Published : 25 Feb 2020 07:23 AM
Last Updated : 25 Feb 2020 07:23 AM

ஜனநாயகக் கட்சி வேட்பாளராக சான்டர்ஸ் ஏன் தேர்வு பெறுவார்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் வரிசையைப் பார்த்தால் தொன்மங்களை (கட்டுக்கதைகள் என்றும் சொல்லலாம்) உருவாக்கியவர்கள்தான் அதிகம் வென்றுள்ளது தெரியவரும். அவர்கள் வெறும் கதைசொல்லிகள் மட்டுமல்ல; இப்போதைய கணத்திலிருந்து மக்கள் தப்பிப்பதற்கான வழிகளையும் சொல்கிறவர்கள். அது மக்களையே கதாநாயகர்களாகவும் வில்லன்களாகவும் பிரிக்கிறது. தேசத்துக்கே பொதுவான சவால் எது என்று அடையாளம் காட்டி, அதை எதிர்த்து வெற்றிபெறும் ஆற்றல் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று மக்களை நம்பச் செய்கின்றனர் தலைவர்கள்.

2016-ல் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிகரமான தொன்மத்தை உருவாக்கினார். ‘அமெரிக்கக் கடலோர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேராசை பிடித்தவர்கள். அதேசமயம், நாட்டைத் தவறாக நிர்வகித்த முட்டாள்களும்கூட. நாட்டைத் தவறாக வழிநடத்தி நம் மதிப்பையே சர்வதேச அரங்கில் குலைத்துவிட்டனர். நம்முடைய சமூகத்தின் முகத்தையே மாற்றிவிட்டனர்’ என்று ட்ரம்ப் சாடினார். இது முழுக்க முழுக்க அவரே உருவாக்கிய தொன்மமும் அல்ல. 1890-களில் தொடங்கிய மக்கள் எழுச்சிக் காலத்திலிருந்தே இந்தக் கருத்து நிலவுகிறது. ‘சக்திமிக்க நாம் - நமக்கு எதிராக அவர்கள்’ என்ற கற்பிதமான உலகக் கண்ணோட்டம் மக்களிடம் நன்றாக எடுபடுகிறது.

கட்டுக்கதைகளின் அரசியல்

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வெறுமனே அதை நம்புவதோடு நிறுத்துவதில்லை. அதை அவர்கள் அப்படியே உள்வாங்கிக்கொள்கிறார்கள். உலகை அவர்கள் பார்க்கும் பார்வையே அதையொட்டி மாறிவிடுகிறது. ட்ரம்ப் கூறும் தொன்மம் அவருடைய ஆதரவாளர்களிடையே எடுபடும் காலம் வரை ட்ரம்ப் ஆட்சி தொடர்பான உண்மைகள் தவறாக இருந்தாலும் கெடுதல் இல்லை. அவர் லட்சக்கணக்கான ஊழல்களில் ஈடுபட்டாலும் பரவாயில்லை. ட்ரம்ப் கூறும் தொன்மங்கள் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் வரையில் அவருடைய ஊழல்களையோ நிர்வாகத் தவறுகளையோ அவர்கள் பார்க்கத் தயாரில்லை.

பெர்னி சான்டர்ஸும் வெற்றிகரமான ஒரு தொன்மத்தைக் கூறுகிறார். ‘நாட்டின் வளத்தைப் பகாசுர நிறுவனங்களின் உரிமையாளர்களும் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் மேல்தட்டு மக்களும் பதுக்கி வைத்துக்கொண்டு, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை ஒடுக்கிவருகின்றனர்’ என்கிறார். இதுவும்கூட அசலான தொன்மம் அல்ல. 1848-ல் மூண்ட வர்க்கப் போராட்டக் கிளர்ச்சிக் காலத்திலிருந்து மக்களிடையே பேசப்படுவதுதான். சான்டர்ஸ் கூறும் தொன்மத்தில் ஆழ்ந்துவிடும்போது உலகத்தையே சான்டர்ஸின் கண்கள் வழியாகப் பார்க்கத் தொடங்குவீர்கள்.

