Published : 03 Mar 2020 08:27 am

Updated : 03 Mar 2020 08:27 am

 

Published : 03 Mar 2020 08:27 AM
Last Updated : 03 Mar 2020 08:27 AM

அதிகார மையத்திலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறீர்களோ அவ்வளவுக்கு மக்களுடன் நெருங்க முடியும்!- கேரி யங் பேட்டி

gary-younge-interview

மீரா சீனிவாசன்

பிரிட்டனின் புகழ்பெற்ற ‘தி கார்டியன்’ பத்திரிகையின் நீண்ட கால அமெரிக்க நிருபராகவும், உலா ஆசிரியராகவும் இருபதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் கேரி யங். சமூகங்களில் நிலவும் சுரண்டல்களையும் ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தும் அவர் எழுத்துகள் மிகுந்த செல்வாக்கு செலுத்துபவை. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் யங், தன்னுடைய ஊடக அனுபவங்களை விரிவாகப் பேசியதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே...

செய்தியாளராக உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களில் தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மதிப்புமிக்கது எது?


2008 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சிகாகோவின் கிராண்ட் பார்க்கில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்குச் செல்லாமல், கறுப்பர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றேன். அங்கிருந்த விடுதியில் ஒருவரைக் கண்டேன். தேர்தல் நாளில் நான் அவருடன் சென்றேன். தேர்தல் முடிவு வெளிவரத் தொடங்கியபோது அவருடன் இருந்தேன். ஒபாமா வெற்றியடைந்ததைப் பார்த்து அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். வாக்களிப்புக்கு முதல் நாள் அதே விடுதியில் ஒரு பெண்ணிடம் பேசினேன். “அமெரிக்கா நிறவெறி நாடு, ஒபாமாவால் வெற்றி பெற முடியாது” என்றார் அவர். தேர்தல் முடிவு வெளியான அன்று அந்தப் பெண்மணியின் முகமே மாறியிருந்தது. “இனி என் கணவர் வீடு திரும்பிவிடுவார், அவர் ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணி செய்கிறார்” என்றார். சில விநாடிகளுக்கெல்லாம், “இல்லை, அவர் வருவது சந்தேகம்தான், ஒபாமாவும் போரை ஆதரிக்கிறாரே?” என்றார். ஒபாமாவின் தேர்தல் உரைகளைக்கூட கவனமாகக் கேட்காமல், அவர் வந்தால் இதைச் செய்வார், செய்ய மாட்டார் என்று மக்கள் தாங்களாகவே எண்ணங்களை வளர்த்துக்கொண்டனர். கிராண்ட் பார்க் கூட்டத்துக்குப் போயிருந்தால் இவை என் கவனத்துக்கு வந்திருக்காது. அதிகார மையங்களிலிருந்து நீங்கள் எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களால் மக்களுடன் நெருங்க முடியும், சமூகத்தைப் பார்க்க முடியும். சில வேளைகளில் எதுவெல்லாம் செய்தியாகக் கருதப்படுவதில்லையோ அவையே உண்மையில் செய்திகள். அதிகார மையங்கள், அதிகாரமுள்ளவர்கள் பற்றியவை மட்டுமே பெரும்பாலும் செய்திகளாகக் கருதப்படுகின்றன. செய்தித்தாள்களின் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களுக்கு எது அனுபவமில்லையோ அதை அவர்கள் செய்தியாகக் கருதுவதுமில்லை. மனிதனை நாய் கடித்தால் செய்தியில்லை, நாயை மனிதன் கடித்தால்தான் செய்தி என்று இலக்கணம் பேசுவார்கள். இது எனக்குப் புரிகிறது. அந்த நாய்க்குச் சொந்தக்காரர் யார், அது ஏன் மக்களைக் கடித்துக்கொண்டே இருக்கிறது, ஏன் அதே மக்கள் தொடர்ந்து கடிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். செய்தி எப்போதுமே சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்பது நிச்சயமில்லை; செய்தியைத் தருபவர்களுக்கே அது ஆயாசத்தைக் கொடுத்தால், வாசிப்பவர்களின் நிலை அதைவிட மோசமாகிவிடும். எனவே, செய்தியில் புதிதாகவும் வித்தியாசமாகவும் எதைச் சேர்க்கலாம் என்று யோசிக்க வேண்டும்.

