தண்ணீர்ப் பற்றாக்குறை மட்டும் அல்ல; தண்ணீர் கெட்டுப்போவதும் பிரச்சினைதான்!

தண்ணீர்ப் பற்றாக்குறை மட்டும் அல்ல; தண்ணீர் கெட்டுப்போவதும் பிரச்சினைதான்!
Updated on
2 min read

குடிநீரின் தன்மை தொடர்பாக ‘இந்தியத் தர நிறுவனம்’ (பிஐஎஸ்) அளித்த அறிக்கை அரசியலாகிவிட்டது. பொதுச் சுகாதாரம் மேம்படவும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் தண்ணீர் மிகவும் அவசியம். இதற்காகவே அதி விரைவாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகத் தண்ணீர் இருக்கிறது. தங்களுக்குத் தெரியாமலே, தங்களின் சம்மதம் இல்லாமலே உடல்நலக் குறைவுக்கு ஆளாகிறார்கள் மக்கள். குடிநீர் கெட்டுப்போனால் மக்களின் உடல்நலனும் கெட்டுப்போகும். ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு வரும்போது மட்டுமே அக்கறை செலுத்தப்படும் விஷயமாகத் தண்ணீர் இருக்கிறது. அது தவறான அணுகுமுறை.

‘ஜல் ஜீவன்’ இயக்கம் தொடர்பாக இந்தியாவின் 21 பெரிய நகரங்களின் தண்ணீர் தன்மை குறித்து 2019 நவம்பரில் அறிக்கை வெளியானது. 2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் மூலம் வழங்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, கிடைக்கும் தண்ணீரின் அளவு, தரம் பற்றிய தரவுகள் திரட்டப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் நீரின் தரத்தை ஓராண்டுக்குள் ஆய்வுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமாகியிருக்கும் குடிநீர்

‘டெல்லி மாநகரக் குடிநீர், குடிப்பதற்கு அபாயகரமானது’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நல்ல குடிநீருக்கு இருக்க வேண்டிய 28 தகுதிகளில் 19 அதற்கு இல்லை. ஆனால், இந்த ஆய்வு முடிவை மத்திய அரசும், டெல்லி தண்ணீர் வாரியமும் ‘இது சரி இல்லை’ என்று வாதிடுகின்றன.

இந்தியா கடுமையான தண்ணீர் நெருக்கடியில் ஆழ்ந்துவருகிறது. நபர்வாரியாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காதது மட்டும் பிரச்சினையல்ல; ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் அந்தந்தப் பகுதி கழிவுநீர் கலப்பது எந்தவிதத் தடையும் இல்லாமல் தொடர்கிறது. தண்ணீர் வளம் தொடர்பான எந்தக் கூட்டத்திலும் இதற்கு முக்கியத்துவம் தந்து விவாதிப்பதில்லை. பெருநகரச் சாக்கடை நீரில் 30% அளவுக்கு மட்டுமே சுத்திகரிக்கும் திறன்தான் நம்மிடம் உள்ளது. சிறு நகரங்கள், பேரூராட்சிகள், கிராமங்களைப் பற்றிப் பேசவே வேண்டாம். நகரம், கிராமம் என்று அனைத்திலும் ஊர்ச் சாக்கடை நீர் தடுக்கப்படாமல் அப்படியே நீர்நிலைகளில் கலக்கவிடப்படுகிறது.

60 கோடி இந்தியர்கள் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் நல்ல குடிநீர் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். இந்த நெருக்கடி மேலும் முற்றத்தான்போகிறது என்பதில் இரண்டாம் அபிப்பிராயம் கிடையாது. 2030-ல் கிடைக்கும் தண்ணீரைப் போல இரண்டு மடங்கு அளவுக்குத் தேவை இருக்கப்போகிறது. அப்படியென்றால், மேலும் பல கோடிப் பேர் குடிப்பதற்குப் போதிய நல்ல குடிநீர் கிடைக்காமல் அவதிப்படப்போகிறார்கள்.

