Published : 27 Aug 2015 10:05 AM
Last Updated : 27 Aug 2015 10:05 AM

மெல்லத் தமிழன் இனி 2 - கரும்பாலைகளுக்குக் கைகொடுக்கும் மின்உற்பத்தி!

தமிழகத்தின் 11 மதுபான ஆலைகளின் லாபத்துக்காக 42 சர்க்கரை ஆலைகளும் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளன என்றே கருத வேண்டியிருக்கிறது!

எத்தனால் உபயோகத்தால் கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகள் இருதரப்புக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள், சுற்றுச்சூழல் மேம்பாடு இவற்றை எல்லாம் பார்த்தோம். ஆனால், தமிழகத்தில் இவை நடைமுறைக்கு வராமல் இருப்பதற்கு ஒரே காரணம், மது உற்பத்தி மட்டுமே. சொல்லப்போனால், தமிழகத்தின் 11 மதுபான ஆலைகளின் லாபத்துக்காக 42 சர்க்கரை ஆலைகளும் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளன என்றே கருத வேண்டியிருக்கிறது. மதுவிலக்கு ஒன்றே இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும்.

தமிழகத்தில் எத்தனால் எரிபொருள் பயன்பாடு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால், தமிழகத்திலுள்ள தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான 42 சர்க்கரை ஆலைகளும் முழுவீச்சில் எத்தனால் தயாரிப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். ஏனெனில், நாட்டிலேயே பெட்ரோல் பயன்பாட்டில் மகாராஷ்டிரத்துக்கு (சுமார் 21 லட்சம் டன்) அடுத்தபடியாக 14.70 லட்சம் டன் பயன்பாட்டுடன் தமிழகம் இரண்டாம் இடத்திலிருக்கிறது. இதனால் பற்றாக்குறை காரணமாகப் போட்டி அதிகரித்து, எத்தனாலுக்குக் கூடுதல் விலை கிடைக்கும்.

இது இல்லாமல் சர்க்கரை ஆலைகள் மேலும் மேம்பட இன்னொரு வழியும் இருக்கிறது. ஆலைகளில் இப்போது இருக்கும் மின்உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும். கூடுதல் மின்உற்பத்தி மையங்களை அமைக்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் செய்யப்படும் மின்உற்பத்தியானது, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காதது. இதை இணைத் தயாரிப்பு என்கிறார்கள். அதாவது, மின்உற்பத்திக்காக நிலக்கரி போன்று கூடுதலாக எந்த எரிபொருளும் தேவையில்லை. தொழிற்சாலையிலிருந்து கிடைக்கும் கழிவை எரிபொருள் மூலமாகப் பயன்படுத்தி, கூடுதலாக மின்சாரத்தையும் தயாரிப்பதுதான் இந்தத் தொழில்நுட்பம். பாரம்பரியமான மின்நிலையங்களில் கொதிகலனில் எரிபொருளை இட்டு எரித்து, உயர் அழுத்தத்தில் நீராவியை உற்பத்திசெய்து, அந்த ஆற்றலைக்கொண்டு சுழலிகளை ஓடவிட்டு மின்சாரம் தயாரிப்பர். அதேபோலத்தான் சர்க்கரை ஆலைகளிலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை உற்பத்திக்காக அரைக்கப்படும் கரும்பிலிருந்து கிடைக்கும் சக்கைதான் இதற்கான கச்சாப்பொருள். 10 டன் கரும்பை அரைக்கும்போது சுமார் 3 டன் சக்கை கிடைக்கும். இதன் மூலம் கரும்புச் சக்கை வீணாவதையும் தடுக்கலாம்.

ஆனால், பெரும் செலவு பிடிக்கும் திட்டம் இது. ஒரு மெகா வாட் மின்உற்பத்திக்கான நிலையத்தை அமைக்க சுமார் ரூ. 4.5 கோடி செலவாகிறது. ஆனால், இந்த வகையிலான மின்சாரம் தயாரிப்பு, பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கும் வகையிலான, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத திட்டம் என்பதால், மொத்த முதலீட்டில் மத்திய அரசு 30%, மாநில அரசு 3% தருகின்றன. தற்போது நாடு முழுவதுமிருக்கும் 642 சர்க்கரை ஆலைகளில் 527 ஆலைகளில் மட்டும் மிகக் குறைந்த அளவிலான மின்சாரம் இந்த வழியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகளில் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் மின்தேவையைப் பொறுத்தவரை அது யானைப் பசிக்கு சோளப்பொரிபோலத்தான். மேலும், சொற்ப அளவிலான மின்உற்பத்தியால் ஆலை களுக்கும் பெரிய அளவில் லாபம் இல்லை. மின்உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்தி, மின்உற்பத்தியை இருமடங்காக அதிகரிக்கும்போதுதான் லாபம் அதிகரிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். இதற்கு அரசுத் தரப்பிலிருந்தும் உதவிகளை எதிர்பார்க்கின்றன சர்க்கரை ஆலைகள்.

மதுவிலக்கு கொண்டுவந்தால் சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பார்த்தோம். அதேசமயம், கோடிக்கணக்கில் செலவுசெய்து நிறுவப்பட்டிருக்கும் மதுபான ஆலைகளை என்ன செய்வது?

- டி.எல்.சஞ்சீவிகுமார்

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in தெளிவோம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x