Published : 15 Apr 2020 08:10 AM
Last Updated : 15 Apr 2020 08:10 AM

இணையக் கல்வியில் திணறும் இந்திய மாணவர்கள்

இணையக் கல்வியில் திணறும் இந்திய மாணவர்கள்

கரோனா நெருக்கடியைத் தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. மாணவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் இணையம் வழியாக வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அசைன்மென்ட்டுகளைக் காலக்கெடுவுக்குள் முடித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. முழுமையான இணையக் கட்டமைப்பு இல்லாத இந்தியாவில் இது பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இந்த இணைய வழி வகுப்புகள், அசைன்மென்ட்டுகளின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பலரால் இணைய வழி வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை; அசைன்மென்ட்டுகளைக் குறித்த நேரத்துக்குள் முடிக்கவும் இயலவில்லை. பிறர் உதவிகளின்றி கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாத மாற்றுத் திறனாளிகளின் நிலைமையோ இன்னும் மோசம். மத்திய பல்கலைக்கழகங்கள் இதற்கெல்லாம் முகங்கொடுக்காமல் இணைய வழி வகுப்புகளைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்று விமர்சனங்கள் எழுகின்றன.

அதிகரிக்கும் குடும்ப வன்முறை

கரோனாவின் பேயாட்டத்தால் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கும் தனிநபர் இடைவெளியும் அமலில் உள்ளன. இதனால், பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் அதிக நேரம் இருக்க நேர்ந்துள்ளது. ஒருவகையில் இது குடும்பத்தினருடன் தங்களுக்கு உள்ள உறவை மேலும் ஆழமாக்கிக்கொள்ள காரணமாக இருக்கிறது. இன்னொருபுறம், அதிக நேரம் இவர்கள் ஒன்றாக இருப்பது குடும்ப வன்முறையை மேலும் அதிகரித்திருக்கிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தக் காலத்தில் கொடுமைகளை எதிர்கொள்ளும் பெண்கள் சட்டரீதியான உதவியை நாடுவதோ தங்கள் பெற்றோரின் உதவியை நாடுவதோ சிரமமாக இருக்கிறது. அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் குடும்ப வன்முறை 30% அதிகரித்திருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகம் இருக்கலாம் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x