Published : 26 Mar 2020 07:02 AM
Last Updated : 26 Mar 2020 07:02 AM

வீட்டிலிருந்தபடி சிறப்பாகப் பணியாற்றுவது எப்படி?

இப்போது பலருக்கும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவகையில் அனுகூலம் என்றாலும் ஒருவகையில் சிரமம் தரக் கூடியது. நான் கடந்த பன்னிரண்டு வருடங்களாகப் பல்வேறு காலகட்டங்களில் வீட்டிலிருந்து வேலை செய்துவருகிறேன். இப்போதும் என் சொந்தத் தொழிலை வீட்டிலிருந்துதான் செய்கிறேன். என் அனுபவத்தில் கிடைத்த சில பாடங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

உங்கள் அலுவலகம் மட்டும்தான் இடம் மாறி இருக்கிறது. வேறு எதுவும் இல்லை. காலையில் எழுந்திருப்பது, காபி குடிப்பது, செய்தித்தாள் படிப்பது என்று எதுவும் மாறவில்லை. வீட்டில்தானே வேலை என்று தாமதமாக எழுந்திருக்காதீர்கள். வழக்கமாக காபி குடிப்பதற்கு ஒதுக்கும் நேரத்தைவிட அதிகம் செலவிடாதீர்கள். மிச்சமாகும் பயண நேரத்தை வேலை செய்வதற்கோ அல்லது புத்தகம் படிப்பதற்கோ ஒதுக்குங்கள். காலையில் டிவி பார்க்காதீர்கள்.

வேலை நேரம் 9 மணி என்றால் வீட்டிலும் 9 மணிதான். ஒரு நிமிடம்கூட தாமதிக்க வேண்டாம். உங்கள் அலுவலக உடையிலேயே வேலை செய்ய உட்காருங்கள். ஷேவ், தாடியை டிரிம் செய்வதில் எந்த மாற்றமும் வேண்டாம். படுக்கையறைக் கட்டிலில், ஹாலில், டிவி முன்பாகவெல்லாம் வேலை செய்யாதீர்கள். ‘வேலை இடம்’ என்று ஒரு மூலையை ஒதுக்குங்கள். அங்கே மேஜை, நாற்காலியுடன் உட்கார்ந்துகொள்ளுங்கள். அங்கே நீங்கள் அமர்ந்திருந்தால் அலுவகத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வீட்டில் யாரும் உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. உங்களிடம் பேச வேண்டுமானால் இடைவேளையில் பேசலாம். மெடிக்கல் எமர்ஜென்சி ஏதாவது நடந்தால் அது விதிவிலக்கு.

காபி, மதிய உணவு என இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நேரங்களில் உங்கள் ‘வேலை இட’த்திலிருந்து எழுந்துவிடுங்கள். ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்றவற்றைத் தடுப்பதற்கு வசதிகள் இருக்கின்றன. மதியம் தூக்கம் வந்தால் கட்டிலில் தூங்க வேண்டாம். வேலையிடத்திலயே மேசையில் சாய்ந்துகொள்ளுங்கள். அப்போதுதான் ரொம்ப நேரம் தூங்க முடியாது. குற்றவுணர்வு மேலிட்டு சீக்கிரம் எழுந்துவிடுவீர்கள்.

அதுதான் வீட்டிலேயே வேலை செய்கிறோமே என்று கடைக்குப் போவது, செல்லப் பிராணிகளுடன் அல்லது குழந்தைகளுடன் விளையாடுவது கூடாது. வேலை நேரத்தில், வேலை இடத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும்போது வீட்டில் யார் கண்ணுக்கும் தெரியக் கூடாது. வழக்கமாக வேலை முடியும் நேரம் கண்டிப்பாக வேலை இடத்தை விட்டு எழுந்துவிடுங்கள். தெருமுனை வரை ஒரு நடை போய்விட்டுத் திரும்பிவிடுங்கள். அலுவகம் முடித்து வீடு திரும்பிய உணர்வு வந்துவிடும். அதன் பின், கைலிக்கோ அரை டிராயருக்கோ மாறிக்கொள்ளலாம். அதற்குப் பிறகும் வேலை தொடரலாம். நிறைய ஐடி மக்களுக்கு மாலைதான் அமெரிக்கர்களுடன் பேச வேண்டியிருக்கும். அதை வழக்கமாக வீட்டில் எங்கிருந்து எடுத்துக்கொள்வீர்களோ அப்படியே செய்யலாம்.

இவற்றைப் பின்பற்றுவது பெருமளவுக்கு ஒழுக்கத்தைக் கொடுக்கும். கொஞ்சம் அங்கே இங்கே இந்த விதிகளில் சறுக்கல்கள் இருக்கலாம். பரவாயில்லை. ஆனால், விதிகள் இருந்தால்தான் அவற்றை மீறினோம் என்பதாவது தெரிந்து நேர்செய்துகொள்ளலாம். ஒன்றுமே இல்லை என்றால் விரைவில் நம் நேரம் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல்போய்விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x