Published : 23 Mar 2020 07:19 AM
Last Updated : 23 Mar 2020 07:19 AM

பொதுமக்களின் பொருளாதாரப் பாதிப்புகளை மட்டுப்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும்?

நின்றுபோவதற்கான அறிகுறியோடு வணிகத் துறையின் சக்கரங்களிலிருந்து கிரீச்சிடும் சப்தம் எழுந்துகொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள், அதன் தொடக்கமாக இருக்கிறது. பிரதமர் மோடி ஆற்றிய உரையில், கொள்ளைநோயின் பொருளாதாரப் பாதிப்புகளை மதிப்பிடவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பணிக் குழு தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் தலைமையிலான பணிக் குழுவும், தமிழ்நாடு அரசும் தன்னுடைய நடவடிக்கைகளில் எடுத்துக்கொள்வதற்காகச் சில பரிந்துரைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

பணப் பரிமாற்றங்கள்

வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், உணவக உபசாரகர்கள், பேரங்காடி ஊழியர்கள், வீட்டு வேலை பார்ப்பவர்கள், ஊர் ஊராகச் சுற்றும் சில்லறை வியாபாரிகள் ஆகியோரும், மற்ற வழக்கமான பணிகளைச் செய்துவரும் ஊழியர்களும் ஏற்கெனவே வேலையும் வருமானமும் இல்லாமல் இருக்கிறார்கள் அல்லது விரைவில் அந்த நிலைக்கு ஆளாகப்போகிறார்கள்.

மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் இந்தப் பிரிவினருக்குக் குறிப்பிட்ட தொகையைப் பரிமாற்றம் செய்வது மோசமான கருத்தாக இருக்க முடியாது. பிரதம மந்திரியின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் உள்ள 33 கோடி கணக்குகளையும் இதற்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பண உதவி செய்வதற்காகப் பயனாளிகளை அடையாளம் காண்பதன் வாயிலாக, பெரும்பாலான மாநிலங்களில் பொது விநியோகத் திட்டத்தையும் திறன்பட செயல்படுத்த முடியும். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் இணையதள விவரங்களின்படி, நாடு முழுவதும் 25 கோடியே 53 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அனைத்து குடும்பங்களையுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகக் கருதி, குறைந்தபட்சம் ரூ.1,000 அளித்தால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய செலவினம் ரூ.23,500 கோடி. மிகவும் அத்தியாவசியமான தொகையாக இருந்தாலுமேகூட இதற்கான நிதித் தேவை அதிகமாக இருக்கிறது. இவ்வகையில், நிதி ஒதுக்குவதற்கான வாய்ப்புகளைப் பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்.

கடந்த மாதத்தில், ஹாங்காங் தனது நாட்டில் நிரந்தரமாகக் குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களை ஆதரிக்கும் வகையில் 10,000 ஹாங்காங் டாலர்கள் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. அமெரிக்காவும் தனது குடிமக்களுக்கு 250 அமெரிக்க டாலர்கள் வழங்குவது குறித்து ஆலோசித்துவருகிறது.

கடன் உத்தரவாதம்

விமானப் போக்குவரத்து, உணவகங்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா போன்ற சேவைத் தொழில் துறைகள் சிரமங்களை உணரத் தொடங்கியுள்ளன; சிறிது காலத்தில் இந்தச் சிரமங்கள் உற்பத்தித் தொழில் துறைக்கும் பரவும். சேவைத் தொழில் துறையின் உடனடிப் பிரச்சினை என்பது அதற்குப் பணம் கிடைக்கும் வாய்ப்புகள் அடைபட்டுவிட்டன என்பதுதான். வருமானம், லாபம் குறித்த பிரச்சினைகளை எல்லாம் பின்னர் விவாதித்துக்கொள்ளலாம். அத்துறையின் உடனடிப் பிரச்சினை பணப்புழக்கம் மட்டுமே. இத்துறையில் பணப் பரிமாற்றப் பதிவேடுகள் புரட்டப்படுவது நின்றுவிட்டால் ஊதியங்கள், குத்தகைத் தவணைகள், கடன் திரும்பச் செலுத்துவது என்று தொடர்புடைய அனைத்துச் செலவுகளுமே சிக்கலாகிவிடும்.

இந்தத் தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் நலிவுகாலக் கடன்களை வழங்கி வங்கிகள் எதுவும் ஆதரிக்காது என்பது தெரிந்த விஷயம்தான். மேற்குலகில் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் பெரும்பாலான நாடுகள் இவ்விஷயத்தில் என்ன செய்திருக்கின்றன என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கு நாடுகள் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குக் கடன் உத்தரவாதங்களை அளித்துள்ளன.

பிரிட்டன் 330 பில்லியன் பவுண்ட் கடன் மற்றும் உத்தரவாதங்களை அளிப்பதாக உறுதியளித்துள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் முறையே 300 பில்லியன் யூரோ, 100 பில்லியன் யூரோ நிதியுதவி செய்யப்படும் என்று அறிவித்துள்ளன.

இந்நாடுகள் பெருமளவிலான தொகைக்கு உத்தரவாதம் அளிப்பதற்குக் காரணம், இத்தொழில்களில் பணம் புழங்குவது குறையக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். இத்தகைய சிக்கலான நேரங்களில் பணப்புழக்கம் குறைந்துவிடாத வகையில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதன் தொடக்கமாக, அன்றாடத் தேவைகளுக்கான கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, அக்கடன்களைப் பெற்றவர்களிடமிருந்து அவர்களது நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் பணிப் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.

