Published : 18 Mar 2020 07:34 am

Updated : 18 Mar 2020 07:34 am

 

Published : 18 Mar 2020 07:34 AM
Last Updated : 18 Mar 2020 07:34 AM

ஆந்திர ஐஐடிக்களின் வெற்றிக் கதைக்குப் பின்னுள்ள இருண்ட பக்கங்கள்!

andhra-iit

ராஷ்மி ஷர்மா

நாடு முழுக்க 1.5 கோடி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பள்ளி இறுதித் தேர்வுப் பருவம் தொடங்கிவிட்டது. மேற்கொண்டு கல்லூரிகளில், உயர் கல்வி நிலையங்களில் சேர்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்களிலும், ‘இந்தியத் தொழில்நுட்பக் கழகம்’ (ஐஐடி) என்கிற உயர் கல்வி நிறுவனத்தில் சேர்வோர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே செல்வார்கள். அந்த நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் இடம்பெறும் மாணவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களில் பலர், அவர்களோ அவர்களுடைய குடும்பத்தினரோ அறிந்தேயிராத அளவில் அதிக ஊதியம் தரும் வேலைகளுக்குச் செல்வார்கள்.

இத்தனை பெரிய சாதனைக்கு மறுபுறத்தில் மிகவும் அவலமான, வருந்தத்தக்க பல கதைகள் இருக்கின்றன என்பதை 2018-19-ல் உயர்நிலைக் கல்வி தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின்போது தெரிந்துகொண்டேன். ஆந்திரத்துக்கு இந்தப் பெருமை கிடைக்கக் காரணம், சங்கிலித் தொடராக கார்ப்பரேட் பள்ளிகளைப் பெரிய நகரங்களில் நடத்தும் இரண்டு நிறுவனங்கள்தான். இந்நிறுவனங்கள் மாணவர்களை ஐஐடியில் சேர்க்கத் தயாரிக்கின்றன; ஐஐடியில் சேரும் அளவுக்கு மதிப்பெண் கிடைக்காவிட்டாலும் பொறியியல் கல்லூரியில் இடம்பிடிக்கச் செய்கின்றன. தொடக்கத்தில் இந்தப் பள்ளிகளில் பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகள் மட்டுமே இருந்தன. இப்போது பள்ளிப் படிப்பு முழுவதையுமே முடிக்கும் அளவுக்கு எல்லா வகுப்புகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விடுதிகளுடன் இணைந்த உள்ளுறைப் பள்ளிக்கூடங்கள்தான்.


எப்போதும் படிப்பு எப்போதும் தேர்வு

மாணவர்களுடைய வயது, அறிவு வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், நுழைவுத் தேர்வுகளை மட்டும் மனதில் கொண்டு பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ளன. ஐஐடியில் சேர்வதற்கான தனிப்பயிற்சி வகுப்புகள் ஆறாவது வகுப்பு முதலே தொடங்கிவிடும் என்று ஒரு பள்ளி முதல்வர் பெருமையாகக் கூறினார். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. தாய்மொழிப் பாடமும் சமூக அறிவியல் பாடங்களும் இரண்டாம்பட்சம்தான். ஆறாம் வகுப்பு முதலே பதினோராவது, பன்னிரண்டாவது வகுப்புப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. வழக்கமான பாடங்களுடன் இவை ஆண்டுதோறும் 10% நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களுக்கு ஓய்வே கிடையாது. எப்போதும் படிப்பு, தேர்வு என்றே பழக்கப்படுத்தப்படுகின்றனர்.

இந்தக் கல்வி முறையில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. கற்றுக்கொள்ளும் ஆற்றல் அடிப்படையில் இந்த மாணவர்கள் மூன்று ரகங்களாக முதலிலேயே பிரிக்கப்படுகின்றனர். மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாகப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை பகுதித் தேர்வும், மாதம் ஒரு முறை மாதாந்திரத் தேர்வும் நடைபெறுகின்றன. மாதாந்திரத் தேர்வுக்குப் பிறகு, அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகின்றனர். அதிக மதிப்பெண்கள் என்றால் மேல் பிரிவில் சேர்க்கப்படுவர். மதிப்பெண்கள் குறைந்தால் கீழிறக்கம் செய்துவிடுவர்.

ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 9 மணி நேரம் வகுப்புகள் நடக்கின்றன. இது அதிகமாகுமே தவிர குறையாது. விடுமுறை என்பது சொற்பம்தான். முதல் ரகத்திலிருந்து அடுத்த ரகங்களுக்கு மாற்றினால் மாணவர்கள் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தங்களிடம் படிப்பவர்களில் 20% பேர் மட்டுமே முதல்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 20% பேர்தான் ஐஐடியில் சேர்ந்துவிடுவார்கள். அதாவது, இவ்வளவு தீவிரப் பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகும் ஐஐடியில் இடம்பெறப்போவது 3% முதல் 4% வரையிலான மாணவர்கள் மட்டுமே.

