

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கரோனாவை எதிர்கொள்ள முக்கியமான உத்தியாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது இதைத்தான்: ‘பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை...’
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஏப்ரல் 12 புள்ளிவிவரப்படி, இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 139.25 என்ற அளவிலேயே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 3 நிலவரப்படி, தென் கொரியாவில் பத்து லட்சம் பேரில் 9,268 பேருக்கு என்ற அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன; ஒவ்வொரு நாளும் 20,000 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தென் கொரியாதான் முதன்முதலில் நாடெங்கும் பரிசோதனை மையங்களை அதிக அளவில் நிறுவிய நாடு. 650 மையங்களுக்கு மேல் அந்நாட்டில் செயல்படுகின்றன. கொரியாவைப் போல் 32 மடங்கு பெரிய நாடான இந்தியாவிலோ, 30% மையங்களே உள்ளன.
மூன்று அமைப்புகள்
இந்தியாவில் கரோனா பரிசோதனைகளை மூன்று அமைப்புகள் செய்துவருகின்றன; இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்), புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட், சிடிஎஸ்சிஓ ஆகியவையே. ஏற்கெனவே ஐசிஎம்ஆரின் ஒப்புதல் பெற்ற பரிசோதனைக் கூடத்தில் தரம் உறுதிசெய்யப்பட்ட கரோனா பரிசோதனை உபகரணங்களை உற்பத்திசெய்ய உரிமம் கொடுக்கும் வேலையை மட்டுமே சிடிஎஸ்சிஓ செய்துவருகிறது. ஐசிஎம்ஆருக்கோ புதிய பரிசோதனைக் கூடங்களுக்குச் சான்றிதழ் வழங்குவது, புதிய பரிசோதனை உபகரணங்களின் தரத்தை உறுதிசெய்வது, அவற்றின் தரத்தை நிர்ணயிப்பது ஆகிய பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. மார்ச் 25 வரை, தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் மட்டும்தான் கரோனா பரிசோதனை உபகரணங்களின் தரத்தைச் சரிபார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரே அமைப்பாக இருந்தது.
பரிசோதனைகளின் அளவை அதிகப்படுத்த, ஏராளமான பரிசோதனை மையங்கள் இருப்பதோடு, அதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்களும் எளிமையாகக் கிடைக்க வேண்டும். இதுவரை 228 பரிசோதனை மையங்களுக்கு மட்டுமே ஐசிஎம்ஆர் அனுமதி கொடுத்திருக்கிறது. அதிலும் பாதியளவுக்குத்தான் பரிசோதனை உபகரணங்கள், சோதனைப் பொருட்களை வழங்கிவருகிறது.
ஏன் இந்த மந்த நிலை?
கரோனா நோய்த் தொற்றில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலும் போதுமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், கூடுதல் பரிசோதனை மையங்கள் வேண்டுவோர் அதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம் என்று ஐசிஎம்ஆர் சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டவுடன், இருமடங்கு மையங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தமிழ்நாடுதான்.
தற்போது நிறுவப்பட்டுள்ள பரிசோதனை மையங்களிலேயே நாம் 36% அளவுக்குத்தான் பயன்படுத்துகிறோம். இதற்கு, நம்மிடம் போதிய பரிசோதனை உபகரணங்கள் இல்லாததே காரணம். உபகரணங்களின் தரக்குறியீட்டை மிக அதிக உயரத்தில் வைத்திருக்கிறது ஐசிஎம்ஆர். மாதிரிகளில் வைரஸ் தொற்று இருக்கிறதா, இல்லையா என்ற இரண்டு நிலைகளையும் 100% சரியாகத் தெரிவிக்கும் பரிசோதனை உபகரணங்களுக்கே அனுமதி வழங்கப்படுகின்றன. அமெரிக்க எப்டிஏ மற்றும் ஐரோப்பிய சிஇ சான்றிதழ் பெற்ற கருவிகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலக அளவில் 141 வகையான மூலக்கூறு அளவிலான பரிசோதனை உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், இதுவரை 21 உபகரணங்களை மட்டுமே ஐசிஎம்ஆர் ஆய்வுசெய்துள்ளது. அதில் 5 மட்டுமே தேர்வு பெற்றுள்ளன. இவற்றில் 3 நிறுவனங்கள் உலக அளவில் புகழ்பெற்றவை. அவற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் ஆர்டர்கள் வருவதால், இந்தியாவுக்குக் குறுகிய காலத்தில் உரிய பரிசோதனை உபகரணங்களை அனுப்ப முடியவில்லை.
