை கடுமையாக வழுக்கியது. தொலைவில் ஓர் அணை தெரிந்தது. அணையின் கரை யில் காட்டு மாடுகளும் மான்களும் மேய்ந் துக்கொண்டிருந்தன. சுமார் ஒன்றரை மணி நேரம் பயணம்.
செங்குத்தான அகத்திய மலையில் ஏறும் பயணக் குழுவினர். | படங்கள்: கா.அபிசு விக்னேசு
நல்லவேளையாக ஒரு சமவெளி வந்தது. சற்றே தொலைவில் முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்ட ஒரு பங்களா. அதன் பெயர் அத்திரி பங்களா. ‘இன்று இரவு இங்கேதான் ஓய்வு’ என்றார்கள். ஆறு மணிக்கே வானம் நன்றாக இருட்டிவிட்டது. மின்சாரம் கிடையாது. டார்ச் லைட் வைத்துக்கொண்டோம். உள்ளேயே சிறிய அடுப்பறை இருந் தது. பங்களாவின் கதவை இறுக்கி சாத்தினார்கள். கதவின் குறுக்கே பெரிய கட்டைகளை பொருத்தினார்கள். ‘எக்காரணம் கொண்டும் கதவை திறக்கக் கூடாது. யானைகள், புலிகள் அதிகம் நடமாடும் பகுதி இது’ என் றார்கள். தூரத்தில் நரிகளின் ஊளையும் யானையின் பிளிறலும் கேட்டது. சிறிது நேரத்தில் ஒரு பெரிய சொம்பு நிறைய சுடச்சுட கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். தொட்டுக்கொள்ள உப்பில் ஊற வைத்த குறு பச்சை மிளகாய். சூடான கஞ்சியை உறிஞ்சிக் கொண்டே ஒன்றரைநாள் பயணத்தை அசைபோட்டோம்.
(தவழ்வாள் தாமிரபரணி)