Last Updated : 18 Mar, 2020 07:36 AM

 

Published : 18 Mar 2020 07:36 AM
Last Updated : 18 Mar 2020 07:36 AM

கரோனா: கொள்ளை நோயா?

உலக சுகாதார அமைப்பு கரோனாவைக் கொள்ளைநோய் என்று அறிவித்திருக்கிறது. கொள்ளைநோயாக அறிவிக்க வேண்டும் என வல்லுநர்கள் சிலர் வலியுறுத்திவந்தார்கள். இதைக் கொள்ளைநோய் என்று வகைப்படுத்துவதை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த விவாதத்தின் நுழைவாயிலுக்கு வெளியே நிற்கிறது ஒரு கேள்வி: கொள்ளைநோய் என்பது என்ன?

அதற்குச் சில வரையறைகள் உள்ளன. முதலாவதாக, அந்த நோய் மனிதகுலத்துக்கு முற்றிலும் புதியதாக இருக்க வேண்டும். அடுத்த வரையறை, நோய்க் கிருமிகள் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றக்கூடியதாக இருக்கும். மூன்றாவதாக, நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களை அது மரணத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடக்கூடும். கடைசி வரையறை, நோயின் கொடுங்கரங்கள் உலகெங்கும் நீளும். இந்த வரையறைகளுக்கெல்லாம் கரோனா பொருந்திப்போகிறது. ஆனாலும், கணிசமானோர் இது கொள்ளைநோய் என்று சொல்லப்படுவதை ஏற்பதில்லை.

வெறும் குளிர்க் காய்ச்சலா?

நங்கநல்லூர் மருத்துவர் ஒருவரின் ஒலிப்பதிவை நான் அங்கம் வகிக்கும் வாட்ஸ்அப் குழுமங்களில் பலரும் பகிர்ந்திருந்தார்கள். மருத்துவர் இதை ஒரு ‘மகிமைப்படுத்தப்பட்ட குளிர்க் காய்ச்சல்’ என்றும், வீணாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் சொல்லியிருந்தார். மருத்துவர்கள் ‘R0’ என்று ஒரு குறியீடு வைத்திருக்கிறார்கள். இது நோய் தொற்றும் வேகத்தைக் குறிக்கும். சாதாரணக் குளிர்க் காய்ச்சலுக்கு இதன் சராசரி மதிப்பு 1.28 ஆகும். கரோனாவுக்கு இது 1.4 முதல் 3.8 வரை இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது புரூக்ளினைத் தலைமையிடமாகக் கொண்ட தொற்றுநோய்களுக்கான சர்வதேசச் சங்கம். பெல்ஜியத்தைச் சேர்ந்த உயிரியல் அறிஞர் மார்க் வாத்லெட், கடந்த வாரம் வெளியிட்ட தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் கரோனாவின் ‘R0’ மதிப்பு 4.7 முதல் 7 வரை இருக்கும் என்று எழுதியிருக்கிறார். எவ்வாறாயினும், சாதாரணக் குளிர்க் காய்ச்சலைவிட இது மிக வேகமாகப் பரவக்கூடியது என்பது தெரிகிறது.

அடுத்த வாதம், கரோனாவால் உண்டாகும் உயிரிழப்புகள் குறைவு என்பதாகும். கடந்த வாரம் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒரு கலந்துரையாடலைப் பார்த்தேன். ஒரு பெரியவர், “இதென்ன பெரிய வைரஸ், மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வீழ்ந்த கொள்ளைநோய்களுக்கு முன்னால் இது எம்மாத்திரம்?” என்று கேட்டார். பிளேக், காலரா, பெரியம்மை, தட்டம்மை, காசநோய், மலேரியா முதலான கொள்ளைநோய்கள் சாம்ராஜ்யங்களைச் சரித்திருக்கின்றன என்பதும், கோடிக்கணக்கான மக்களைக் காவுவாங்கியிருக்கின்றன என்பதும் உண்மைதான். மேலும், கடந்த 100 ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பானது கொள்ளைநோய் என்று அறிவித்தவற்றின் மரணக் கணக்கும் லட்சங்களிலும் கோடிகளிலும்தான் இருக்கிறது.

1918 முதல் 1920 வரை உலகை அச்சுறுத்திய ஸ்பானியக் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் 10 கோடிக்கும் மேல். ஆசியக் காய்ச்சல் (1958), ஹாங்காங் காய்ச்சல் (1968) என்றழைக்கப்பட்ட தொற்றுநோய்கள் ஒவ்வொன்றும் 10 லட்சம் மரணங்களை ஏற்படுத்தின. 1981-ல் மரணக் கணக்கைத் தொடங்கியது எய்ட்ஸ். இன்றளவும் மூன்றரைக் கோடி மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். கரோனாவுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு கொள்ளைநோய் என்று அறிவித்தது 2009-ல். அப்போதுதான் பன்றிக்காய்ச்சல் பல கோடி மக்களைத் தாக்கியது; இரண்டு முதல் ஆறு லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்கிறார்கள். ஆக, இதுவரையான கொள்ளைநோய்களோடு ஒப்பிடும்போது கரோனா உண்டாக்கியிருக்கும் உயிரிழப்புகள் குறைவுதான். என்றாலும், இது கொள்ளைநோய் என்று அறிவிக்கப்பட என்ன காரணம்?