நீங்கள் ‘ஒடுக்குவளையம்’ (இன்டர்செக்சனாலிட்டி) என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படாத காலத்திலேயே நிறம், வர்க்கம் குறித்து அதிகம் எழுதினீர்கள். அசமத்துவம் என்பது எல்லா நிறத்தாரிடமும் இனத்தாரிடமும் இருக்கிறது என்று குறிப்பிட்டீர்கள். வர்க்கம் என்ற கட்டமைப்பு உங்களுடைய சிந்தனைக்கும் எழுத்துக்கும் எப்படி உதவியது?

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் நடுவே வளர்ந்தேன். மார்க்ஸ், டிராட்ஸ்கி மூலம்தான் எனக்கு அரசியல் அறிமுகமானது. மால்கம் எக்ஸ், அமிரி பராக்கா பிறகுதான் என்னுள் வந்தார்கள். தனிப்பட்ட முறையில் சிலர் வர்க்கம் என்பார்கள், சிலர் இனம் என்பார்கள். நான் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த கறுப்பன். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. இவ்விரண்டும் அறிவுநிலையில், சமூகநிலையில் இணைந்து செயல்படக்கூடிய இடத்தை நான் கண்டாக வேண்டும். இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைக் கைவிடுமாறு யாரும் என்னைக் கேட்காமலும் இருக்க வேண்டும். பாலினச் சமத்துவமும் கவனிக்கப்பட வேண்டியது. பெண்ணியம் இல்லாமல் சமத்துவம் பெற முடியாது. இன, நிற வெறியை ஒழிக்காமல் சமத்துவத்தை அடைய முடியாது. ஒரு அடையாளத்தைச் சேர்க்காதவரை இதில் அர்த்தம் ஏதுமில்லை. ஒரு பிரிவு மக்களை இன்னொரு பிரிவு மக்களுக்கு எதிராக நிறுத்த முயல்வோர் இவற்றைப் புரிந்துகொள்ளப்போவதில்லை.

வர்க்கம் தொடர்பாக எனக்கு ஏற்பட்ட புரிதல் காரணமாக, சில நேரடி உதாரணங்களை என்னால் நினைவுகூர முடியும். என்னுடைய முதல் பெரிய வேலையே தென்னாப்பிரிக்கத் தேர்தல் செய்திகளைத் திரட்டுவதுதான். ‘இவ்வளவு ஏழைகளாக இருக்கிறார்களே, இந்தத் தேர்தலால் என்ன மாற்றம் இவர்களுக்கு ஏற்பட்டுவிடப்போகிறது; நகரியங்களில் வாழ்பவர்கள் சட்டத்தை மதியாத கொள்ளைக்காரர்களைப் போல காணப்படுகிறார்களே!’ என்று சிந்தனையில் ஆழ்ந்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே சென்றபோது வெள்ளையர்களின் தலைநகரமும் கறுப்பர்களின் அரசியலும் ஏதோ ஒரு நிலையில் இணைந்திருப்பதைக் கண்டேன். கறுப்பர்களிலும் பூர்ஷ்வாக்கள் உண்டு; ஆனால், அவர்கள் பணம் படைத்தவர்கள் அல்லர். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவர்களிடமும் பணம் குவிந்தது, வெகு விரைவான மாற்றங்கள் அவர்களுக்குள் நிகழ்ந்தன. இதுதான் சாத்தியம், இதைத் தவிர்க்கவும் முடியாது என்று தெரிந்துகொண்டேன். இப்போது குறிப்பிட்ட அளவுக்கு ஜனநாயகம் வளர்ந்துவிட்டது. அது சமூகத்தில் நிலவும் பெருமளவிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு எந்த வகையிலும் பொருந்திவராமலும் இல்லை. அங்கே மக்களின் பங்கேற்போடு மிகப் பெரிய போராட்டம் நடந்திருந்தாலும் சிலர் மட்டும் பணக்காரர்களானது முரணாக இருந்தாலும் அது அப்படித்தான் இருந்தது, இருக்கும் என்றும் புரிந்தது. அதேபோல, ஒபாமா அமெரிக்க அதிபரானபோதும் அந்த அடையாள நிகழ்வின் தன்மையைப் புரிந்துகொண்டேன். உண்மையில், கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான இடைவெளி மேலும் வளர்ந்தது. கறுப்பர்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் பெறுகிறார்களோ அதைப் பொறுத்துத்தான் ஒபாமா அதிபரானதற்கும் செறிவான அர்த்தம் இருக்க முடியும். ஆனால், அப்படி நேரவில்லை. வர்க்கத்திலும் அரசியலிலும் முரண்கள் அநேகம்.

