Published : 15 Apr 2020 08:07 AM
Last Updated : 15 Apr 2020 08:07 AM

முஸ்லிம்கள் தப்லிக் ஜமாஅத் மாநாட்டை முஸ்லிம்கள் நியாயப்படுத்துவதற்கு இல்லை

புதுமடம் ஜாபர்அலி

தமிழ்நாட்டில் எந்த இயற்கைப் பேரிடர் நடக்கிறபோதும் வரிந்துகட்டிக்கொண்டு கையில் உதவிப் பொருட்களோடு மீட்புப் பணியில் முன்வரிசையில் இருப்பவர்கள் முஸ்லிம்கள். நம்முடைய மரபிலேயே ஊறியிருக்கும் மத நல்லிணக்கத்தின் தன்னெழுச்சியான வெளிப்பாடாகவே இந்த மீட்புப் பணிகள் நடக்கும். சமீபத்திய நினைவலைகளை நெஞ்சுக்குக் கொண்டுவந்தால், சென்னைப் பெருவெள்ளம், கஜா புயல் தாக்குதல் நிவாரணப் பணிகளெல்லாம்கூட மனக்காட்சிக்கு வந்துபோகின்றன. இப்போது நாம் எதிர்கொண்டிருப்பது ஒரு கொள்ளைநோயை; கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியுடன் ஒரு பெரும் போரை நாம் எதிர்கொள்கிறோம். ஆனால், வழக்கமான பிணைப்புச் சூழல் இல்லை. கரோனாவை எதிர்கொள்ள தனிநபர் விலகல் தேவை என்பது சரி; சமூக வெறுப்புக்கு என்ன நியாயம் இருக்கிறது?

ஒரு முஸ்லிமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த துயரத்தை நான் எதிர்கொள்கிறேன். ஏதோ முஸ்லிம்களால்தான் இந்தக் கிருமி இந்தியாவில் பரவுகிறது என்று சொல்லும்படியாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளும் வெறுப்புப் பிரச்சாரங்களும் பெரும் வலியை உண்டாக்குகின்றன. ‘அன்புள்ள சகோதரரே, என்னை எப்படி உங்களால் வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது?’ என்று இப்படியானவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. இந்தத் துயரம், வலிக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாகிவிட்ட தப்லிக் ஜமாஅத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடத் தோன்றுகிறது. அதேசமயம், கிருமிக்கு எப்படி மதம் இல்லையோ, அப்படி முட்டாள்தனத்துக்கும் மதம் இல்லை என்று இந்த உலகுக்கும் சொல்லத் தோன்றுகிறது.

முட்டாள்கள் எங்கும் உளர்

சீனாவைக் கடந்து இத்தாலியும் ஜெர்மனியும் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இந்திய அரசு கரோனாவைத் தடுக்கும் முன்செயல்பாடுகளை எடுத்துக்கொண்டிருந்த நாட்களில் இந்தியாவில் எல்லா மதங்களிலுமே ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் திருவிழாக்கள் நடந்துகொண்டிருந்தன. மத நம்பிக்கை கொண்டவர்கள் என்றாலும், ‘இது மிக ஆபத்தான விஷயமாயிற்றே!’ என்று வெளியிலிருந்து பார்த்தவர்களும் எல்லா மதங்களிலும் இருந்தனர். தப்லிக் ஜமாஅத் மாநாடும் அவற்றில் ஒன்று. என்னைப் போல எவ்வளவோ முஸ்லிம்கள் இந்த முட்டாள்தனத்தை இந்த விஷயம் தெரிந்தது முதலாகச் சாடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