மரண விகிதம்

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு முன்னால் மரண விகிதம் குறித்துப் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன என்றும் பார்த்துவிடலாம். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சமாக இருந்தபோது, மரணத்தைத் தழுவியவர்களின் எண்ணிக்கை சுமார் 5,900. அதாவது, 3.8%. இதே கரோனோ வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த சார்ஸ் (2002), மெர்ஸ் (2012) ஆகியவை மனிதர்களின் மீது படையெடுத்தபோது, அவை ஏற்படுத்திய மரணங்களின் விகிதம் முறையே 10%, 34% என்பதாக இருந்தது. ஆக, கரோனாவின் மரணவிகிதம் குறைவுதான். மேலும், டெல்லியிலிருந்து வெளியாகும் ஓர் இணைய இதழ், ‘கரோனாவால் பீடிக்கப்பட்ட 80% பேருக்குப் பாதிப்பு லேசாகத்தான் இருந்தது’ என்று எழுதியிருந்தது. சீனாவின் நோய்த் தடுப்பு மையம் என்கிற ஆராய்ச்சி நிறுவனம் இதை உறுதிசெய்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 18% பேரை மருத்துவமனையிலும், அதில் 4% பேரைத் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்க வேண்டிவரும் என்றும் சொல்கிறது மையத்தின் ஆய்வு முடிவுகள்.

ஆக, ஒப்பீட்டளவில் குறைவான உயிரிழப்புகளையே கரோனா உருவாக்கியிருக்கிறது. அதன் மரணவிகிதம் குறைவு. அப்படி மரணமடைந்தவர்களில் பலரும் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள். இப்படியான தரவுகள் இருக்கும்போது, நாம் ஏன் அஞ்ச வேண்டும் என்றுதான் நங்கநல்லூர் மருத்துவரும் தொலைக்காட்சிப் பெரியவரும் டெல்லிப் பத்திரிகையாளர்களும் கேட்கிறார்கள்.

நமக்கான பதில்

இதற்கான பதிலை நாம் சீனாவில் தேடலாம். கரோனாவானது இன்ன பிற நோய்களைக் காட்டிலும் வேகமாகத் தொற்றுகிறது. அதிகமானவர்களைப் பாதிக்கிறது. இதில் 18% பேருக்கு மருத்துவமனைச் சிகிச்சை வேண்டியிருக்கிறது. மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இந்த 18% என்பதே பெரிய எண்ணிக்கையாக அமைந்துவிடுகிறது. நோயை எதிர்கொள்ள இந்த 18% நோயாளிகளுக்கான மருத்துவமனையும் படுக்கையும் மருத்துவர்களும் உபகரணங்களும் இருக்க வேண்டும். வூஹான் நகரில் நோய் பரவுகிற வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவில் மருத்துவமனைகள் இல்லை. அதனால்தான், இரண்டு வாரத்தில் இரண்டு மருத்துவமனைகளைக் கட்டியது சீனா. கல்விச் சாலைகளையும் சமூக நலக்கூடங்களையும் தற்காலிக மருத்துவமனைகளாக்கியது.

கொள்ளைநோய் வரையறுக்கப்படுவது மரணங்களின் எண்ணிக்கையால் அல்ல; மரணமடைவோரின் விகிதத்தாலும் அல்ல. மாறாக, நோயின் ஜுவாலை அதி விரைவாகவும் உலகின் பல பாகங்களுக்கும் பரவுகிறபோது அது கொள்ளைநோயாகிறது. கரோனாவைப் போன்றே சார்ஸ், மெர்ஸ் ஆகிய தொற்றுநோய்களும் கரோனோ வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தவைதான்; ஆனால், அவை கொள்ளைநோய் என்று அறிவிக்கப்படவில்லை. சார்ஸ் மிகுதியும் சீனாவையும் ஹாங்காங்கையும் பாதித்தது; மெர்ஸின் கரங்களில் மாண்டவர்கள் மிகுதியும் சவுதி அரேபியர்கள். ஆனால், கரோனா இப்போது 130 நாடுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஜனவரி மூன்றாம் வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 99% சீனர்களாக இருந்தார்கள் என்பதோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே நோயின் பாதிப்பு 13 மடங்கு அதிகரித்திருக்கிறது. கரோனா ஒரு கொள்ளைநோய் அல்ல என்று நிறுவ முயல்வதால் நாம் அடையப்போவது ஏதுமில்லை!

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x