மலிவான மாற்றுப் பரிசோதனை
கரோனாவுக்கு எதிரான போரில் தென் கொரியா பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதற்கான காரணம், அது உள்ளூரில் தயாரித்த பரிசோதனை உபகரணங்களைப் பயன்படுத்தியதால்தான். தற்போது உலக அளவில் இந்த உபகரணங்களே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா தனக்கான பரிசோதனை நெறிமுறைகளை சொந்தமாக வகுக்காமல் அமெரிக்க, ஐரோப்பிய அனுமதிகளை மட்டுமே நம்பியிருப்பது சரியல்ல. ஒரு பரிசோதனைக்கு ரூ.4,500-க்கு மேல் கட்டணம் வைக்கக் கூடாது என்று ஐசிஎம்ஆர் விதித்துள்ள கட்டணக் கட்டுப்பாடு இருந்தாலும்கூட, இதைவிட விலை மலிவான மாற்றுப் பரிசோதனை முறைகள் இந்தியாவுக்குத் தேவை. மார்ச் 25-ல் ஐசிஎம்ஆர் தன் கட்டுப்பாட்டை லேசாகத் தளர்த்தி, பரிசோதனை உபகரணங்களைச் சோதித்து அனுமதி வழங்க மூன்று மையங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதில், தென்னிந்தியாவில் ஒரு மையமும் இல்லை. இத்தனைக்கும் மருத்துவக் கருவிகள் மற்றும் பரிசோதனைகளில் திறன் பெற்ற நிறுவனங்கள் ஏராளமாக நிறைந்துள்ள பகுதி தென்னிந்தியா; குறிப்பாக, தமிழ்நாடு. மேலும், ஏப்ரல் 12 தேதியிட்ட அறிவிப்பில், ஐசிஎம்ஆர் இறுதியாக இந்தியாவின் தென்னிந்தியாவில் ஒரு மையத்தைச் சேர்த்தது. அதுவும் ஹைதராபாதில்.
கெடுபிடிகளைத் தளர்த்திய டிரம்ப்
அமெரிக்க அரசும்கூட, மார்ச் 13 அன்று மருத்துவக் கருவிகள் மற்றும் பரிசோதனை நெறிமுறைகள் தொடர்பான தனது அதிகாரங்களைத் தளர்த்திக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களும் சொந்தமாக புதிய பரிசோதனை உபகரணங்களை உருவாக்கிக்கொள்ளவும் இதர உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்யும் வகையில் தமக்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளவும் டிரம்ப் அனுமதி அளித்திருக்கிறார். இத்தகைய சுதந்திரம் கொடுக்கப்பட்ட பின்னரே, அமெரிக்காவில் பரிசோதனைகள் இருமடங்காகின.
இந்திய அரசு, ஐசிஎம்ஆர் மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை உடனே களைய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் சுகாதாரத் துறையும் தமக்கான நெறிமுறைகளை வகுத்துக்கொள்ள முழு அனுமதி வழங்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே நம்மால், கரோனா வைரஸைப் பரிசோதித்து, தனிமைப்படுத்தி, பின்தொடர்ந்து அதன் பரவலை வெற்றிகரமாகத் தடுக்க முடியும்.
- மோகன் குமாரமங்கலம், செயல் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி.
தொடர்புக்கு: mohan2k4@gmail.com