Published : 24 Mar 2020 06:57 AM
Last Updated : 24 Mar 2020 06:57 AM

கரோனாவுக்கு ஏன் உலகம் அஞ்சுகிறது?- ஏன் அதை வெல்ல உங்கள் ஒத்துழைப்பு முக்கியம்?

இதுவரை உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் மடிந்தவர்களின் எண்ணிக்கை 15,306. சீனாவில் சாலை விபத்தில் ஒவ்வொரு நாளும் 700 பேர் மடிகிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் மட்டும் மரணிக்கிறார்கள். அப்படி என்றால் ஏன் கரோனா வைரஸ் குறித்து உலகளாவிய பீதி? இலுமினாட்டிகளின் சதி, சீனப் பொருளாதார யுத்தம், தனது பொருளாதாரத் தோல்வியை மறைக்க தேவையற்ற பீதியை அரசு செய்கிறது, இயற்கையை மனிதன் வல்லுறவு செய்வதற்கு பூமி தரும் தண்டனை என்றெல்லாம் பிதற்றல்கள் - சமூக வலைத்தளங்கள் முழுவதும். மெய்தான் என்ன?

கரோனாவின் அபாயம்

உண்மையில், நூற்றில் வெறும் 1.4%-தான் உயிரைக் குடித்துள்ளது ‘நாவல் கரோனா’ தொற்றுக்கிருமி. மற்ற நோய்க்கிருமிகளைப் பார்க்கும்போது கொஞ்சம் சாதுவான கிருமிதான். அதைவிட பன்மடங்கு ஆட்கொல்லிக் கிருமிகள் உள்ளன. ஆனாலும், ஏன் மருத்துவர்களும் மனிதாபிமானம் உள்ளவர்களும் கரோனாவைக் கண்டு அஞ்சுகின்றனர்? இதை விளங்கிக்கொள்ள கொஞ்சம் கணிதம் தேவை.

சென்னையின் மக்கள்தொகை சுமார் ஒரு கோடி. கரோனாவை எதிர்கொள்ளும் உத்தியை யோசிப்போம். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் 12,522. தனியார் துறை மருத்துவமனை படுக்கைகள் 8,411. ஆக மொத்தம் 21,000 என வைத்துக்கொள்வோம். ஒரு ஆண்டில் சென்னையில் சாலை விபத்தில் இறப்பவர்கள் சுமார் 15,000; அதாவது, ஒரு நாளைக்கு சராசரி 45 நபர்கள். சராசரியாக ஐந்து சாலை விபத்தில் ஒருவருக்கு மரணம். அதாவது, நாளைக்கு சாலை விபத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை சுமார் 250. இந்த எண்ணிக்கையில் மருத்துவமனைகளை நாடும்போது மருத்துவ வசதி, மருத்துவர், மருந்து எல்லாம் சிக்கல் இல்லை.

திடீரென்று ஒரே நாளில் ஒரு ஆண்டில் நடக்க வேண்டிய மொத்த விபத்தும் நடந்துவிடுகிறது எனக் கொள்வோம். அந்த ஒரு நாளில் மட்டும் மருத்துவமனையில் வந்து குவிவோர் எண்ணிக்கை 75,000. இதில் பலருக்குச் சிறுகாயம்தான் ஏற்பட்டிருக்கும். காயத்தைச் சுத்தம் செய்து கட்டு போட்டால் போதும். சிலருக்குச் சின்ன அளவில் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். சிலருக்கு மூளை அறுவைச் சிகிச்சை வரை தேவைப்படும். குறைந்தபட்சம் 50,000 பேரையாவது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டிவரும். ஆனால், அரசு - தனியார் மருத்துவமனைகளில் கைவசம் உள்ள மொத்த இடங்கள் வெறும் 21,000. இவற்றில் பல படுக்கைகள் ஏற்கெனவே சிகிச்சை பெறும் நோயாளிகளின் வசம் இருக்கும். எல்லா மருத்துவர்களும் விபத்துப் பிரிவுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. விபத்து நடந்தால் போட வேண்டிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிடும். அதாவது, இருக்கும் மருத்துவக் கட்டமைப்பு தாங்க முடியாமல் போய்விடும். பலரும் சிகிச்சை தர வழியின்றி மடிந்துபோவர்கள். இவர்களில் பலரை எளிதாகக் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆண்டு முழுவதும் சீராக இதே அளவு விபத்து நடந்தபோது சிக்கல் இருக்கவில்லை. அவ்வப்போது சற்றே பெரிய சாலை விபத்து ஏற்படலாம் என்றாலும், ஒரு ஆண்டில் ஏற்படும் அளவு விபத்து ஒரே நாளில் நடந்துவிடாது. சாலை விபத்து தொற்றிப் பரவாது. பாம்புக்கடி தொற்றிப் பரவாது; ஆனால், பெயருக்கு ஏற்ப தொற்றுநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றிப் பரவும். இதுதான் தொற்றுநோயின் சிக்கல்.

தொற்றுப் பரவு விகிதம்

ஒவ்வொரு தொற்றுநோய்க் கிருமிக்கும் முக்கியமாக இரண்டு குணங்கள் உண்டு. முதலாவது, தொற்றுப் பரவு விகிதம் எனப்படும் ‘ஆர் நாட்’ (R0). கிருமித் தொற்று உள்ள ஒருவர் இயல்பாக சராசரியாக எவ்வளவு பேருக்கு இந்தக் கிருமித் தொற்றைத் தர வாய்ப்பு உள்ளது என்பதே தொற்றுப் பரவு விகிதம். கரோனா வைரஸ் கிருமித் தொற்று உள்ளவரிடமிருந்து வெறும் ஆறு அடி தொலைவுதான் செல்ல முடியும். எனவேதான், பலர் ஒன்றுகூடி சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளி சுமாராக ஒரு மீட்டர் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். காற்றில் பரவும் தட்டமை நூறு மீட்டர் வரை பரவும். இரண்டாவதாக, எவ்வளவு நேரம் ஒம்புயிர்க்கு வெளியே அந்த வைரஸ் சிதையாமல் செயல்படும் தன்மை கொண்டு இருக்கும்? தட்டம்மை பல மணிநேரம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால், கரோனா வைரஸ் காற்றில் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே செயலூக்கத்துடன் இருக்கும். எனவே, இரண்டு தன்மைகளையும் சேர்த்துப் பார்க்கும்போது கரோனா வைரஸைவிட தட்டம்மை பரவு விகிதம் கூடுதலாக இருக்கும் எனக் கூறத் தேவையில்லை.

இது சராசரி என்பதை நினைவில் கொள்க. சிலர் மிகப் பரப்பர்கள் (சூப்பர் சஸ்பிரெட்டர்கள்) என அழைக்கப்படுகின்றனர். தென் கொரியாவில் மத நிறுவனத்தைச் சார்ந்த ஒரு தனிப் பெண் மட்டுமே 37 பேருக்கு கரோனாவைப் பரப்பிவிட்டிருக்கிறார். சராசரியைவிட கூடுதல் மனிதர்களுடன் அண்டிப் பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் கூடுதல் நபர்களுக்குக் கிருமியைப் பரப்புபவர்கள்.

ஆட்கொல்லித் திறன்

ஒவ்வொரு கிருமியும் நோயை ஏற்படுத்தினாலும் நோய் கண்டவர்கள் அனைவரும் மடிந்துவிட மாட்டார்கள். ஒரு கிருமி பரவி அதன் வழியாக ஏற்படும் மரண விகிதத்தை ஆட்கொல்லித் திறன் என்பார்கள். எந்தச் சிகிச்சையும் இன்றி விட்டுவிட்டால் ஒரு கிருமியின் ஆட்கொல்லித் திறன் கூடும். மருத்துவக் கண்டுபிடிப்பு, சிகிச்சை முதலியவற்றின் தொடர்ச்சியாகப் பல கிருமிகளின் ஆட்கொல்லித் திறனை நம்மால் குறைக்க முடியும். அதேசமயம், போதுமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றால், இறப்பு விகிதம் கூடும் என்பதைத் தனியாகக் கூறத் தேவையில்லை.

