Published : 24 Mar 2020 07:18 am

Updated : 24 Mar 2020 07:18 am

 

Published : 24 Mar 2020 07:18 AM
Last Updated : 24 Mar 2020 07:18 AM

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பட்டும்… அதுதான் எல்லோருக்கும் பாதுகாப்பு!

immigrant-workers

மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் முகக்கவசம், கைக்குட்டைகளால் முகத்தை மூடிக்கொண்டு நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக மொய்த்தார்கள். மஹாராஷ்டிர அரசு கரோனா தொற்றால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையொட்டி முக்கியமான நகரங்களில் பணியிடங்களை மூடும்படி அன்றுதான் உத்தரவிட்டது. அதற்கு அடுத்து வரவிருந்த நாளில், பிரதமர் மோடி அறிவித்த ‘சுய ஊரடங்கு’ அனுசரிக்கப்படவிருந்தது. தொழிலாளர்களுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரமும் தங்கும் இடமும் கேள்விக்குறியான உடனேயே அவர்கள் சொந்த ஊருக்குப் புறப்படத் தலைப்பட்டார்கள். கட்டிடத் தொழிலாளிகளாகவும், உணவு விடுதிகளில் பரிசாரகர்களாகவும், மின்சாரப் பணியாளர்களாகவும் அன்றாடக் கூலியாக ஐநூறு ரூபாய் சம்பாதிப்பதற்காக வெவ்வேறு மாநிலங்களிலிருந்து மும்பை வந்தவர்கள் அவர்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்த நாட்களில் இதே விதமான காட்சி அரங்கேறியது. தமிழ்நாடு அரசு ‘கரோனாவுக்கு அஞ்சத் தேவை இல்லை’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிவந்த நிலையில், மும்பையில் இருந்தவர்கள் எடுத்த முடிவை சென்னையில் உள்ளவர்கள் எடுக்கக் கொஞ்சமே தாமதமானது. ஆனால், மும்பையில் இருந்தவர்களைப் போலவே அவர்களில் பெரும்பான்மையோரின் திட்டம் சென்னையிலும் ஈடேறவில்லை. ரயில் நிலையத்துக்கு வந்தவர்களில் பத்தில் ஒரு பங்கினருக்குக்கூட ரயில்களில் இடம் கிடைக்கவில்லை. ‘சுய ஊரடங்கு’ நடந்த நாளோடு நாடு முழுவதும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்ட நிலையில், தொழிலாளர்கள் அந்தந்த நகரங்களிலேயே முடங்கினார்கள். இப்போது இந்திய அரசு தன்னுடைய மாநிலங்கள் வழியாக அடுத்தடுத்து நகரங்களை முடக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. வீட்டுக்குள்ளான முடக்கம் நல்லதுதான்; அதற்கு முன் அவரவர் வீடடைவதும் முக்கியம்.

அநாதையாகியுள்ள தொழிலாளர்கள்

சென்னை போன்ற மாநகரங்களின் உள்கட்டமைப்பையும் கட்டிடங்களையும் உருவாக்குவதோடு, இன்று தமிழகத்தின் குக்கிராமங்களின் விவசாயம், உணவகங்கள் வரை குறைந்த சம்பளத்தில் சேவை செய்துவரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இருபது லட்சம். பணிப் பாதுகாப்போ உறைவிடப் பாதுகாப்போ, அடிப்படை உரிமைகளோ இல்லாத சூழலில் சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டிருப்பவர்கள் அவர்கள். நேற்று கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது அவர்களுக்கு மூன்று வேளை உணவைக்கூட கேள்விக்குறியாக்கி விட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் இன்று மாலை முதலாக அமலுக்கு வரவிருக்கும் ஊரடங்கு உத்தரவால் இருபது லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரே நாளில் இப்படி அநாதையாகியுள்ளனர்.

கோடையின் வெப்பம் அனலாக வறுத்தெடுக்கும் தகரக் கொட்டகைகளில், எட்டுக்கு எட்டு அறைகளில், பத்து பதினைந்து பேரோடு தங்கி சில ஆயிரங்களைப் பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் அனுப்புவதற்காக மட்டுமே இங்கே வேலை பார்க்க வந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு என்ன பாதுகாப்பை அளிக்க முடியும்? நிறுவனங்களில் வேலை நின்றுவிட்ட நிலையில் எந்த முதலாளி இவர்களுக்கு ஊதியமும் அன்றாட உணவும் தருவார்? கொடூரமான கொட்டகைக்குள் ஒருவரோடு ஒருவர் அடைத்துவைக்கப்பட்ட சூழலில் கரோனாவின் தாக்குதலுக்கு ஆளானால், அவர்களை யார் பராமரிப்பார்கள்?

முக்கியமான செய்தி

தமிழகத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட இரண்டாவது நபர் உத்தர பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்னையில் சிகை திருத்தும் கடையில் வேலை பார்த்த இளைஞர். அவர் வெளிநாட்டுக்கு என்றுமே பயணித்தவரல்ல. வெளிநாட்டிலிருந்து பயணித்து வந்தவர் யாரையும் சமீபத்தில் அவர் சந்திக்கவும் இல்லை. தனது பூர்வீக ஊரான ராம்பூரிலிருந்து டெல்லிக்குச் சென்று இரண்டு நாட்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பியவர். தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் வந்தவர், தனது வழக்கமான வேலையை சென்னையில் தொடங்கிய இரண்டாம் நாள் காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகளுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அங்கே அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

இது சொல்லும் முக்கியமான செய்தி என்ன? புலம்பெயர் தொழிலாளர்கள் கரோனா தொற்று அபாயத்தில் முன்வரிசையில் இருக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டும் அல்ல; இந்தியா முழுமைக்குமான பிரச்சினை. நாடு முழுக்க இப்படி ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

மாநிலம் விட்டு மாநிலத்துக்குப் பயணத்தைத் தவிருங்கள் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கிறார். வட கிழக்கு மாநிலங்களிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் இன்னும் நம்முடைய தென்னிந்திய மாநிலங்களிலிருந்துமேகூட தமிழகம் வந்திருக்கும் தொழிலாளர்கள் இங்கேயே உள்ள இருப்பிடங்களில் தங்கவைக்கப்படுவது எந்த வகையிலும் அவர்களுக்கும் பாதுகாப்பானது அல்ல; நம்முடைய மாநிலத்துக்கும் பாதுகாப்பானதல்ல. அவர்கள் தங்கள் சொந்த ஊரைச் சென்றடைவது அவர்களுடைய அடிப்படை உரிமை. ஒரு இந்தியர் வெளிநாட்டிலிருந்து அவரது சொந்த ஊருக்குக்குத் திரும்பும் உரிமை முடக்கப்படாதபோது உள்நாட்டுக்குள்ளேயே அப்படியான உரிமை முடக்கப்படுவது எவ்வகை நியாயம்?

என்ன செய்யப்போகிறோம்?

சொந்த மாநிலத்துக்குள்ளேயே புலம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்கள் சிறப்பு பஸ்கள் வழியாகவும், மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் வழியாகவும் உடனடியாக ஊர் திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது கரோனா கிருமிப் பரவலுக்கு வழிவகுக்கும் என்று அரசு சந்தேகித்தால், வாகனங்களில் ஏற்றப்படும் முன் ரயில் நிலையங்களிலும் பஸ் நிலையங்களிலும் பரிசோதனை முகாம்களை அமைத்து, பரிசோதனைக்குப் பின் அவர்களை ஊர் திரும்ப அனுமதிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று பிரத்யேக ரயில்களை அறிவித்து இடைநில்லா ரயில்களாக அவற்றை இயக்கலாம். இதேபோன்ற ஒரு முறையை மாநில அரசுகளும் பஸ்களில் செய்யலாம். மத்திய அரசுடன் மாநில அரசுகள் இதுகுறித்து உடனடியாகக் கலந்தாலோசிக்க வேண்டிய தருணம் இது.

கரோனா தொற்றை எதிர்கொள்ளும் எல்லா நாடுகளுமே இதைப் பல மாதங்களுக்கு நீடிக்கும் பிரச்சினையாகவே பார்க்கின்றன; சில மாதங்களுக்கு இந்தப் பிரச்சினை நீண்டாலும் நாம் என்ன செய்யப்போகிறோம்?

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in


புலம்பெயர் தொழிலாளர்கள்Covid 19Coronavirusகரோனா தொற்று

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author