Published : 08 Apr 2020 06:21 AM
Last Updated : 08 Apr 2020 06:21 AM

அமெரிக்கா எப்படி ஜனநெரிசலைத் தவிர்க்கிறது?

அமெரிக்கா எப்படி ஜனநெரிசலைத் தவிர்க்கிறது, தனிமனித இடைவெளியைப் பராமரிக்கிறது? இந்தக் கேள்வி எல்லா நாடுகளைச் சேர்ந்தவர்களையுமே ஆக்கிரமித்திருக்கிறது. ஏனென்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பெரிய கவனம் எடுத்துக்கொள்பவர்கள் அமெரிக்கர்கள். காரோனா விஷயத்தில் அமெரிக்கச் சமூகம் கொஞ்சம் சறுக்கிவிட்டது என்றாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டிருக்கிறது. பிரிட்டன், பிரான்ஸைப் போலவோ இந்தியாவைப் போலவோ நாடு தழுவிய ஊரடங்கு அமெரிக்காவில் இல்லை; ஆனால், ‘வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்’ (Safer at Home) எனும் உத்தரவு இங்கே பல மாகாணங்களிலும் இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஊரடங்குச் சூழலை மக்கள் பொறுப்பாக்குவதுதான்!

பொருளாதாரச் செயல்பாட்டையோ தனிமனிதச் சுதந்திரத்தையோ முழுமையாக முடக்கிவிடாமல், வீட்டிலேயே மக்களை இருக்கச்செய்யும் நடவடிக்கை என்று இதைச் சொல்லலாம். இப்போது நான் நினைத்தால், வெளியே நடைப்பயிற்சிக்குச் செல்லலாம். காவலர் என்னை அடிக்க மாட்டார். ஆனால், இப்படி நான் அவசியம் வெளியே செல்லும் சூழல் உருவானால் முகக்கவசம் அணிந்துகொண்டு செல்வதோடு, குறைந்தது அடுத்த மனிதரோடு ஆறடி இடைவெளியைப் பராமரிக்கும்படி அமெரிக்க அரசாங்கம் எனக்குச் சொல்கிறது. நான் இந்த வார்த்தைகளை மதிக்கிறேன்.

பலமான மாகாணங்கள்

இந்தியா மாதிரி அல்லாமல், வலுவான கூட்டாட்சி நாடு அமெரிக்கா. மாகாண அரசுகளுக்கு அதிகாரம் அதிகம். ஆக, மாகாண ஆளுநர்களுடன் (முதல்வர்களை இங்கே ஆளுநர்கள் என்று குறிப்பிடுவார்கள்) அதிபர் ட்ரம்ப் ஆலோசனை கலக்கிறார். மாகாண அரசுகளே முடிவுகளை எடுக்கின்றன. அன்றாடம் அதிபர், ஆளுநர் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்புகள் நடக்கின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்கள். மக்களுக்கு இதிலே ஒரு நிம்மதி.

கரோனாவை எதிர்கொள்வதற்குப் பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததோடு, அத்தியாவசியப் பணிகளில் இல்லாத நிறுவனங்கள், செயல்பாடுகள் எல்லாவற்றையுமே கட்டுப்படுத்தும் உத்தரவுகளைப் பிறப்பித்தன மாகாண அரசுகள். விளைவாகப் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் எல்லாமே இணையத்தின் வழி செயல்படலாயின; வீட்டில் இருந்தபடி பணியாற்றலானார்கள். திரையரங்குகள், வணிக வளாகங்கள் எல்லாம் மூடப்பட்டன. அனைத்து வகைப் பொதுக் கூட்டங்களும் கருத்தரங்குகளும் ரத்துசெய்யப்பட்டன. தெருவில் பத்துப் பேருக்கு மேல் கூடுவது தடுக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கனிக் கடைகள், உணவகங்கள் போன்றவை திறந்திருக்கின்றன. ஆனால், அவர்களுமே சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். நாளின் 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகள்கூட சில மணி நேரம் மட்டுமே திறக்கப்படுகின்றன. அதிலும் இரண்டு மணி நேரம் வயதானவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. உணவகங்களில் எடுப்பு உணவு மட்டுமே வழங்குகிறார்கள்.

வீட்டில் இருந்தபடி வழிபாடு

அமெரிக்க வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு முக்கியமான இடம் உண்டு. உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுவிட்டாலும், சாலைகளில் நடைப்பயிற்சிக்குத் தடை இல்லை. ஆக, சாலைகளில் தங்கள் செல்லப் பிராணிகளோடு நடந்துசெல்வோரை அன்றாடம் பார்க்க முடிகிறது. ஆனால், மக்கள் ஆறடி இடைவெளியை முறையாகப் பராமரிக்கின்றனர். சாலைகளை நிரப்பியபடி செல்லும் கார்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

கரோனாவுக்கு முன்னதாகவே ‘வீட்டிலிருந்தபடி பணி’ எனும் கலாச்சாரம் அமெரிக்காவில் பிரபலம். ஆகையால், அதற்கேற்ற இணைய வசதி சிறப்பாகவே இருக்கிறது. வீட்டிலிருந்தபடி பணியாற்றுவதைத் திறம்பட நிர்வகிக்க நிறைய செயலிகளும் வந்துவிட்டன. விளைவு என்னவென்றால், கிட்டத்தட்ட எல்லா வேலைகளுமே ‘வீட்டிலிருந்தபடி பணி’ கலாச்சாரத்துக்கு இன்று மாறியிருக்கின்றன.