கிருமித் தொற்று உள்ளது என உறுதியாகத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை; அந்தக் கிருமித் தொற்றின் காரணமாக ஏற்படும் மரணம் இரண்டின் விகிதமும் - ஆட்கொல்லி விகிதம் (case fatality rate- CFR) என்று அழைக்கப்படும். நான் முன்னரே குறிப்பிட்டபடி ஏனைய பல கிருமிகளுடன் ஒப்பிட நாவல் கரோனா ஏற்படுத்தும் நோய் ஒன்றும் அவ்வளவு கொடூரமானது அல்ல. மேலும், அது நமக்கு அவ்வளவு புதியதும் அல்ல. பெரும்பாலும் நிமோனியா மற்றும் கடும் நிமோனியா, சுவாசக் கோளாறு நோய்கள்தான். எனவே, இது ஏதோ நமது கண்ணைக் கட்டிவிட்ட நோய் அல்ல. ஆயினும், கிடுகிடுவென நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் மருத்துவமனைகள் ஸ்தம்பித்துவிடும். இதுதான் சிக்கல்.

ஆக, வழக்கத்தைவிட கூடுதலாகக் குவிந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத்தான் பத்தே நாட்களில் ஆயிரம் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட நவீன கரோனா மருத்துவமனைகளை சீனாவில் வூஹான் நகரில் கட்டி எழுப்பினார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ஒரு தொற்றுநோய் பருவகால ஃப்ளு. இதிலும் மரணம் சம்பவிக்கும். அதன் பரவு விகிதம் 1.3. பன்னிரண்டு பரவல் ஏற்படும்போது கிருமி பரவியவர்களின் மொத்தக் கூட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 96 பேர்! எனவேதான், ஆண்டுதோறும் ஏற்பட்டாலும் ஃப்ளு ஒரு பெரிய பொதுச் சுகாதார சவால் இல்லை; மாறாக, நாவல் கரோனா பெரிய சவால்!

சங்கிலியை உடை; பரவலைக் குறை

கிருமித் தொற்று உள்ளவர் மற்றவர்களிடமிருந்து பதினான்கு நாட்கள் தனியே இருந்து மற்றவர்களிடம் பரவலைத் தவிர்த்தாலே இதை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும். இதனால்தான், தனிமையைக் கடைப்பிடித்து சமூகத்திடமிருந்து விலகியிருப்பது அவசியமாகிறது. ஆக, உங்களிடம் ஏற்கெனவே, கிருமித்தொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் வெளியே வராமல் இருந்தாலே போதும்; பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். மேலும், வெளியே செல்ல வேண்டிவந்தால் மற்றவர்களிடமிருந்து ‘பாதுகாப்பான தூரம்’, அதாவது ஒரு மீட்டர் இடைவெளியைக் கையாள்வது மூலமாகவும் கிருமிப் பரவல் சங்கிலியை உடைக்கலாம். அடிக்கடி கையைக் கழுவி சுத்தம் செய்துகொண்டால் கிருமி நம்முள் புகும் வாய்ப்பை மட்டுப்படுத்தலாம். இருமல் தும்மல் வழி பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இருமல், தும்மலின்போது வாயையும் மூக்கையும் கைக்குட்டை கொண்டு மூடிக்கொண்டால் மற்றவர்களுக்கு வைரஸ் போவதைத் தடுக்க முடியும். பரவல் சங்கிலி உடைபட்டால் கிருமி பரவும் வேகம் வெகுவாக மட்டுப்படும். ஒவ்வொரு நாளும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை சமாளிக்கும் அளவாக இருக்கும்; மருத்துவர்கள் பெரும்பாலான நோயாளிகளைக் காப்பாற்றிவிடலாம். இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோய் நிமோனியா போன்ற சுவாச நோய். எனவே, அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. ஒருசிலர் மட்டுமே தீவிர நெருக்கடிநிலைக்குச் செல்வார்கள்.

1918-ல் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு காய்ச்சலில் இந்தியாவில் மட்டும் 1.7 கோடி பேர் மடிந்தார்கள் என்கிறது வரலாறு. காட்டுத்தீபோல பரவும் தொற்றுநோயின் சங்கிலியை உடைக்காததன் விளைவு இது. அன்று நாம் விழிப்புணர்வு இல்லாத சமூகம். இன்று நமக்கு விழிப்புணர்வு இருக்கிறதுதானே?

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x