

தமிழகம் மதுவுக்கு எதிராகக் கனன்றுகொண்டிருந்தது. ஆம், மாநிலத்தின் கல்லீரலையே அது சிதைக்க ஆரம்பித்ததை உணர்ந்துதான் ‘தி இந்து’ கடந்த ஆண்டே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது. நம்முடைய குடும்பங்களை மது எப்படியெல்லாம் சீரழிக்கிறது; அது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்று நேரடியாகக் களத்திலிருந்து ‘மெல்லத் தமிழன் இனி?’ தொடர் மூலம் பதிவுசெய்தது.
அப்போது மக்களிடம் ‘தி இந்து’வுக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பே மதுவுக்கு எதிரான மக்களின் மன ஓட்டத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டியது. அந்தத் தொடரை நிறைவுசெய்யும்போது, ‘இந்தத் தொடரால் மட்டுமே சமூக மாற்றங்களை மொத்தமாகக் கொண்டு வர முடியாதுதான். அதேசமயம், மதுவுக்கு எதிராகச் சமூகத்தில் கொஞ்சமேனும் ஏற்பட்டிருக்கும் சலசலப்பை உணர்கிறோம். மதுவுக்கு எதிரான ‘தி இந்து’வின் பயணம் மீண்டும் தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தோம். இதோ, இப்போது அந்தத் தருணம் வந்துவிட்டது.
எப்போதும் இல்லாத வகையில் மதுவுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். ஊர்கள் தோறும் வீதிக்கு வந்து
மாணவர்கள் போராடுகிறார்கள். தாய்மார்கள் திரண்டுவந்து மதுக் கடைகளுக்குப் பூட்டுப்போடுகிறார்கள். மக்கள் நம்மை அழைக்கிறார்கள். அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு, மக்கள் நலனை முன்னிறுத்தி எவ்வளவோ காரியங்களைக் கடந்த காலங்களில் தமிழக முதல்வராக இருந்த தலைவர்கள் செய்திருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவுக்கும்கூட அந்த வரலாற்றில் பங்கு உண்டு. முதல் முறையாக முதல்வர் பொறுப்
பேற்றபோது கள்ளச்சாராய ஒழிப்பில் அவர் எடுத்த தீவிர நடவடிக்கைகள் இன்றும் நினைவுகூரத் தக்கது. இன்னும், லாட்டரி ஒழிப்பு, கட்டாய மழைநீர் சேகரிப்பு என்று எவ்வளவோ விஷயங்களைச் சொல்லலாம். அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தமிழகத்தில் மதுவும் ‘டாஸ்மாக்’ கடைகளும் நீடிக்க ஒரே காரணமாகப் பலரும் சுட்டிக்காட்டுவது, அது தரும் வருவாய்.
அதுதான் இன்றைக்கு மது நீடிப்பதற்கான ஒரே சவால் என்றால், அது ஒரு பொருட்டே அல்ல என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இன்னும் மதுவிலக்கு கொண்டுவந்தால் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்களோ அவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள வழிகள் உண்டு. ‘மெல்லத் தமிழன் இனி - 1’ மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்தது. ‘மெல்லத் தமிழன் இனி - 2’ மதுவிலக்கை நோக்கி தமிழகம் முன்னேறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் விவரிக்கும்.
மதுவிலக்கை நோக்கி நம்பிக்கையுடன் நகர்வோம்!
(தெளிவோம்...)