பிள்ளைகள் ‘ஜூம்’ எனும் செயலி மூலம் காணொலி வழியே கற்கிறார்கள். ஆசிரியர் இதன் வழி உரையாடுகிறார். பின்னர், கூகுள் டாக்குமென்ட், கூகுள் பவர்பாயின்ட் இணைப்பை அனுப்புகிறார். என் மகள் அதை ஐபேடில் படித்து, அதில் உள்ள வீட்டுப் பாடங்களை செய்து முடித்துத் தரவேற்றுகிறார். வகுப்பறையில் உரையாடுவதுபோல மாணவர்கள் இதிலும் உரையாடுகிறார்கள். பாட்டு, பரதம் வகுப்புகளும்கூட இப்படி நடக்கின்றன. கல்லூரிகளும் இப்படித் தங்களுக்கு என்று தனி முறையில் இயங்குகின்றன. சில தேர்வுகள்கூட இணையம் வழி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

இங்கே வங்கிப் பணிகள்கூட இப்படியாகிவிட்டன. மக்கள் இணையம் வழி பரிவர்த்தனை செய்கிறார்கள். காசோலையைக் கணக்கில் வைக்க இப்போது வங்கியின் செயலி உதவுகிறது. எனக்குத் தெரிய மருத்துவர்கள், காவல் துறையினர், அரசு அதிகாரிகள்... இப்படித் தவிர்க்கவே முடியாத சில பிரிவினர் மட்டுமே அலுவலகம் செல்கிறார்கள்.

வங்கிப் பணியையும்கூட வீட்டிலிருந்தபடி செய்கிறார்கள். மிக முக்கியம், எல்லா மத வழிபாடுகளுமே இணைய வழி ஆகிவிட்டன; நான் வசிக்கும் ஊரில் இந்து கோயில் மூடப்பட்டுள்ளது. ஆனால், கோயில் அர்ச்சகர் தினமும் மாலை கோயிலுக்குச் சென்று பூஜை செய்கிறார். ‘ஃபேஸ்புக் லைவ்’ வழி இது நேரலை ஆகிறது. பக்தர்கள் கண்டுகளிப்பதோடு, தங்கள் பிரார்த்தனைகள், பக்தி முழக்கங்களைப் பின்னூட்டமாக இடுகிறார்கள்.

நண்பரின் அனுபவம்

ஒரு நண்பரின் அனுபவம் இது. ஜனநெருக்கடி மிக்க நியூயார்க் நகரத்துக்கு விமானத்தில் வந்து இறங்கினார் அவர். அங்குள்ள ‘சப்வே’ (மெட்ரோ ரயில்) இன்னும் இயங்குகிறது. பத்து பேர் அத்தியாவசியமாக வெளியே செல்வதாக இருந்தாலும் அவதிப்படக் கூடாது என்று நினைக்கிறது அரசாங்கம். ஆனால், நண்பர் புளோரிடாவுக்குச் செல்ல வேண்டும்.

பெருவிலிருந்து நியூயார்க் வந்தவருக்கு அங்கிருந்து புளோரிடா செல்ல விமானம் கிடைக்கவில்லை. இப்படி ரத்துசெய்யப்பட்ட பயணங்களுக்கான கட்டணத்தை வாடிக்கையாளரிடம் திரும்பச் செலுத்த வேண்டும் என்று மட்டுமே அதிபர் ட்ரம்பால் உத்தரவிட முடிந்தது. புளோரிடா செல்ல கார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டிருக்கிறார் நண்பர். ‘நீங்களே காரை ஓட்டிச் செல்ல வேண்டும்; புளோரிடா விமான நிலையத்தில் காரை விட்டுவிடலாம்; ஆனால், ஆயிரம் டாலர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். பெரும் தொகை இது. 2,000 கிமீ தூரத்தை 16 மணி நேரத்தில் கடந்திருக்கிறார். ஆயிரம் டாலர் கொடுத்தாலும் வண்டி ஓட்ட இன்று ஆள் இல்லை என்பதுதான் முக்கியமான செய்தி என்றார்.

அரசாங்கம் எல்லாவற்றையுமே மறிக்கவில்லை. ஆனால், மக்களே விழிப்புணர்வோடு தங்களைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள். உயிர்தானே எல்லாவற்றைவிடவும் முக்கியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x