

விலைவாசிபோல தேர்தலும்
பொதுவாக, அமெரிக்க அதிபர் தேர்தல்களில்தான் அதிக அளவு பணம் செலவுசெய்யப்படும். கடந்த, 2012 அதிபர் தேர்தலில் மட்டும் ரூ.35 ஆயிரம் கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டது. அதற்கு அடுத்தாற்போல அதிகச் செலவு செய்யப்பட்டது 16-வது மக்களவைத் தேர்தலில்தான். தேர்தல் ஆணையம் மட்டுமே, ரூ.3,500 கோடி செலவு செய்திருக்கிறது என்றால் அரசியல் கட்சிகள் எத்தனை செலவுசெய்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம். 2009 மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ரூ. 1,400 கோடியைச் செலவுசெய்தது. 1952 தேர்தலில் செலவான தொகை ரூ.10.45 கோடிதான்! வெற்றிக் கனியைப் பறிக்க அரசியல் கட்சிகள் செலவுசெய்த தொகை, ரூ. 35 ஆயிரம் கோடியை நெருங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட தேர்தல்
இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்களில் மிக நீண்ட காலம் நடந்த இரண்டாவது தேர்தல் இது. இதற்கு முன், அதிக நாட்கள் நடைபெற்ற தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்களுக்கு நடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த முதல் பொதுத் தேர்தலான இந்த ஜனநாயகத் திருவிழாவில் வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடி. தற்போது நடந்து முடிந்த 16-வது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதை விட 8 மடங்கு அதிகம். அதாவது, 81.45 கோடி.
வெறுப்பைக் கக்கிய குரல்கள்
இந்தத் தேர்தலில் தனிமனிதத் தாக்குதல், தங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள்மீது துவேஷம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சார உரைகளிலும் பிற சந்தர்ப்பங்களிலும் பிறர்மீது வெறுப்பைக் கக்கினர். பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங்,‘‘மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லட்டும்” என்று முழங்கினார். அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. குஜராத்தில் சொத்து வாங்கிய முஸ்லிம் தொழிலதிபரை அந்த இடத்திலிருந்து விரட்ட வேண்டும் என்று பேசிய விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், மோடி குறித்து துவேஷமாகப் பேசிய காங்கிரஸ் எம்.பி. இம்ரான் கைதுசெய்யப்பட்டார்.
அமெரிக்க பாணி தேர்தல்
அமெரிக்க தேர்தலில் பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள்தான் பிரதமரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த முறை பா.ஜ.க. தரப்பில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டார். அமெரிக்க அதிபர் வேட்பாளர் பாணியில் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பிரச்சாரத்தில் மோடி ஈடுபட்டார். 3டி ஹாலோகிராம் தொழில்நுட்பம் முதல் டீக்கடையில் ‘வீடியோ மாநாடு' என்று பல முறைகளும் பயன்பட்டன.
சமூக வலைத்தளங்களின் பங்கு
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் சமூகம் தொடர்பான கருத்துகளுடன் அரசியல் விவாதங்களும் சூடுபிடித்து வந்தன. தங்கள் அபிமானத்துக்குரிய கட்சிகள், அவற்றின் தலைவர்கள் குறித்த தங்கள் எண்ணங்களை வெளியிட்ட தனிநபர்கள் முதல் அரசியல் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டு பக்கா தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள் வரை பலர் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினர். அத்துடன் அரசியல் தலைவர்கள் நேரடியாகவே தங்கள் கருத்துகள், தேர்தல் பிரச்சாரப் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டுத் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக்கொண்டனர். டிஜிட்டல் ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய மட்டும் அரசியல் கட்சிகள் ரூ. 500 கோடி வரை செலவு செய்திருப்பதாக அசோசேம் அமைப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகள் குறிவைத்தது இளம் வாக்காளர்களைத்தான். குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள்.
இளம் வாக்காளர்கள்
இந்திரா காந்தியின் மரணத்துக்குப் பின் 1984-ல் நடந்த பொதுத் தேர்தலில் 64.01% வாக்குகள் பதிவானதுதான் இதுவரை அதிகபட்சமாக இருந்தது. இந்த முறை 66% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் 2.31 கோடி இளம் வாக்காளர்கள் முதல் முறையாக, தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் (81.45 கோடி) 18 முதல் 19 வயதானவர்கள் 2.7%. புதிய வாக்காளர்களில் 39% பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். முதல்முறை வாக்களித்தவர்களில் 19% பேர்தான் காங்கிரஸுக்குக் கருணை காட்டினர்.
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in