Published : 24 Mar 2020 07:20 am

Updated : 24 Mar 2020 07:20 am

 

Published : 24 Mar 2020 07:20 AM
Last Updated : 24 Mar 2020 07:20 AM

எப்படி இருக்கிறது ஸ்வீடன்?

how-is-sweden

விஜய் அசோகன், ஸ்ரீராம்

ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் பிப்ரவரியில் ஒவ்வொரு மாவட்டம், மாகாணத்திலும் ஏதோ ஒரு வாரம் குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். அந்த சமயத்தில், பலரும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வது இயல்பு. சுவிட்ஸர்லாந்தை ஒப்பிடுகையில் இத்தாலி மலிவான சுற்றுலாத் தலம் என்பதும், ஆல்பஸ் மலையின் மறுபுறம் வட இத்தாலியில் வருவதும் கணிசமான மக்கள் வட இத்தாலியையும் ஆஸ்திரியாவையும் சுற்றுலா செல்லத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியமான ஒரு காரணம்.

சீனாவிலிருந்து கரோனா சரியாக வட இத்தாலியில் பரவுவதும், குளிர்கால விடுமுறைக்காக ஐரோப்பியர்கள் அங்கு செல்வதும் ஒரே காலத்தில் அமைந்ததுதான் இன்று ஐரோப்பா கரோனாவின் தாக்குதலுக்குப் பெரிய அளவில் ஆளாகி நிற்க வழியைத் திறந்துவிடுவதானது. வட இத்தாலிக்குச் சென்றுவந்தோர் விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் ஓரளவேனும் விழித்துக்கொண்டன. அவர்களைக் கவனத்தோடு மருத்துவக் கண்காணிப்பில் கொண்டுவந்தன. ஆனால், ஆஸ்திரியா சென்று திரும்பிவந்தவர்கள் விஷயத்தில் கொஞ்சம் கோட்டைவிட்டன. ஸ்காண்டினேவிய நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை கரோனா தாக்குதலை எப்படிக் கையாளுகின்றன என்பதை ஐரோப்பாவைத் தாண்டியும் உலக நாடுகள் கவனிக்கின்றன. ஏனென்றால், பொது சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையோடு செயல்படும் நாடுகள் இவை.

ஸ்வீடனின் முன்னேற்பாடுகள்

பிற ஐரோப்பிய நாடுகளைப் போல நாங்கள் வசிக்கும் ஸ்வீடனிலும் இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை நெருக்கடிநிலை அறிவிக்கப்படவில்லை. எனினும், மெல்ல மெல்ல அதை நோக்கி மக்களைத் தயார்படுத்திவருகிறார்கள்.

இத்தாலியில் கரோனா பரவத் தொடங்கியதுமே, பணியிட மேலாளர்கள் வழியே விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கிவிட்டிருந்தன. சுத்தமாக இருத்தல், சமூக நெருக்கத்தைத் தவிர்த்தல், உடல்நிலையைப் பராமரித்தல் ஆகியவை குறித்த அறிவுறுத்தல்கள் வரத் தொடங்கியதோடு, எப்போது, எந்தச் சூழலில் மருத்துவமனையை அணுக வேண்டும், எந்தச் சூழலில் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தகவல்களையும் மின்னஞ்சல்கள் வாயிலாகவும், பொது இடங்களில் சுவரொட்டிகள் உள்ளிட்டவை வாயிலாகவும் தெரியப்படுத்தலானார்கள். பொதுப் போக்குவரத்து வாகனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தொலைக்காட்சிகள், அரசு மருத்துவத் துறை இணையதளங்கள் வழியே எல்லா அறிவுறுத்தல்களும் உடனுக்குடன் வந்துக்கொண்டே இருக்கின்றன.

பள்ளிகளைப் பதற்றமின்றி நடத்த முன்பே பயிற்சிகள் வழங்கப்பட்டுவிட்டன. மேலும், அடுத்த நிகழ்வுகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ச்சியாக அரசு நடத்திவருகிறது. பள்ளிகளைப் பொறுத்தவரை நோய்த் தொற்று அதிகமாகக் காணப்பட்ட இடங்களின் அருகமைந்த பள்ளிகள், நோய்த் தோற்று இருந்த மாணவ, மாணவியர், ஆசிரியரின் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு, சுகாதார மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தேறின. பள்ளிகள் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவதால், அந்தந்த மாவட்டங்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய அறிவிப்புகள் மற்றும் எதிர் நடவடிக்கைகளில் இறங்கின. மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடக்கின்றன. உயர்நிலை, நடுநிலை, பாலர் பள்ளிகளும் அதன் வழியே செல்கின்றன. இங்குள்ள பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் தனி ஐபேட் வழங்கப்பட்டிருப்பதால், அதன் வழியே படிப்பு தொடரும் என்று தெரிகிறது.

பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, மார்ச் முதல் வாரத்தில் இருந்தே இணைய வழி வகுப்புக்கான தயார்படுத்தலைச் செய்யுமாறு பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. அதற்குரிய தொழிற்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள் அனைத்தும் ஏற்பாடாகின. மார்ச் முதல் வார அறிவிப்புக்கு முன்பே, பல்கலைக்கழக உயர்மட்ட அளவில், என்னென்ன செய்ய வேண்டும் என்றும், தொழிற்நுட்ப உதவி மையம், வகுப்பு ஆலோசனை மையம் அனைத்தும் இச்சூழலுக்காகப் புதிய செயற்பாட்டுக் குழுவும் உருவாக்கப்பட்டுவிட்டன. கூடிய விரைவில், பல்கலைக்கழகங்கள் பூட்டப்படும் சூழல் உருவாகுமாயின், அதற்கேற்றவாறு அனைத்து ஆய்வு முடிவுகள், தரவுகள், குறிப்புகள் அனைத்தையும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல அவரவர் தங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டன. இணைய வகுப்பு உள்ளிட்ட அனைத்துக்குமான முழுமையான திட்டமிடல்களை மாவட்ட நிர்வாகம் வழங்கும் முன் அந்தந்தப் பள்ளி நிர்வாகம் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள செய்ய வேண்டிய பணிகளை நிறைவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய எல்லைகள் பூட்டப்படுகின்றன

ஐரோப்பிய ஒன்றியங்களின் நாடாளுமன்றத்தில் கூடிய தலைவர்கள், “தங்களின் 26 நாடுகளுக்கும் அடுத்த 30 நாட்களுக்கு வெளியில் இருந்து இந்நாடுகளின் குடிமக்கள் அல்லாதோர் நுழைவதற்கான தடை” அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இவை மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியங்களின் நாடுகளே தத்தமது நாடுகளின் குடிமக்கள் அல்லோதோர் தங்கள் நாட்டுக்குள் நுழைய எல்லையை மூடியுள்ளார்கள்.

லித்துவேனியாவில் இன்றைய நிலவரப்படி வெறும் 36 பேருக்குத்தான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இது 10 லட்சம் மக்களுக்கு 13 பேர் என்கிற சராசரிக் கணக்குத்தான். ஆனாலும், தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்த திங்கட்கிழமையே மூடிவிட்டது. இந்த முடிவை எடுக்கும்போது மொத்தமாக 7 பேருக்குதான் கரோனா தொற்று இருந்தது. இத்தாலியும் பிறகு நார்வேயும் கவனமின்றி இருந்ததன் விளைவாகவே ஏனைய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இன்று கரோனா கொடுமையை இவ்வளவு அனுபவிக்கின்றன என்ற விமர்சனம் பரவலாக இருக்கிறது. ஆக, ஸ்காண்டினேவிய நாடுகளில் இவையெல்லாமும் பேசப்படுகின்றன. இவற்றினூடாக மக்களைப் பாதுகாக்க விரிவான ஏற்பாடுகளை இங்குள்ள அரசாங்கங்கள் எடுத்துவருகின்றன; பாதிக்கப்படுவோருக்கான சமூகப் பாதுகாப்புச் சூழலை உறுதிசெய்யும் வகையில் அந்த நடவடிக்கைகள் இருக்கின்றன.

- விஜய் அசோகன், ஸ்ரீராம் கேசரி மங்கலம் கல்யாண வெங்கட்ரமணன் இருவரும் ஸ்வீடன் சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள். தொடர்புக்கு: thamilinchelvan@gmail.com


எப்படி இருக்கிறது ஸ்வீடன்Covid 19 virusCoronavirus

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author