உலகாயதமாகத் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும் உழைக்கும் வர்க்கம் ‘சில’வற்றை வேறு நலன்கள் கருதி ஆதரிக்கும். ‘பிரெக்ஸிட்’ குறித்து நான் எழுதியதைப் படித்துவிட்டுப் பலர் கோபமடைந்தனர். உழைக்கும் மக்கள் தங்களுடைய பணப் பயன்களுக்காக மட்டும் வாக்களிப்பதில்லை, அவர்களுக்கு வேறு நோக்கங்களும் உண்டு என்று எழுதியதைப் பலரும் ஏற்கவில்லை. அவர்களுடைய வேறு நோக்கங்கள் எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் நான் வசதியானவன். இடதுசாரி கட்சிக்கு வாக்களிக்கும்போதெல்லாம் என்னுடைய உலகாயத நலனுக்கு எதிராகத்தான் வாக்களிக்கிறேன். காரணம், நான் விரும்புவது வேறு. உழைக்கும் வர்க்கத்தினர் மட்டும் பணப் பயன்களில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்ற கண்ணோட்டம் தவறானது. அவர்களுடைய வேறு நோக்கங்கள் என்ன என்று பார்த்தால் அவற்றில் பலவற்றை நாம் ஏற்காமல் நிராகரிப்போம். ஒபாமாவை ஆதரித்தவர்களில் கறுப்பர்கள் அதிகம். அவர் அதிபரானதால் அவர்களுக்கு ஊதியமோ வேறு பலன்களோ அதிகரித்துவிடவில்லை. இருந்தாலும், அவரை ஆதரிக்க வேண்டும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்தனர். மற்ற பிரச்சினைகளைவிட கருக்கலைப்புக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். தேர்தலில் தோற்பதோ வெல்வதோ முக்கியமில்லை. இன, நிறரீதியாக நாங்கள்தான் மேலானவர்கள் என்று சிலர் நினைப்பார்கள். பிரிட்டன் சுதந்திரமாக இருக்க வேண்டும், நானும் மதிப்பு மிக்க பிரிட்டிஷ் குடிநபராகத் தொடர வேண்டும், இந்த ஆலை மூடியிருக்கிறதே அதற்கென்ன பதில் என்று என்னிடம் கேட்கக் கூடாது - காரணம் இது என்னுடைய ஆலை இல்லை என்று பலரும் நினைக்கக்கூடும்.

வர்க்கரீதியான பகுப்பாய்வு எதையும் எளிமையாக்குவதில்லை. சில வழிகளில் நான் குழப்புவேன், சிலவற்றில் நான் தெளிவுபட வைப்பேன். நிறம், பாலினம், பாலின விழைவு, மதம் ஆகியவை தொடர்பாக வர்க்கப் பகுப்பாய்வு இன்றி மக்கள் பேசுவதைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் அடிப்படைவாதத்தை நோக்கியே செல்வது புரியும். நான் எல்லாவித அடிப்படைவாதங்களுக்கும் எதிரானவன்.

