Published : 23 Mar 2020 07:21 AM
Last Updated : 23 Mar 2020 07:21 AM

எப்படி இருக்கிறது இத்தாலி?

அஜித் அசோகன்

நான் இத்தாலியிலிருந்து கிளம்பிய சமயத்தில் இப்படி ஆகும் என்று யாரும் ஊகிக்கவில்லை. 3,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுவாங்கியிருக்கிறது. கரோனாவால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையில் இத்தாலிதான் இப்போது முன்வரிசையில் நிற்கிறது. ஒருவேளை, இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் என்னைப் போல இத்தாலியில் படிக்கும் எல்லா மாணவர்களும் இந்தியா திரும்பியிருந்திருப்பார்கள்.

கொடுங்காலத்துக்கு முன்...

ஜனவரியில் குளிர்காலப் பருவமுறைக்கான தேர்வுகள் முடிந்ததுமே மாணவர்களாகிய நாங்கள் வெவ்வேறு திட்டங்களில் இருந்தோம். சிலர் சொந்த நாடுகளுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் அங்கேயே தங்கி எதிர்வரும் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்செய்துகொண்டிருந்தார்கள்; இன்னும் சிலர் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் திட்டத்தில் இருந்தார்கள். அப்போது சீனாவில் தோன்றிய புது வைரஸ் பற்றிய தகவல் எங்களுக்கு மற்றுமொரு செய்தியாகத்தான் இருந்தது. ஏனெனில், இத்தாலியிலிருந்து வூஹான் சுமார் 8,600 கிமீ தொலைவில் இருந்தது. அதாவது, இந்தியாவுக்கும் வூஹானுக்கும் இடையேயான தூரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு. நாங்கள் எல்லோரும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவே உணர்ந்தோம். சைனாடவுன் என்று பிரியத்துடன் குறிப்பிடப்படும் வயா சார்ப்பியில் ஜனவரி 25 அன்று புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும் என்று சீனப் புத்தாண்டையொட்டி மிலன் நகரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் தெரிவித்தன. எச்சரிக்கையுடன் இருந்த நாங்கள் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தயக்கத்துடன் இருந்தோம்.

பிப்ரவரி இறுதியில்

புதிய பருவமுறை தொடங்கவிருந்ததால் வெளிநாடு களுக்குச் சென்றிருந்த மாணவர்கள் மிலனுக்குத் திரும்பிவர ஆரம்பித்தார்கள். விமான நிலையங்களில் கரோனா அறிகுறிகளுடன் வருபவர்களைக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தார்கள். மாணவர்கள் மத்தியிலும் இத்தாலியப் பொதுமக்கள் மத்தியிலும் அச்சம் துளிர்விட ஆரம்பித்தது. பதற்றமடைந்த குடும்பங்கள் பொருட்களையும் எளிதில் அழுகிப்போகாதவற்றையும் அதிக நாள் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களையும் வாங்கிக் குவித்துவைக்கலானார்கள். மருந்துக் கடைகளில் அடிப்படையான மருந்துகளும், என்-95 முகக் கவசங்களும், கைகளுக்கான கிருமி நாசினிகளும் சீக்கிரமே விற்றுத் தீர்ந்தன. அப்போதுதான் இந்தியாவிலிருந்து இத்தாலி திரும்பியிருந்த எங்களில் சிலர் அடுத்த மூன்று நாட்களில் இந்தியாவுக்கு மறுபடியும் செல்வதற்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய ஆரம்பித்தோம். ஏர் இந்தியா விமானங்களின் பயணச்சீட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தன. ஆகவே, அதிக செலவுபிடிக்கும் பயணச் சீட்டுகளைக் கொண்ட விமானங்களை மாணவர்கள் நாட வேண்டியதாயிற்று. மீதியுள்ளவர்கள் பல காரணங்களுக்காக மிலனிலேயே இருக்க வேண்டியதாயிற்று.

விமானத்தில் ஏறிய பிறகு அவர்கள் ஒரு அறிவிப்பைச் செய்தனர். எங்களில் யாராவது கரோனா தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருந்தால் ஆரம்பத்திலேயே அதைக் கண்டுபிடித்து நோயின் பரவலைத் தடுத்து நிறுத்தும் விதத்தில் விமான நிலைய அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும் என்று அந்த அறிவிப்பு கூறியது. நான் நிறைய அச்சத்துடன்தான் இந்தியாவில் இறங்கினேன். ஆனால், இந்திய விமான நிலையத்தில் எந்தவிதப் பரிசோதனையும் அப்போது இல்லை. வீடு திரும்பியது முதலாக அன்றாடம் அங்குள்ள என் நண்பர்களிடம் பேசுகிறேன். அவர்கள் சொல்லும் கெட்ட செய்திகள் எவ்வளவு பெரிய அபாயத்தை இத்தாலி இன்று எதிர்கொள்கிறது என்று வெளிப்படுத்துகின்றன.

கரோனா எனும் கொடுங்கனவு

அரசு நெருக்கடிநிலையை அறிவித்தது. விமான நிலையங்களில் பரிசோதனைகள் கடுமையாகின. புதிய மாணவர்களை வரவேற்கும் ‘ஓப்பன் வீக்’ நிகழ்வைப் பல்கலைக்கழகம் தள்ளிவைத்தது. எனினும், கல்வி தங்குதடையில்லாமல் நடைபெறுவதற்கு ஏதுவாகத் தொலைக்கல்விமுறை செயல் படுத்தப்பட்டது. பட்டமளிப்பு விழாக்கள்கூட இணைய வழியிலேயே நடத்தப்பட்டன. இத்தாலி மாணவர்களுக்கு ‘கரோனா’ என்பது ஒரு கனவுச் சொல். பட்டமளிப்பு மாணவர்கள் தலையில் அணிந்துகொள்ளும் கிரீடத்துக்கும் ‘கரோனா’ என்றுதான் பெயர். உலகின் மற்ற இடங்களில் கருப்பு நிறத்தில் இருக்கும். இத்தாலியில் இந்த கிரீடம் அல்லோரோ குச்சிகளால் செய்யப்பட்டிருக்கும். இன்று மொத்த இத்தாலியையுமே ‘கரோனா’ எனும் சொல் அச்சுறுத்தும் கொடுங்கனவாக மாற்றியிருக்கிறது.

இன்று மிக மோசமான காலகட்டத்தை இத்தாலி எதிர்கொண்டிருக்கிறது. மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இப்படியான ஒரு அசாதாரணமான சூழலிலும் மக்கள் எவருமே தன்னை அநாதையாக உணர்ந்துவிடக் கூடாது என்பதில் இத்தாலி அரசு அக்கறையோடு இருக்கிறது. உள்ளூர் போலீஸார் ரோந்து வண்டியில் மேயரின் செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்கிறார்கள். மக்களுக்காக ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் யாரும் தனிமையை உணராதபடியும், அவர்களுக்கான ஆபத்துக் காலத்தில் தொடர்புகொள்வதற்காகவும் இந்த வலைப்பின்னல் அமைப்பு உதவுகிறது.

நகரம் முழுக்கவுமே தனிமைப்படுத்தப்பட்டு பல நாட்களாகின்றன. உணவுக் கடைகளும் மருந்துக் கடைகளும் மட்டுமே திறந்திருக்கின்றன. நகரம் முழுக்கவும் கண்காணிப்பில் இருக்கிறது. போலீஸ் எந்நேரமும் ரோந்துப் பணியில் கண்காணிக்கிறார்கள். வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். உணவுக்காக, மருந்துக்காக, வேலைக்கு செல்ல அனுமதி இருந்தால் மட்டும் என இந்த மூன்று காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் வெளியே வர வேண்டும். வேறு காரணங்களுக்காக வெளியே சுற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிந்தால் 200 யூரோ அபராதம் விதிக்கிறார்கள். சிறப்பங்காடிகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஐந்து பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள். ஏழைகளுக்கான உணவுத் தேவையை நிவர்த்திசெய்யும் பொருட்டு தற்காலிக மையங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் ஏழைகளின் வீடு தேடிச் சென்று மளிகைப் பொருட்களை விநியோகிக்கிறார்கள்.

இவ்வளவு சிரமங்களுக்கு இடையேயும் அங்கே படிப்பு ஏதும் தடைபடவில்லை. வீட்டில் இருந்தபடியே எல்லா வகுப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. நாள் முழுவதும் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் மாணவர்களுக்கு முக்கியமான இணையதளங்களையெல்லாம் இலவசமாகப் பயன்படுத்துவதற்குத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. பொறியியல் மென்பொருட்களையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.நிதி திரட்டுவதற்காக வங்கிக் கணக்கு எண் தரப்பட்டுள்ளது. தனிநபர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்களை இதில் பங்கெடுக்கச் சொல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுவாக, இத்தாலியர்கள் சமூகமாக வாழ்வதை விரும்பக்கூடியவர்கள். சாதாரண நாட்களிலேயே தெரிந்தவர்களை யாரையேனும் எதிரில் கண்டால் கணிசமான நேரத்தை அவர்களோடு செலவிடுவது வழக்கம். இப்போது அந்தச் சமூக இணக்கம் இன்னும் அதிகரித்திருக்கிறது. பால்கனியில் நின்றபடி பாட்டுப் பாடுவதும் இசைப்பதும் என அன்றாடங்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் எவ்வளவோ இன்னல்களையும் துயரங்களையும் கடந்த இத்தாலி, இதையும் தாண்டிவரும் என்று அந்தப் பாடல்கள் நம்பிக்கையைத் தூவுகின்றன.

- அஜித் அசோகன், பாலிடெக்னிகோ டி மிலானோ

பல்கலைக்கழக முதுநிலை மாணவர்.

தொடர்புக்கு: ajithasokan1994@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x