

இதற்கு முன்பும் இத்தகைய வைரஸ்கள் சில அச்சமூட்டியிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் நாம் நிறையப் பேசி அஞ்சியிருக்கிறோம். ஆனால், இவ்வளவு உக்கிரமாக அல்ல. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மதுச்சாலைகளுக்கு விடுமுறை, வழிபாட்டுத் தலங்கள், கூட்டம் சேரும் திருமணம் போன்ற சம்பவங்களின் நிகழிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவுரை, தொடர் சுகாதாரப் பிரச்சாரங்கள், செல்பேசி வழி எச்சரிக்கை - இம்முறை சந்தேகமின்றி அச்சமூட்டுவதாகவே உள்ளது.
சில தினங்களுக்கு முன்பாகவே எங்கள் சின்னத்திரை அமைப்புகளிலிருந்து படப்பிடிப்புகள் ரத்தாகும் என்று செய்தி வரத் தொடங்கியது. அறிவிப்பில் இரண்டு நாட்களுக்குப் படப்பிடிப்பு வைத்துக்கொள்ளலாம் என்றும், 19-ம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும்வரை எந்தப் படப்பிடிப்பும் கூடாது என்றும் சொல்லப்பட்டிருந்தது.
சின்னத்திரைத் துறை இன்று எப்படி இயங்குகிறது என்று தெரிந்தால் அதிர்ந்துவிடுவீர்கள். அந்தந்த வேளைக்கு உணவு உண்பதுபோலத்தான் அன்றன்றைக்குக் காட்சிகள் எழுதி, படம் பிடித்து, அலங்கார விசேடங்கள் சேர்த்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. “ஒரு வாரம் பிரச்சினை இல்லை, பத்து நாள் பிரச்சினை இல்லை; கையில் எபிசோட் நிறைய இருக்கிறது” என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. யாரிடமாவது அடுத்த மூன்று நாட்களுக்கு எபிசோட் இருக்கிறது என்று தெரிந்தால் அவர்களைப் பிரமிப்போடு பார்ப்பதே வழக்கம். இந்த லட்சணத்தில் 31-ம் தேதி வரை படப்பிடிப்புகள் இருக்காது என்றால் ஒளிபரப்பு தடைப்படும். சானல்கள் ஒப்புக்கொள்ளாது. என்னவாகும்?
சிரிக்காதீர்கள். இது ஊழிற்பெருவலி. உள்ளே இருந்து பார்த்தால் மட்டுமே விளங்கும். நேற்று மாலை 6 மணிக்கு நான் எழுத ஆரம்பித்தேன். ஓரளவு எழுதி முடித்தபோது மணி 2.50. நடுவே ஒரு நிமிடமும் இடத்தை விட்டு எழவில்லை. ஐந்து நிமிடம் ஓய்வெடுக்கும் நேரத்தில் இரண்டு பக்கம் எழுதிவிட்டு வரலாம் என்று தோன்றிவிடுகிறது. ஐந்தைந்து நிமிடங்களாகச் சேமித்து மொத்தமாக ஒரு மணி நேரம் படுக்கலாம் என்று நினைத்துக்கொண்டு முழு இரவு எழுதிக்கொண்டே இருக்கும்படி ஆனது. என்னைப் போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள். உறங்காத, உறக்கமில்லாத இந்த இரவுக்குள் உலகம் அழிந்துவிடப்போகிறதென்ற அச்சத்தை மூலப் பொருளாக்கித் தாள்களைச் சொற்களால் நிரப்பித் தள்ளிக்கொண்டிருக்கிறோம். விடிந்த கணத்திலிருந்து ஷூட்டிங் போகும். இரவெல்லாம் நீளும். மறு நாளும் தொடரும். மறு இரவும் நடக்கும். அதற்குள் எவ்வளவு முடிக்கிறோம்? அதுதான் கணக்கு.
குறைந்தது ஒரு வாரம். அதிகபட்சம் இரண்டு வாரம். அதை நினைத்து மகிழ முடியுமா? ‘எபிசோட் இல்லை’ என்னும் ஓர் அறிவிப்பு எந்தக் கணம் வந்தாலும் அன்றாடங்கள் கலைத்துப் போடப்பட்டுவிடும். பத்து நாள் படப்பிடிப்பு இல்லை என்றால் கோடிக்கணக்கில் பணம் முடங்கும். வேலை முடங்கும். ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஆகும். இன்னும் என்னென்னவோ!
ஒரு சின்ன துறையில் இவ்வளவு என்றால் நாடெங்கும் உள்ள பெருநிறுவனங்கள், அன்றாட வியாபாரிகள், கூலித் தொழிலாளிகள் நிலை என்னவாகும்? மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய செயல் என்று ஒன்று கிடையாது என்று கீதையில் கிருஷ்ணன் சொல்வான். செயல் இல்லாதவனே சும்மா இருப்பதில்லை. செயலை முடக்கிவிட்டு நம்மால் எப்படி அப்படி இருக்க முடியும்? வைரஸிலிருந்து விடுதலை எப்போது என்று தெரியவில்லை. ஆனால், அச்சங்களிலிருந்து விடுதலை பெற்றே ஆக வேண்டும். இல்லாவிட்டால், இது சிந்தையைச் செல்லரிக்கச் செய்துவிடும்!