Published : 16 Mar 2020 09:14 AM
Last Updated : 16 Mar 2020 09:14 AM

பெயர் சூட்டுவதன் உளவியல்

சிவபாலன் இளங்கோவன்

சமீபத்தில் நண்பர் ஒருவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறந்திருப்பதாகவும், குழந்தைக்கு ‘அமுதன்’ என்று பெயர் வைத்திருப்பதாகவும் அத்தனை மகிழ்ச்சியுடன் அனைவருடனும் பகிர்ந்துகொண்டார். எனக்கு இரண்டு வகைகளில் அந்தப் பெயர் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒன்று, அது ஒரு தூய தமிழ்ப் பெயர். தமிழ்ப் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதே அரிதாகிவிட்ட இந்தச் சூழலில், இப்படி ஒரு இதமான தமிழ்ப் பெயரை வைப்பது ஆச்சரியமானது. இரண்டாவது காரணம், ‘அ’வில் தொடங்கும் பெயர். இன்றைய கல்விச் சூழலில் ஒரு பெற்றோர் ‘அ’வில் தொடங்கும் ஒரு பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமாக நிகழ்வதல்ல.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகளின் பெயர்கள் ஆங்கில எழுத்துகளின் வரிசையில் கடைசியாக இருக்கும் எழுத்துகளிலிருந்து தொடங்குவதாகவே இருக்கின்றன என்கின்றன சமீப ஆய்வுகள். ‘ல’, ‘ப’, ‘ச’, ‘ர’, ‘வ’, ‘த’ போன்ற எழுத்துகளில் தொடங்கும் பெயர்களே பெருமளவில் இன்றைய பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ‘ஹ’, ‘ஷ’ போன்ற வடமொழி எழுத்துகளில் தொடங்கும் ஏராளமான பெயர்களைச் சமீபத்தில் பார்த்துவருகிறோம். இது தொடர்பாக என்னிடம் வந்த பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “சார், ஆங்கிலத்தில் ஏ (A), பி (B) போன்ற எழுத்துகளில் தொடங்கும் பெயரை வைத்தால் பள்ளியில் எதற்கெடுத்தாலும் முதலில் இவர்களைத்தான் அழைப்பார்கள். வருகைப் பதிவேட்டின்போதும், தேர்வின்போதும், விடைத்தாள்களைத் திருத்தும் போதும், மதிப்பெண்களைச் சொல்லும்போதும் மற்றவர்களுக்கு முன்பாக இவர்கள்தான் இருப்பார்கள். அனைத்தையும் முதலில் செய்ய வேண்டியிருப்பதால், குழந்தைகளுக்கு அதிக பதற்றம் வந்துவிடும். அதனால், அவர்களால் தங்களுக்குத் தெரிந்ததைக்கூடச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். அது மட்டுமில்லாமல், முதலில் திருத்தும் விடைத்தாள்களை ஆசிரியர்கள் ரொம்பக் கவனமாகக் கூர்ந்து, பார்த்துப் பார்த்துத் திருத்துவார்; மதிப்பெண் கொடுக்கவும் தயங்குவார். ஆனால், பின்னால் வருபவற்றைத் திருத்தும்போது அவரிடம் இந்தக் கடுமை இருக்காது, மதிப்பெண்களும் நிறைய வழங்கிவிடுவார்” என்று தன்னளவில் அவர் சில விளக்கங்களைக் கொடுத்தார்.

பெற்றோர்களின் அச்சம்

எனினும், தொடக்க எழுத்தான ‘அ’வில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் ‘அ’வில் தொடங்கும் பெயர்களையே சூட்டுவதையும் நாம் சில நேரங்களில் பார்க்கிறோம். அப்படியென்றால், அவர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் முதல் எழுத்தில் பெயர் தொடங்குவதால் மேலே சொன்ன எந்தச் சிரமங்களுக்கும் ஆளாகவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இதையொட்டிப் பார்க்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் தற்காலப் பெற்றோருக்கு மிகப் பெரிய அச்சம் இருக்கிறது. அதன் விளைவாக, குழந்தைகளைத் தங்கள் கைகளுக்குள்ளாகவே வளர்த்திட வேண்டும் என்ற தவிப்பு இருக்கிறது. வெளியுலகம் கொடுக்கக்கூடிய சவால்களிலிருந்தும் இன்னல்களிலிருந்தும் குழந்தைகளைப் பாதுகாத்துத் தாங்களே முன்னின்று அவர்களை வழி நடத்திட வேண்டும் என நினைக்கிறார்கள். இதன் ஒரு விளைவாகவே ஆரம்ப எழுத்துகளில் தொடங்கும் பெயர்களைத் தங்களது குழந்தைகளுக்கு வைப்பதைத் தவிர்க்கும் மனநிலைக்கு அவர்கள் வந்தடைகிறார்கள்.

முதலில் பெயர் என்பது ஒரு தனிநபரை மட்டும் குறிப்பிடுவதல்ல. அது ஒரு முழுமையான அடையாளம். ஒரு தனிநபரின் மொழி, இன, பண்பாட்டு அடையாளங்கள் என அத்தனை கூறுகளையும் பிரதிபலிக்கும் ஒன்றாகவும் பெயர் அமைகிறது. பெரும்பாலான நாடுகளிலும் தனிநபரின் பிரத்யேகப் பெயருடன் பெற்றோர் பெயரும், குடும்பப் பெயரும் கட்டாயமாகச் சேர்க்கப்படுகின்றன. முதல் பெயர், மையப் பெயர், இறுதிப் பெயர் என மூன்று வகையான பெயருடனே ஒரு தனிநபர் குறிப்பிடப்படுகிறார். ஒரு தனிநபரை அவரது மொழி, இன, பண்பாட்டுக் கூறுகளோடு முழுமையாகப் புரிந்துகொள்வதுதான் இதன் நோக்கம். அந்த வகையில், பெயர் என்பது ஒருவரின் அத்தனை அடையாளங்களையும் அங்கு பிரதிபலிப்பதாக இருக்கிறது.

சாதிப் பெயர்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெற்றோர் பெயர், குடும்பப் பெயர்களையெல்லாம் பெயரோடு இணைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லை. அதற்குக் காரணம், பெருமளவு சாதியை உள்வாங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தில் குடும்பப் பெயர் என்பது பெரும்பாலும் சாதியப் பெயராகவே இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சாதியை எந்த வகையிலும் குறிப்பிடாத, காட்டிக்கொடுத்துவிடாத பெயர்களை வைப்பது ஒரு பண்பாட்டுச் சாதனையாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், குடும்பப் பெயரை நிராகரிப்பதையும் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தமிழ்ப் பெயர்களை நிராகரித்து எந்தவித அர்த்தமும் புரியாத வடமொழிப் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதை எப்படி விளங்கிக்கொள்வது? அறிவார்ந்த சமூகம் எனக் கருதப்படக்கூடிய தமிழ்ச் சமூகம் தனது குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதற்குக்கூடப் பிற மொழியை நாடிச் செல்வதை எப்படியும் நியாயப்படுத்த முடியாது. அதுவும் ‘அ’ முதலான உயிர் எழுத்துகளில் தொடங்கும் ஏராளமான, அழகான தமிழ்ப் பெயர்களை எல்லாம் ஏதேதோ தங்களுக்குத் தாங்களே கற்பித்துக்கொண்ட சில கற்பிதங்களுக்காக நிராகரிப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது.

அபத்தமான நம்பிக்கைகள்

செக் குடியரசில் 90,000 பல்கலைக்கழக மாணவர்களிடம், அவர்களின் பெயர் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று ‘எகனாமிக்ஸ் ஆஃப் எஜுகேஷன் ரிவ்யூ’ என்ற ஆராய்ச்சி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ‘ஆங்கில எழுத்துகளின் வரிசையில் முதலில் உள்ள எழுத்துகளிலிருந்து தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் பெரும்பாலான நேரங்களில் படிப்பில் சாதனையாளர்களாக இருக்கின்றனர்’ என்ற முடிவைச் சொல்லியிருக்கிறது.

பெயர் தொடர்பாக இது போன்ற ஏராளமான ஆராய்ச்சிகள் இணையம் முழுக்க இருக்கின்றன. அந்த ஆய்வு முடிவுகளையெல்லாம் பார்த்தால், பெயர் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் எத்தனை அபத்தமானது என்று புரியும். உதாரணத்துக்கு, குழந்தைகளுக்குத் தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று யாருக்குமே புரியாத, வாயிலேயே நுழையாத பெயர்களை எல்லாம் வைக்கிறோம்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்வு ‘எளிதாக உச்சரிக்கக்கூடிய பெயர்களைக் கொண்ட மாணவர்களும், பொதுவான பெயர்களைக் கொண்ட மாணவர்களும் படிப்பிலும் வேலையிலும் நேர்முகத் தேர்வுகளிலும் மிக சுலபமாகத் தேர்வாகிவிடுகின்றனர்’ என்கிறது. இன்று குழந்தைகளுக்கு வைக்கக்கூடிய பெயர்களில் எத்தனை பெயர்கள் மிகச் சுலபமாக உச்சரிக்கக்கூடியதாக இருக்கின்றன? இன்றைய தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் பேரக் குழந்தைகளின் பெயரை உச்சரிக்க முடியாமல் அவதிப்படுவதை எல்லா வீடுகளிலும் நாம் பார்க்கலாம். நம்மாலேயே உச்சரிக்க முடியாத பெயர்களை எல்லாம் அவர்கள் எப்படி உச்சரிப்பார்கள்?

தன்னை மொழியின் வழியாகவே அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கும் ஒருவர், தனது பெயரில் எப்போதும் தனது மொழியைப் பிரதிபலித்துக்கொண்டிருப்பார். தமிழ் என்பது ஒரு நாகரிகத்தின் மொழி என்பதை உணர்ந்தால், நிச்சயம் நமது குழந்தைகளுக்கான பெயரை வேறு மொழியில் நாடிச் செல்ல மாட்டோம். அப்படி, தமிழ் மொழியைத் தேர்வுசெய்யும் ஒருவர் ‘அ’வில் தொடங்கும் அழகான தமிழ்ப் பெயர்களை எந்த வகையிலும் நிராகரிக்க மாட்டார் என்பதையும் முழுமையாக நம்புகிறேன்.

- சிவபாலன் இளங்கோவன்,

மனநல மருத்துவர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: sivabalanela@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x