நாடாளுமன்றக் கூட்டம்கூட நடந்துகொண்டிருந்த நாட்கள் அவை, மார்ச் 22 ‘நாடு தழுவிய சுய ஊரடங்கு’க்குப் பிறகே இந்தியச் சமூகம் கரோனாவின் தீவிரத்தை உணரலானது, பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட மாநாடு அது, அழைக்கப்பட்டவர்கள் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோரும் டெல்லிக்கு வந்துவிட்ட நிலையிலேயே மார்ச் 13 அன்று அந்த மாநாடு நடத்தப்பட்டுவிட்டது என்றெல்லாம் பிற்பாடு நியாயங்களை தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் சொன்னாலும், முட்டாள்தனம் அல்லது பொறுப்புக்கெட்டத்தனம் என்று மட்டுமே அதைச் சொல்ல முடியும். ஏனென்றால், மார்ச் 13 அன்றே டெல்லி அரசு ‘இருநூறு பேருக்கு மேலானோர் கூடும் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது’ என்று சொல்லிவிட்டதோடு, ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் அது அறிவுறுத்தியது. இந்த இரண்டு விதிமுறைகளையுமே தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் மீறியிருக்கிறார்கள். சட்டரீதியாக இதைப் பேசுவதைக் காட்டிலும், தார்மீகரீதியாகப் பேசுவது முக்கியம்.

ஜனவரி 30-ல் உலக சுகாதார நிறுவனம், உலகம் முழுவதும் மருத்துவ நெருக்கடிநிலையை அறிவித்தது. முஸ்லிம்களின் புனிதத் தலமான மக்காவுக்கு வருபவர்களை பிப்ரவரியிலேயே சவுதி அரேபியா கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் தப்லிக் ஜமாஅத் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த மாநாட்டையே முன்கூட்டி ரத்துசெய்திருக்க வேண்டும். இப்போது அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்; 10 பேர் இறந்திருக்கின்றனர். முட்டாள்தனம் இதோடும் முடியவில்லை. இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற சுகாதார ஊழியர்களையும், அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்ற காவல் துறையினரையும் இவர்களில் சிலர் எதிர்கொண்ட விதம் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கும் மருத்துவப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து பின்வாங்கும் விதமாக சிலர் நடந்துகொண்டதாக வந்த செய்திகளும் முகம் சுளிக்க வைத்தன. சுயாதீனமான மூளை உள்ளவர்கள் எவரும் இவற்றில் எதையும் நியாயப்படுத்த முடியாது.

முஸ்லிம்கள் ஒத்த சிந்தனையாளர்களா?

இந்தியாவில் ஏறத்தாழ இருபது கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்களை மையமாக வைத்து இயங்கும் அமைப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் உண்டு; மொத்தமாக இந்த அமைப்புகள் இடையே ஆயிரம் முரண்பாடுகள் உள்ளன. அமைப்புகள் இடையிலேயே இவ்வளவு வேறுபாடுகள் என்றால், இந்த அமைப்புகளுக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் இடையே மட்டும் எப்படி ஒரே சிந்தனை இருக்க முடியும்? ஒரு மதத்தின் பெயரால், ஏதோ ஒரு சிறு அமைப்பு செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? நான் மட்டும் அல்ல; எனக்குத் தெரிய பெரும்பான்மை முஸ்லிம்கள் தப்லிக் ஜமாஅத் மாநாடு எல்லா வகையிலும் முட்டாள்தனமானது என்றே நினைக்கிறோம்; அதை நியாயப்படுத்தும் ஒருவர் மத அடிப்படைவாதியாகத்தான் இருக்க முடியும்; அப்படி சிலர் இருக்கிறார்கள் என்றால், அவர்களைப் போன்றவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் கரோனா வரலாற்றிலேயே ‘பெரும் தொற்றாளர்’ என்று சொல்லப்படுபவர் பல்தேவ் சிங். சீக்கிய மத குருவான இவர் கரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நாட்களில் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பயணித்துவந்தவர். இந்தியா திரும்பிய வேகத்தில் பஞ்சாபில் கிராமம் கிராமமாகச் சென்றார். கரோனா தொற்றால், பல்தேவ் சிங் இறந்தபோது, அவரோடு தொடர்பில் இருந்த கிட்டத்தட்ட 15,000 பேரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தது இந்திய அரசு. பகுத்தறிவுள்ள எந்தச் சீக்கியரும் பல்தேவ் சிங்கின் முட்டாள்தனத்தை நியாயப்படுத்த மாட்டார்; அதேபோல, ஒரு மத குரு செய்த முட்டாள்தனத்தின் விளைவாக ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் நாம் வேறுபடுத்திப் பார்ப்பதும் அறிவு நாணயமுள்ள செயல்பாடு அல்ல. இதே நியாயம் முஸ்லிம்களுக்கும் பொருந்தும்தானே!

- புதுமடம் ஜாபர்அலி, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x