மைக் புளூம்பெர்க்கைக் குறிப்பிட்ட கண்கொண்டு பார்க்கும்போது, ‘வெற்றிகரமான தொழிலதிபர். நிர்வாகத் திறனைப் பொதுச் சேவைக்குப் பயன்படுத்தியவர். தன் செல்வத்தை துப்பாக்கிகளைக் குறைப்பது, பருவநிலை மாற்றத்தை உணர்ந்து செயல்படுவது ஆகிய பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தியவர்’ என்று பார்ப்பீர்கள். சான்டர்ஸின் கண்கொண்டு பார்க்கும்போது, ‘பேராசை பிடித்த கோடீஸ்வரர். கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளைக் குவித்தவர். சர்வாதிகாரியான நியூயார்க் நகர மேயர். கறுப்பின இளைஞர்களைக் குறிவைத்துத் தண்டித்தவர். அதிகாரத்தைக் கைப்பற்றப் பணத்தை வாரியிறைத்தவர்’ என்பதாகப் பார்ப்பீர்கள்.

ஒரே ஆள், கண்ணோட்டங்கள் வேறு

ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த விவாதங்களைக் கவனித்ததில் எனக்கென்னவோ சான்டர்ஸ்தான் நன்றாகக் கதை சொல்கிறார் என்று தோன்றுகிறது. புளூம்பெர்க், ஜோ பிடேன், பீட் புட்டிகீக், அமி குளோபுசார் எல்லோருமே நன்றாகத்தான் பேசுகிறார்கள். ஆனால், தங்களுடைய உலகப் பார்வையை வாக்காளர்களைக் கவரக்கூடிய தொன்மமாக அவர்கள் மாற்றவில்லை. உங்களால் அவர்களைப் பார்க்க முடியுமே தவிர, அவர்களுடைய கண்கள் வழியாக உலகத்தைப் பார்க்க முடியாது.

ஜனநாயகக் கட்சியின் இன்னொரு வேட்பாளரான எலிசபெத் வாரன் தொன்மத்தை உருவாக்குகிறார். ஆனால், அதைத் தெளிவாகச் சொல்லத் தவறுகிறார். அந்தத் தொன்மமும் சான்டர்ஸின் தொன்மமாக இருக்கிறது. புளூம்பெர்க்கை அவர் தாக்கிப் பேசியது முழுக்க சான்டர்ஸின் கண்கொண்டு பார்த்ததன் விளைவுபோல இருந்தது. புட்டிகீக், குளோபுசார் ஆகியோரைத் தாக்கிப் பேசியதும் சான்டர்ஸின் கண்ணோட்டமாகவே இருந்தது. (குறைந்த அளவு செலவு பிடிக்கும் திட்டங்களைவிட மிகப் பெரிய அளவில் செலவழிக்கும் திட்டங்களே சிறந்தவை என்பதே அந்தக் கண்ணோட்டம்.) சான்டர்ஸ் பேச வேண்டியதையெல்லாம் வாரன் பேசினார். அதேபோல சான்டர்ஸின் உலகக் கண்ணோட்டத்தைத்தான் அவர் எதிரொலித்தாரே தவிர, தனக்கென்று சொந்தமாக எதையும் அவர் உருவாக்கவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சான்டர்ஸும் அவரைப் போன்ற முற்போக்கு அரசியல்வாதிகளும் சான்டர்ஸின் கண்ணோட்டத்திலேயே பார்க்குமாறு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களைத் தூண்டிவந்துள்ளனர். விவாதத்துக்கு மேடையில் அமர்ந்திருந்த அனைத்துப் பேச்சாளர்களும் கோடீஸ்வரர் புளூம்பெர்க்கின் மனநிலையிலேயே இருந்து பேசினர். சோஷலிