Published : 04 Mar 2020 07:58 am

Updated : 04 Mar 2020 07:58 am

 

Published : 04 Mar 2020 07:58 AM
Last Updated : 04 Mar 2020 07:58 AM

கிரேட் பாம்பே சர்க்கஸ்: போய்வா சாகசமே!

great-bombay-circus

‘கோவிட்-19’: ஜப்பானிய அரசின் தோல்வி

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ‘கோவிட்-19’-யை அடையாளம் காண்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் ஜப்பானிய அரசு தவறிவிட்டது. ‘டயமண்ட் பிரின்சஸ்’ என்ற உல்லாசக் கப்பல் 2,600 பயணிகளுடனும் 1,100 கப்பல் ஊழியர்களுடனும் ஜப்பானை நோக்கி வந்தது. பயணிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த யோகஹாமா துறைமுகம் அருகில் நிறுத்தப்பட்டது. 72 மணி நேரம் கடந்தும் பயணிகளைப் பரிசோதிக்கவில்லை. கப்பலில் இருந்தவர்களும் நிலைமையை உணராமல் பொழுதுபோக்கினர். கப்பலில் உள்ளவர்களைப் பார்க்க முதலில் சென்ற 90 பேரில் 8 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி நகருக்குள் வந்தனர். கப்பலுக்குள் சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள், கிருமிநாசினி தெளிக்கப்பட்ட முழு உடை, கையுறைகூட அணியாமல் இருந்தனர். அவர்கள் நேராக அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். நோய் பாதிப்பு சோதனைகளுக்காகத் தனி இடத்தில் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. கப்பல் ஊழியர்களும் சளி, காய்ச்சல், தலைவலி அறிகுறிகளுடனேயே வேலைசெய்தனர். கப்பலைத் துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தினார்களே தவிர, நோய் பாதித்தவர்களுக்கு நகரில் தனி வார்டு அல்லது மருத்துவமனையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஒருவருக்கும் தோன்றவில்லை. இப்போது ஜப்பானியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கப்பலைக் கவனமாகக் கையாளாததால் வந்த விளைவு இது. வழக்கமான அரசு நிர்வாகத்தை மிகுந்த அக்கறையோடு செய்யும் ஜப்பானியர்கள், நெருக்கடிநிலை வந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது வியப்புக்குரியது.


அரசியல்மயமாகும் இன்ஸ்டாகிராம்

இந்தியாவில் தற்போது 26 கோடிப் பேர் ஃபேஸ்புக்கிலும், 77.5 லட்சம் பேர் ட்விட்டரிலும் இருக்கின்றனர். உலக அளவில் நூறு கோடிப் பயனர்களையும், இந்தியாவில் 6.9 கோடிப் பயனர்களையும் இன்ஸ்டாகிராம் கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துபவர்களில் உலக அளவில் 70% பேர் 35 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். எழுத்துகளைவிட படங்களையே இளம் தலைமுறையினர் விரும்புவது இதன் மூலம் தெரியவருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் அரசியல், சமூகக் கருத்துகளைப் பதிவிடுவது அதிகமாக இருக்கிறது. அவற்றில் உறவினர்களின் குறுக்கீடு அதிகமாக இருப்பதால், இளம் தலைமுறையினர் தங்களின் அரசியல் கருத்துகளை வெளியிடுவதற்கு இன்ஸ்டாகிராமையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துத் தெரிவிக்க நிறைய பேர் இன்ஸ்டாகிராமைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். படம் நிறைய பேசும் என்பதற்காக இந்த வழிமுறையைத் தேர்ந்தெடுக்கிறார்களோ?

கிரேட் பாம்பே சர்க்கஸ்: போய்வா சாகசமே!

சமீபத்தில் சென்னைக்கு வந்து சென்றிருக்கிறது ‘கிரேட் பாம்பே’ சர்க்கஸ். 1920-ல் நிறுவப்பட்ட அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு இது நூற்றாண்டு. திருவிழாபோல இந்த நூற்றாண்டு கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் இல்லையா? ஆனால், அப்படி இல்லை. பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்திருக்கிறது. பாம்பே சர்க்கஸுக்கு மட்டுமல்ல; இந்தியாவின் பிற சர்க்கஸ் கம்பெனிகளுக்கும் இதே நிலைதான். இன்று மூன்று சர்க்கஸ் கம்பெனிகள்தான் இந்தியா முழுவதுமே இருக்கின்றன. சர்க்கஸில் காட்டு விலங்குகள் பயன்படுத்தப்படக் கூடாது என்றது, சர்க்கஸ் நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி. ஏனெனில், விலங்குகளைப் பார்க்கத்தான் பெரும் கூட்டம் வந்துகொண்டிருந்தது. அதையடுத்து, தொலைக்காட்சியின் வரவு பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தது. பெருத்த சேதம் என்பது இணையம், செல்பேசியின் வரவுக்குப் பிறகுதான். சர்க்கஸில் நேரில் பார்க்கும் சாகசங்களையெல்லாம் ஒரு விரலால் அழுத்தி செல்பேசியிலேயே பார்த்துவிட முடிகிறது. இந்தச் சூழலிலும்கூட, மேலை நாடுகளின் சர்க்கஸ் நிறுவனங்கள் சில வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம், சர்க்கஸையும் அவர்கள் நவீனமயமாக்கியதே. வழக்கமான சர்க்கஸ் சாகசங்களை இசை, நடனத்துடன் கலைநயமாக அவர்கள் வழங்குகிறார்கள். நம் நாட்டு சர்க்கஸோ இன்னும் மரபான சாகஸத்துடனேயே நின்றுவிடுகிறது. வழக்கமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்தில்தான் சர்க்கஸ் நடக்கும். ரயில்வேக்குச் சொந்தமான அந்த இடத்தை அது வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இனி ‘கிரேட் பாம்பே’ சர்க்கஸ் சென்னைக்கு வருமா என்பது சந்தேகம்தான்.


Great bombay circusகிரேட் பாம்பே சர்க்கஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x