

கரோனா பரவாமல் தடுக்க உதவும் பாதுகாப்புக் கவசங்களானது போதிய அளவில் இல்லாததால் ‘தமக்கும் கரோனா வந்துவிடும்’ என்ற பயத்தோடேயே மருத்துவப் பணியாளர்கள் பலரும் பணியாற்ற வேண்டியிருக்கிறது. கரோனா நோயுள்ளவர்களை அருகிலிருந்து கவனிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதிப்பு அதிகம். இந்த ஆபத்தைத் தவிர்க்கவே, பேரிடர் மேலாண்மையின்போது அணியும் ‘பிபிஇ’ (PPE) எனும் பாதுகாப்பு உடைகளை அவர்கள் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
‘பிபிஇ’ கிட் என்பது உடல் முழுவதையும் மூடும் அங்கி, ‘என்95’ முகக்கவசம் அல்லது முகத்தை முழுவதுமாக மூடும் கவசம், காப்புக் கண்ணாடி, கையுறை, ரப்பர் காலணி ஆகிய ஐந்து முக்கியப் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியது. இந்தியாவில் மொத்தமே 20 நிறுவனங்கள்தான் இவற்றைத் தயாரிக்கின்றன. பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்துதான் இவை இறக்குமதி செய்யப்படுகின்றன. ‘பிபிஇ’ தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்புத் தலைவர் சஞ்சீவ், மத்திய சுகாதாரத் துறையினரைக் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்தார். அப்போது தகவல் எதுவும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆனால், ரயில்வே மருத்துவமனை, ராணுவ மருத்துவமனை உள்ளிட்ட பலதரப்பிலிருந்து அப்போதே இவற்றுக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கிவிட்டன. மத்திய அரசின் வழிகாட்டுதல் இல்லாமல் இவற்றைத் தயாரித்தால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் தயாரிப்பாளர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தியாவின் மொத்தத் தேவை 7,25,000 ‘பிபிஇ’ கிட்டுகள். இந்தியாவால் தினமும் 25,000 ‘பிபிஇ’ கிட்டுகளே தயாரிக்க முடியும். எனவே, உடனே இதன் தயாரிப்புகளை முடுக்கிவிட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, மார்ச்18-ல் இவற்றைத் தயாரிக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், மார்ச் 24-ல் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஆரம்பநிலையிலேயே முடங்கிப்போனது. வெளிநாட்டு வணிகத்துக்கும் வழியில்லாமல்போனதால் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. “மத்திய அரசு முன்யோசனை இல்லாமல் நடந்துகொண்டதால் ஏற்பட்ட விளைவு இது” என்கிறார் சஞ்சீவ்.
மருத்துவர்கள் தங்களையும் கரோனா பாதிக்கக்கூடும் என்று தெரிந்தே இந்த நோய்க்களத்தில் போராட இறங்குகிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தால்தான் மனதைரியத்துடன் கடமை ஆற்ற முடியும். மேலும், ஒரு மருத்துவருக்கோ மருத்துவப் பணியாளருக்கோ கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவரை மட்டுமல்லாமல் அவருடன் தொடர்புகொண்டிருந்த அனைத்துப் பணியாளர்களும் நோயாளிகளும் 2 வார மருத்துவக் கண்காணிப்பில் வைக்க வேண்டி வரும். இது நம் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். ஏற்கெனவே போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாத சூழலில் இதற்குக் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டியது மிகமிக அவசியம்.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com