

காங்கிரஸ் கட்சி மக்களை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகவே காங்கிரஸ் ஆட்சியின் மீது பரவலாகவும் வெளிப்படையாகவும் அதிருப்தி நிலவிவந்தது. ஊடகங்கள் இதைப் பற்றிப் பேசின. காட்சி ஊடகங்களின் விவாத அரங்கங்களும் அச்சு ஊடகங்களின் பக்கங்களும் பற்றி எரிந்தன.
ஆனால், காங்கிரஸிலிருந்து இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கோ பொறுப்பேற்பதற்கோ யாரும் முன்வரவில்லை. செய்தித் தொடர்பாளர்களின் ஆயத்த பதில்கள் மட்டுமே மக்களுக்குக் கிடைத்தன. யாரை நம்பி மக்கள் வாக்களித்தார்களோ அவர்கள் அமைதியாக இருந்தார்கள். இந்த இரட்டை வேடத்தை மக்கள் துளியும் ரசிக்கவில்லை.
செய் அல்லது செத்துமடி
மறுபுறம், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல எதிர்ப்புகளையும் இழப்புகளையும் பொருட்படுத்தாமல் மோடிதான் தங்கள் தளபதி என தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது. செய் அல்லது செத்து மடி என்னும் அணுகுமுறை இது. இதற்கு மாற்றாக காங்கிரஸ் வலுவான முறையில் தனது வியூகத்தை அமைத்திருக்க வேண்டும். மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தலைவரை வெளிப் படையாக முன்னிறுத்தியிருக்க வேண்டும்.
பா.ஜ.க. அல்லாத அனைத்துக் கட்சிகளுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி அமைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், கட்சி இவற்றில் எதையுமே செய்யத் தவறியது. களத்தில் தலைமை ஏற்ற வரும் தனக்குப் பதவியில் ஆசை இல்லை என்பதுபோலப் பேசினார். 50 ஆண்டுகளாக நாட்டை ஆண்டுவரும் காங்கிரஸிடமிருந்து இப் படி ஒரு சாமியார்த்தனமான நிலைப்பாட்டை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அதை நம்பவும் இல்லை.
ஊடகங்களின் பங்கு
மோடியைக் கடுமையாக எதிர்ப்பதன் மூலமும் மோடியையே தேர்தலின் மைய சக்தியாக ஊடகங்கள் மாற்றின. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஊடகங்களும் அறிவுஜீவிகளும் மோடிக்கு அளவுக்கதிகமான முக்கியத் துவம் கொடுத்துவந்தார்கள். அரசியல் களத்தில் எதிர்மறைப் பிரச்சாரமும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரும் என்பதால் இதுவும் மோடிக்குச் சாதகமாயிற்று.
ஒருபுறம் செயலற்ற எதிரி. மறுபுறம் எல்லாமுனைகளி லிருந்தும் கவனம் பெற்றுவரும் ஒரு ஆளுமை. இவற்றுக்கு மத்தியில் மாற்றம் தேடும் மக்கள். இந்நிலையில் மக்களின் தேர்வு என்னவாக இருக்குமோ அதுதான் இந்தத் தேர்தலில் நடந்திருக்கிறது.
ஜனநாயக நாட்டில் மக்களுடனான தொடர்பை அறுத்துக்கொள்ளும் எந்த சக்தியும் தன் வலிமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதே இந்தத் தேர்தல் தரும் மிகப் பெரிய பாடம். அளவுக்கதிகமான எதிர்ப்பும் ஒரு நபரின் நாயக பிம்பத்துக்கு வலு சேர்க்கும் என்பது துணைப் பாடம். முதலாவது பாடம் கட்சிகளுக்கு. இரண்டாவது பாடம் அறிவுஜீவிகளுக்கு.
- அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@kslmedia.in