காத்திருக்கும் நெருக்கடி

2011 கணக்கெடுப்பின்படி டெல்லியில் 33.41 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 27.16 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் கிடைக்கிறது. இது மொத்தத்தில் 81.30%. அதிலும், 75.20% வீடுகளுக்கு மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீரை வடித்து, தூய்மைப்படுத்தி குளோரின் போன்றவை சேர்த்து வழங்குகிறார்கள். ஹரியாணாவிலிருந்து யமுனை நதியில் திறந்துவிடப்படும் நீரில் மீத்தேன் அளவு அதிகமாகிவிட்டால், தண்ணீர் வழங்கலை உடனே நாள்கணக்கில் நிறுத்த நேர்கிறது. மீத்தேன் அதிகமுள்ள நீரைச் சுத்திகரித்தால் அது வேதிவினை புரிந்து புற்றுநோயை உண்டாக்கக்கூடும். புற்றுநோய் வருவது உடனே தெரியாது, சில ஆண்டுகளுக்குப் பிறகே தெரியவரும்.

யமுனையின் மொத்த நீ்ர்ப்பிடிப்புப் பகுதியில் டெல்லி நகரப் பரப்பு 1%தான். ஆனால், நதியில் சேரும் கழிவில் 50%-க்கும் மேல் டெல்லியுடையது. வசீராபாத் முதல் ஓக்லா தடுப்பணை வரையில் 22 கிமீ நீளத் தொலைவில், நகரக் கழிவுகள் யமுனையில் கலக்கின்றன. டெல்லியின் கழிவுநீருக்கு 24,000 கிமீ நீளக் கழிவுநீர்க் கால்வாய் தேவைப்படுகிறது. ஆனால், 7,000 கிமீ தொலைவுக்கே கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. நகரின் 17 கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் 30% கழிவுநீரை மட்டுமே சுத்தப்படுத்துகின்றன. அரசால் அங்கீகரிக்கப்படாத, ஆனால் வரன்முறைப்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் 45% இடங்களுக்குக் கழிவுநீர்க் கால்வாயே கிடையாது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றை 18 பெரிய கால்வாய்கள் யமுனையில் தினமும் கொண்டுசேர்க்கின்றன.

கழிவு மேலாண்மை போதாது

இந்தக் கழிவுகளுடன் திடக் கழிவுகளும் கட்டிடங்களில் உடைக்கப்படும் செங்கல், காரை உள்ளிட்டவையும் யமுனையில்தான் கொட்டப்படுகின்றன. தனிநபர்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி மன்றங்கள் என்று அனைவருக்குமே இதில் பங்கு உண்டு. யமுனையில் வெள்ளம் வந்தால் தண்ணீர் வடியக்கூடிய பக்கவாட்டு கரைப் பகுதிகள் முழுக்கக் குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, சுத்தமான குடிநீரை வழங்க அதிக செலவு பிடிப்பதுடன், நிர்வாகத்தையும் சீரமைக்க வேண்டியிருக்கிறது. தண்ணீரின் தரத்தை அளக்கவும் கட்டுப்படுத்தவும் நவீனத் தொழில்நுட்பம் அவசியம். இது இல்லாதது டெல்லி குடிநீர் வாரியம் (டெல்லி ஜல் போர்டு) அல்லது டெல்லி அரசின் குற்றமல்ல என்றாலும், மக்களுக்கு 100% தூய்மையான குடிநீரைத் தர வேண்டியது அவர்களுடைய கடமை. தண்ணீர் வள நிர்வாகமும் சட்டங்களும் அரசுகளுக்குப் பெருத்த சவால்களாகத் திகழ்கின்றன.

‘ஜல் ஜீவன்’ இயக்கம் முழு அளவில் உருவாகவில்லை, வடிவமைக்கப்படவில்லை, முழுமையாக நிதி வழங்கப்படவில்லை. ஆனாலும், தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கி விட்டது நல்ல அறிகுறி. அத்துடன் அந்தத் தரவுகளை வெளிப்படையாக அனைவரும் பகிர்ந்துகொள்ள வழிசெய்திருப்பது மேலும் சிறப்பு. இதனால், டெல்லி சட்டமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலின்போது தண்ணீரின் தரம் குறித்து அரசியல் மேடைகளில் விவாதம் நடந்தது. இனி வேலைகள் நடைபெற வேண்டும்.

© ‘தி இந்து’, தமிழில்: சாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in