அடமானக் கடன்களுக்கு விடுமுறை

மாதாந்திரக் கடன் தவணைகளுக்கு விடுமுறையை அறிவிப்பது வேலையிழப்பு, ஊதிய வெட்டு அல்லது வருமானக் குறைவை எதிர்கொண்டிருக்கும் தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரும் ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கும். பாதிப்புக்கு ஆளாகியுள்ள தொழில்கள் மற்றும் அவற்றில் பணிபுரிபவர்களுக்கு மூன்று மாத அடமானக் கடன் விடுமுறையை அளிக்குமாறு கடன் அளித்த நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இந்தத் தொழில் துறைகள் சார்ந்த சொத்துகளை மதிப்பிடும்போது, வங்கிகள் துணைக் கடன்களைத் தவிர்க்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்தச் சிக்கல் முடிவுக்கு வரும் வரையிலான தற்காலிகமான ஏற்பாடுதான் இது என்பதையும் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

அப்படி நடந்துவிடக் கூடாது என்றாலும், ஒருவேளை மேலும் சில வாரங்களுக்கு தொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்படும்பட்சத்தில், தொழில் துறையினருக்குத் தற்காலிக வரிச் சலுகைகளை அளிப்பதைப் பற்றியும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சற்றும் எதிர்பாராத வகையில் வருமானம் குறைந்து, பணப்புழக்கம் பூஜ்ஜியமாகிவிட்ட நிலையை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், அரசு தன்னுடைய கடன்களை உடனடியாகத் திருப்பியளிப்பது, முன்கூட்டியே பெறப்பட்ட வரியில் மிச்சமிருப்பதைத் தாமதமின்றி திருப்பி வழங்குவது, ஏற்கெனவே திட்டமிட்டுள்ள நேரடி பணப் பயன்களை விரைந்து அளிப்பது என்பன போன்ற பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தலாம். தேவையென்றால், பாதிக்கப்பட்ட தொழில் துறையினர் சட்டப்படியாகத் தாங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் சேம நல நிதி ஆகியவற்றின் நிலுவைகளைத் தாமதமாகக் கட்டுவதற்கும் தற்காலிகமாக அனுமதிக்கலாம்.

நிதிக்கு என்ன செய்வது?

கடினமானதுதான் என்றாலும் சாத்தியமான வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. விரிவடைந்துகொண்டிருக்கும் இந்தப் பொருளாதாரத் துயரத்தைத் தேசிய அளவில் எதிர்கொள்ளும் வகையில் மத்திய மாநில அரசுகளின் நிதியாதாரங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, கேரள அரசு ஏற்கெனவே ரூ.20,000 கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களும் அதைப் பின்பற்றக்கூடும். மாநிலங்கள் தங்களது நிதியாதாரங்களைத் தாங்களே பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஊக்குவிப்பது சரியானதாக இருக்கும்.

அடுத்ததாக, நிதியுதவித் திட்டங்களை வகுக்கும்போது அதில் தனியாரையும் அரசு இணைத்துக்கொள்ள வேண்டும். தனியார்த் துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் மதிநுட்பம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், புதுமையான திட்டங்களை வகுக்க அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மிக முக்கியமான விஷயம், ஒரு மாதத்துக்கு முன்பு போடப்பட்ட பட்ஜெட் அறிக்கையின் கணக்குகளை கரோனா வைரஸ் தின்று தீர்த்துவிட்டது. அந்த எண்கள் இப்போது நடைமுறைக்குத் தொடர்பில்லாதவை. எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானங்கள் மட்டுமல்ல; பொதுத் துறைப் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி கிடைக்கும் என்ற கணக்கும் இப்போது சாத்தியமல்ல. ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனமும், ‘ஏர் இந்தியா’ நிறுவனமும் எதிர்வரும் காலத்தில் மீண்டும் அரசுத் துறை நிறுவனங்களாகிவிடும் என்றே தோன்றுகிறது. இந்தப் பின்னணியில், தொழில் துறையை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கான நிதியை உருவாக்குவது சாத்தியமானது அல்ல. நிதிநிலை அறிக்கையைத் தாண்டியும் உதவிகள் தேவைப்படும்; அப்போது அரசுக் கடன் பத்திரங்களை வெளியிடும் யோசனை உருவாகும்.

மிகவும் சரியான முறையில் கட்டமைக்கப்பட்டு, வரிச் சலுகை அளிக்கும் வகையில் கடன் பத்திரங்களை வெளியிடுவது உள்நாட்டுச் சேமிப்புகளைத் திரட்ட உதவும். வெளிநாடுகளில் வசிக்கும் பெருந்திரளான இந்தியர்களும் கடன் பத்திரங்களை வாங்குவார்கள். 1998-ல் பொக்ரான் நிகழ்வுக்குப் பிறகான ‘ரீசர்ஜன்ட் இந்தியா’ கடன் பத்திரங்களின் அனுபவங்கள் நினைவில் வருகிறதா? பாரத ரிசர்வ் வங்கி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டியது. இந்தியாவுக்கு உதவக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடைகளையும் தாண்டி அது நடந்தது. அதேபோல இப்போதும் ஏன் நடக்காது? அனைத்துக்கும் மேலாக, 1998-ல் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு நாடு முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு சூழல் இது.

© ‘தி இந்து’, தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x