

கரோனாவுக்கென்று ஒரு இணையதளம்
இன்று உலக அளவில் பெரும்பாலானோரும் இணையத்தில் தேடுவது கரோனா குறித்துதான். கரோனா பற்றிய தரவுகளைத் தருவதில் முன்னணியில் இருக்கும் இணையதளங்களில் ஒன்று வேர்ல்டோமீட்டர் (www.worldometers.info). நாடுகள் வாரியாகவும் ஒட்டுமொத்தமாகவும் கரோனா பாதிப்புக்கு உள்ளானோர், மரணமடைந்தோர், குணமடைந்தோரின் எண்ணிக்கையை உடனுக்குடன் இந்த இணையதளம் வழங்குகிறது. கூடவே, ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன, எத்தனை பேரின் நிலை மிக மோசமாக இருக்கிறது போன்ற முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது. சமீபத்தில் ஹேக்கர்கள் இந்த இணையதளத்தில் ஊடுருவியதால் வாடிகனில் நிறைய பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்ற பொய்யான தகவல் பரவியது. அதையடுத்து பலரும் பதைபதைப்புக்குள்ளானார்கள். குறுகிய நேரத்துக்குள் இணையதளம் சரிசெய்யப்பட்டது.
நானே ராஜா, நானே மந்திரி
தென்னமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரேசிலிலும் கரோனா தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இப்படியிருக்க, பிரேசில் அதிபர் ஜெயர் போல்சொனாரோவின் போக்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஒரு மருத்துவமனைக்கு அவர் சென்றபோது பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “ஐஸ்கிரீம் சாப்பிட வந்திருக்கிறேன்” என்றிருக்கிறார். “நான் கருவுற்றிருக்கிறேனா என்று பரிசோதிக்க வந்திருக்கிறேன்” என்று நக்கலடித்திருக்கிறார். நேராக மருத்துவமனையின் பேக்கரி சென்ற அவர் குளிர்பானப் புட்டியை எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார். அதுமட்டுமல்ல, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் பிரேசிலின் சுகாதாரத் துறை அமைச்சர் லூயிஸ் மாண்டேட்டாவுக்கும் இவர் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இப்படிப் பொறுப்பற்றதனமாக பிரேசில் அதிபர் நடந்துகொண்டிருப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.