அமெரிக்கா, பிரிட்டன், தெற்காசியா நாடுகளில் வெறுப்பரசியல் வளர்ந்துவருகிறதா? ஊடகம் இதில் செய்யக்கூடியது என்ன?

ஊடகங்கள் செய்துகொண்டிருப்பது வெறுப்பரசியலை மேலும் தீவிரப்படுத்துவதுதான்; இந்த அரசியலை வளர்ப்பதும் ஊடகங்கள்தான். ஊடகத்தின் உண்மையான வேலை என்னவென்றால் உண்மைகளைச் சொல்வதும் மக்களுக்குத் தகவல்களை அளிப்பதும் மட்டுமே. விருப்பு-வெறுப்பு இல்லாமல் செய்தியை மட்டும் தர வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. செய்திகள் நேர்மையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். ஊடகக்காரர்களுக்குக் கடமைகள் உண்டு. வேலையில்லை என்பதை மட்டும் சொல்லாமல், ஏன் வேலையில்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், தவறான தகவல்களாலும் தேவையற்ற தகவல்களாலும் படிப்பவர்கள் மனதில் ஒரு ‘எதிரி’ உருவாவார். மதம் அல்லது இனம் அடிப்படையில் மக்கள் அணிதிரள்வார்கள்.

உண்மையில் ஏழைகள், குடியேறிகள், இடம்பெயரும் தொழிலாளர்கள், அகதிகள் போன்றோரால் எந்த நாட்டின் பொருளாதாரமும் சீர்குலையாது. அப்படி கருத்து தொனிக்கும்படி எழுதினால், அந்த சீர்குலைவுக்குக் காரணம் நீங்கள்தான். மக்களுடைய மனிதாபிமானத்தை வலியுறுத்தித்தான் எழுத வேண்டும். அதை அவர்களுக்குள் மீண்டும் புகுத்த எழுத வேண்டிய தேவையில்லை. காரணம், மனிதாபிமானம் மனிதர்களை விட்டு எந்நாளும் அகல்வதே இல்லை. ஊடகங்கள்தான் மக்களிடமிருந்து மனிதாபிமானத்தை விலக்குகின்றன. ஊடகம் என்பது அரசியலுக்கு வெளியேயும், சமூகத்துக்கு அப்பாலும் இருப்பதாக நினைப்பதை நாம் நிறுத்த வேண்டும். அரசியலிலிருந்து ஊடகத்தைப் பிரிக்க முடியும் என்று நான் கருதவில்லை. அரசியலும் ஊடகமும் இணக்கமான உறவுள்ளவை. என்ன நடந்ததோ அதை மட்டும் எழுத வேண்டும். உண்மைகளை மட்டும் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.

2017 கோடை காலத்தில் அமெரிக்காவின் சாதாரண மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய நாடு முழுக்கச் சுற்றிவந்தீர்கள். 2019-ல் இடதுசாரிகளின் கருத்துகளை அறியச் சென்றீர்கள். அதிபர் பதவிக்கான இப்போதைய தேர்தல் குறித்தும் ட்ரம்பின் அரசியலுக்கான எதிர்ப்பு குறித்தும் என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்ப்பு கணிசமானது. அது அதிகரித்திருக்கிறது. நிறைய போராட்டங்கள் நடக்கின்றன. ஒவ்வொன்றும் தொடக்கத்தில் உயிர்ப்பாக நடந்து பிறகு மறைந்துவிடுகின்றன. இவை மக்கள் இயக்கங்கள் என்பதற்கு ஏற்றவை அல்ல. ‘வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்’ கிளர்ச்சியானது ஓரளவுக்கு மக்கள் இயக்கத்துக்கு நெருக்கமானது. எஞ்சியவற்றுக்கெல்லாம் அலுவலகமோ கட்டமைப்போ கிடையாது. மக்கள் உரிமைகளுக்கான இயக்கம் என்றால் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், கூட்டம் ஏற்பாடு செய்யப்படும், கடிதங்களைத் தயாரித்து அனுப்புவார்கள், போராட்டத்துக்கு வடிவம் இருக்கும். இவற்றில் அதுபோல இல்லை.