இழப்பது குழந்தைப் பருவம்

இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைப் பருவத்தை அடியோடு இழந்துவிடுகிறார்கள். படிப்பு, விளையாட்டு, கலை ஆகிய துறைகளில் தங்களுக்குப் பிடித்தமானதைத் தேர்வுசெய்யவும் கற்றுக்கொள்ளவும் மன மகிழ்ச்சி பெறவும் முடியாமல் தடுக்கப்படுகின்றனர். தங்களுக்குள்ள திறமைகளை அறியாமலும் பயன்படுத்தாமலும் தனித்துவத்தையே இழக்கின்றனர். ஐஐடி மட்டுமல்ல, பொறியியல் கல்லூரிகளில்கூட சேர முடியாமல் எதிர்காலத்தைத் தொலைக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்பு பல மடங்கானது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல்நிலை மாணவர்கள் என்று அடையாளம் காணப்படுவோருக்கு, ஆசிரியர்களிலேயே மிகச் சிறந்தவர்களைக் கொண்டு கற்றுத்தரப்படுகிறது. அடுத்துள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மாணவர்களுக்கு அடுத்த தரங்களில் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது. மூன்றாம் ரக மாணவர்களைத் தங்களுடைய கல்வி நிறுவனத்தின் ‘புரவலர்கள்’ என்று வஞ்சப் புகழ்ச்சியுடன் அழைக்கின்றனர் பள்ளி நிர்வாகத்தார்.

இந்தப் பள்ளிகளில் சேர்வதால் குழந்தைப் பருவத்தை மட்டுமல்ல; நல்ல கலைஞராகவோ ஓவியராகவோ எழுத்தாளராகவோ விளையாட்டு வீரராகவோ வரக்கூடிய வாய்ப்புகளையும் இழக்கின்றனர். சுயசிந்தனை அழிக்கப்படுகிறது. கிளிப்பிள்ளைகளாக வளர்க்கப்படுகின்றனர். பள்ளிகளையும் தொழில் நிறுவனங்களாகவே நடத்தும் நிர்வாகத்தின் பேராசையும், கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசின் நிர்வாகத் தோல்வியும் இந்த நிலைமைக்குக் காரணங்கள். மாணவர்களை இந்தப் பள்ளிகளில் சேர்த்துவிடத் துடித்து நிர்வாகம் செய்யும் விளம்பரங்களும் பிற உத்திகளுமே இதற்கு சாட்சி.

கார்ப்பரேட் பள்ளிகளிலிருந்து ஊழியர்களும் ஆசிரியர்களும் ஜனவரி மாதமே எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் செல்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பெயர்கள், முகவரி போன்றவற்றைக் குறித்துக்கொள்கின்றனர். அந்த மாணவர்களின் பெற்றோர்களை வீடு தேடிச் சென்று, தங்கள் பள்ளியில் சேர்த்து ஐஐடி பொறியாளர் ஆக்குமாறு மூளைச் சலவை செய்கின்றனர். கார்ப்பரேட் பள்ளி ஆசிரியர்களின் இன்னொரு கடமை, பாடம் சொல்லித்தருவதுடன் ஆண்டுதோறும் புதிய மாணவர்களைப் பிடித்து வந்து சேர்ப்பது. இலக்கை எட்டத் தவறினால் ஊதியம் பிடித்துக்கொள்ளப்படும்.

உடந்தையாகும் அரசு

கார்ப்பரேட் பள்ளிகள் என்றதும் பள்ளிக் கட்டமைப்பு குறித்துப் பெரிதாகக் கற்பனை செய்துகொண்டுவிட வேண்டாம். பல பள்ளிகளில் விசாலமான வகுப்பறை கிடையாது. சுகாதாரமான உணவறை கிடையாது. விளையாட்டுத் திடல், நூலகம், ஆய்வகம், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை கிடையாது. தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பதற்கான சாதனங்களும் தப்புவதற்கான வழிகளும்கூட கிடையாது. தனியார் பள்ளி மாணவரிடமிருந்து அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.4,000 மட்டுமே வசூலிக்கலாம் என்பது சட்டம். ஆனால், இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் என்று தனித்தனியாகப் பள்ளி அமைந்துள்ள ஊர்களுக்கு ஏற்ப வசூலிக்கிறார்கள். இதைப் பெற்றோரும் ஆட்சேபிப்பதில்லை, அரசும் கண்காணிப்பதில்லை.

கார்ப்பரேட் பள்ளிகளின் நடவடிக்கைகள் சரியல்ல என்றே அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் பேட்டிகளின்போது தெரிவித்தனர். பெற்றோரின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அவர்களையும் மாணவர்களையும் ஏமாற்றிப் பணம் ஈட்டுகின்றனர் என்று அனைவருமே கூறுகின்றனர். ஆனால், இந்தப் பள்ளிகளைக் கட்டுப்படுத்த அரசால் முடியாது என்றும் பேசுகின்றனர். இதற்குப் பல காரணங்கள். முதலாவது, கார்ப்பரேட் பள்ளிகள் தொடங்கிய ஊர்களில் அல்லது இடங்களில் அரசுப் பள்ளிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. அடுத்தது, தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதற்கான அதிகாரிகள் எண்ணிக்கைக்கு எப்போதும் பற்றாக்குறைதான். மாவட்ட அளவில் பணிமூப்புமிக்க இடைநிலைக் கல்லூரி முதல்வரைப் பிராந்திய ஆய்வு அதிகாரியாக (ஆர்ஐஓ) வரன்முறைப்படுத்துகின்றனர். தனக்குள்ள பணிகளுடன் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துவது அவருக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. அவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடைநிலைக் கல்லூரிகளின் முதல்வர் பதவியையும் வகிக்கின்றனர். மூன்றாவது, கார்ப்பரேட் பள்ளி நிர்வாகங்கள் அரசியல் செல்வாக்குள்ளவை.

ஆந்திர மாநிலத்தின் ஐஐடி மாணவர் தயாரிப்பு விளம்பரங்களுக்குப் பின்னால் உள்ள தனியார் கார்ப்பரேட் பள்ளிகளின் அவலமான கதை இதுதான்!

- ராஷ்மி ஷர்மா, ஆய்வாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.

© ‘தி இந்து’, தமிழில்: சாரி


ஆந்திர ஐஐடிAndhra IIT

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x