அப்போதெல்லாம் தொழிற்சங்கங்கள் துடிப்பாக இருந்தனவே?

ஆம், குறைந்தபட்சம் தொழிற்சங்கத் தலைமைகளாவது அப்படி இருந்தன. கறுப்பர்களை வேலைக்கு வைக்கக் கூடாது என்று தொழிலாளர்களிலேயே கீழ்நிலை வெள்ளையினத்தவர் எதிர்த்துள்ளனர். 1963-ல் அது மறக்கப்பட்டு, வேலைக்காகவும் விடுதலைக்காகவும் அனைவரும் பேரணியாகச் சென்றனர். இப்போது தொழிற்சங்க இயக்கம் வலுவாக இல்லை. இப்போதைய இயக்கங்கள் திடீரென வெடித்து பிறகு அடையாளமின்றி மறைகின்றன. சமூக ஊடகங்கள் அவற்றை நச்சாக்கிவிடுகின்றன. விரைவிலேயே அவை சிதைகின்றன. தொழிற்சங்கங்கள் நாம் பார்த்தே இராத மிகப் பெரிய ஆர்பாட்டங்களை முன்னர் நடத்தின; மிகவும் பலவீனமான அல்லது அடையாளமே இல்லாத ஆர்பாட்டங்களையும் நடத்தின. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அமெரிக்காவில் நான்கு அல்லது ஐந்து மக்கள்திரள் ஆர்பாட்டங்கள் பெரிதாக நடந்துள்ளன. இருந்தும், ட்ரம்பை எதிர்க்கவும் அவருடைய வெற்றியைத் தடுத்து நிறுத்தவும் ஒரே அமைப்பு ஜனநாயகக் கட்சி மட்டுமே. இப்போது அதைச் செய்யும் ஆற்றல் அக்கட்சியிடம் இல்லை. பெருந்தொழில் நிறுவனங்களின் நலன்தான் அதற்கு முக்கியமாகத் தெரிகிறது. அது தன்னுடைய ஆற்றல் முழுவதையும் அடுத்த தேர்தலுக்கு மட்டுமே செலவழிக்கிறது. தேர்தலுக்கு இடையூறான எதையும் அது பரிசீலிக்கத் தயாரில்லை. ஆனால், ட்ரம்ப் அந்த வகையில் பதவியைப் பிடிக்கவில்லை. தேநீர் சந்திப்புக் கூட்டங்கள் மூலம் வென்றார். அந்தக் கூட்டங்கள் தோல்வியுற்றன. ஆனால், ஒவ்வொரு கூட்டமும் சமூகத்தின் ஏதாவதொரு பகுதி மக்களுடைய எண்ணங்களை ஈர்த்தன. இது பிரிட்டனுக்கும் பொருந்தும். பிரெக்ஸிட் இயக்கத் தலைவர் நைஜல் ஃபாரேஜ் தனது அரசியல் வாழ்வில் ஒரு தேர்தலில்கூட வென்றதில்லை. ஐரோப்பியத் தேர்தலில் மட்டும் வென்றிருக்கிறார். இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை அவரால் முறிக்க முடிந்தது. உலகமெங்கிலும் இப்போது பத்திரிகைகளை நடத்துவதற்கு நிதியாதாரம் அதிகம் தேவைப்படுகிறது. அது கிடைக்காமல் பல நிறுவனங்கள் தள்ளாடுகின்றன.

எதிர்காலத்தில் வலுவான செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் இப்போது இருப்பதைப் போல வர முடியும் என்று கருதுகிறீர்களா?

மிகவும் கடினமாகவே இருக்கும். நான் செய்தி சேகரிக்கும் விதத்தில் கட்டுரைகளைத் தர நீண்ட நாட்களாகும். திடீரென்று ஒருவரிடம் சென்று மைக்ரோபோனையோ நோட்டுப் புத்தகத்தையோ நீட்டி, இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுவிட முடியாது. அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும். புலனாய்வுச் செய்திகளுக்கு நேரம் பிடிக்கும். சட்டரீதியாகத் தற்காத்துக்கொள்ள என்ன செய்வது என்பதைத் தயார்செய்துகொண்டு களத்தில் இறங்க வேண்டும். செய்திக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம். உண்மையில், நாம் வாசிப்பவர்களைத் தொடர் நுகர்வோர்களாகப் பெற்றாக வேண்டும். உண்மைச் செய்திகளையும் புலனாய்வுச் செய்திகளையும் படிக்க விரும்பினால் அதற்கான விலையைத் தந்தாக வேண்டும். யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமான ஊடகம் என்றால் அதற்காகும் செலவை வாசகர்களிடமிருந்து மட்டுமே பெறுவதுதான் நல்ல வழி. வணிகரீதியிலான ஆதரவு கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அது யாருடைய நிபந்தனைகள்படி வர நேரும் என்பதில் எச்சரிக்கை அவசியம்.

நீங்கள் அளித்த செய்திகளிலேயே உங்கள் நினைவைவிட்டு நீங்காதது உண்டா?

கிளாடிட் கால்வின் என்ற பெண்ணைப் பற்றியது அது. ரோசா பார்க்ஸ் சம்பவத்துக்கு முன்னரே அலபாமா மாநிலத்தில் மான்ட்கோமரி நகரில், கறுப்பர் என்ற காரணத்துக்காகவே பேருந்திலிருந்து இறக்கப்பட்டவர் கிளாடிட் கால்வின். அவரைப் பற்றி 2000-ல் ஒரு கட்டுரை எழுதினேன். அவருக்கு வயது 15-ஆக இருந்தபோதே கருத்தரித்துவிட்டதால் அவரைக் கறுப்பினத்தவரின் எழுச்சிக்கான அடையாளமாகக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள். அவரைப் பற்றிய தகவல்கள் ஒரு பத்திக்கு மேல் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் தெற்கில் பயணித்தபோது கால்வினின் உறவுப் பெண்ணின் தொலைபேசி எண் கிடைத்தது. கிளாடிட் அந்த ஊரை விட்டு வெளியேறிவிட்டார். பல மாதங்கள் தொடர்ந்து பேசிய பிறகே அந்த உறவுக்காரப் பெண் மூலம் தகவல்களைத் திரட்ட முடிந்தது. கடைசியாக கிளாடிட்டின் எண்ணே கிடைத்தது. அவர் பிரான்க்ஸ் என்ற ஊரில் இருந்தார். அங்கே சென்று பேட்டி கண்டேன்.

கிளாடிட் கால்வின் துடிப்பான பெண். அரசியல் விழிப்புணர்வு மிக்கவர். பேருந்திலிருந்து அவரை வெளியேற்றினர். தான் குற்றவாளியல்ல என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். கறுப்பின மக்களின் முன்னேற்றத்துக்கான தேசியச் சங்கத்தில் உறுப்பினராகச் செயல்பட்டார். உலகின் பல நாடுகளிலிருந்தும் அவரது துணிச்சலை மெச்சியும் பாராட்டியும் ஏராளமானோர் கடிதங்கள் அனுப்பினர். இத்தனைக்கும் பிறகு அவரைப் பற்றிய செய்திகளே இல்லாமல் அவரைக் கைவிட்டுவிட்டனர். பிறகு, ரோசா பார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். கிளாடிட்டை விட மூத்தவரான ரோசா தீரமுடன் போராடியதால் உலகம் முழுவதும் அறியப்பட்டார். அரசியல் செயல்பாட்டாளரான அவர் கறுப்பர்களின் சம உரிமைகளுக்காக நீண்ட காலமாகப் போராடியவர். அவரைப் பற்றிய செய்திகளிலும் அவர் இகழப்பட்டார். கிளாடிட்டோ ஒரேயடியாக இருட்டடிப்பு செய்யப்பட்டார். கறுப்பு நிறத்தவரான கிளாடிட் திருமணமாகாமலேயே கருத்தரித்தார். அதிகார பீடத்தில் இருந்தவர்களுடன் மோத அவர் தயாராக இருந்தாலும், மேற்கொண்டு அந்நகரில் இருக்க முடியாமல் வெளியேறினார். அவரைப் பற்றிய குறிப்புகளும் அத்தோடு மறக்கப்பட்டன. வரலாற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம், எப்படிச் சிலர் மட்டும் இடம்பெறுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளவே இதைக் குறிப்பிடுகிறேன். அவரை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதன் பிறகு, அவரைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்களில்கூட கிளாடிட் இடம்பெற்றுவிட்டார். உலகம் எப்படி ஒருவரைப் புரிந்துகொள்கிறது என்பதற்காகவும் இதை நான் சொன்னேன். நான் எழுதாவிட்டால் இந்தத் தலைமுறையில் யாரும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள்.

பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

எப்போதும் ஆர்வத்துடன் இருங்கள். நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்பதற்கான விடை, நீங்களே தேடி சிலவற்றைக் கண்டுபிடிக்கும்போது தெரியவரும். நீங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரும்பாலும் தவறாக இருக்கலாம். அப்படியே சரியாக இருந்தாலும் நீங்கள் நினைக்கும் காரணங்களுக்காக அவை சரியாக இல்லாமல் இருக்கலாம். எனவே, வெளியே சென்று தேடிப்பாருங்கள். சிலவற்றை நான் வழக்கமானவை என்றுதான் கருதுவேன். அருகில் சென்று ஆராயும்போதுதான் அவை வழக்கமானவை அல்ல என்பதை உணர்வேன். ஒரு உதாரணம் சொல்கிறேன். பிரிட்டனில் தொழிலாளர் கட்சித் தலைவர் கோர்பினுக்கு ஆதரவு அதிகரித்துவிட்டதாகக் கருதினேன். நான் கற்பனை செய்திருந்தபடி அல்ல என்று அவருடைய மூன்று பொதுக்கூட்டங்களுக்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது. தொழிலாளர் கட்சி, உழைக்கும் வர்க்கத்துக்காகவே என்று நினைத்திருந்தேன். அந்த மூன்று கூட்டங்களில் ஒன்றில் மட்டும், அதுவும் ஒரே முறைதான் ‘சோஷலிஸம்’ என்ற சொல்லே உச்சரிக்கப்பட்டது. நவதாராளமய உலகமயமாக்கல் குறித்து ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை. நான் நினைத்திருந்ததைவிட அந்தக் கூட்டங்கள் மொண்ணையாகவே இருந்தன. லாஸ் வேகாஸ் நகரில் ‘தேநீர் கூட்ட’ நிகழ்ச்சிக்கு 2010-ல் சென்றேன். அங்கே சந்தித்தவர்களில் யாராவது வாக்கு சேகரிக்கச் செல்வார்கள் அவர்களுடன் செல்லலாம் என்று காத்திருந்தேன். ஒபாமாவைப் பிடிக்காததால் கூடிப் பேசினார்களே தவிர அவர்கள் யாரும் தீவிர களப் பணிக்கெல்லாம் போகவில்லை. பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பெறும் அந்த ‘தேநீர் கூட்டம்’ உண்மையில் செயல்படுவதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். ‘கறுப்பர்களின் உயிரும் முக்கியம்’ என்ற இயக்கமும் அப்படித்தான். படிப்பதோடு நிறுத்தாமல் உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆர்வமுடன் பின்தொடரும்போது மட்டுமே இந்த உண்மைகள் தெரியவரும்.

© தி இந்து, தமிழில்: சாரி


Gary younge interviewகேரி யங் பேட்டிதி கார்டியன்கேரி யங்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x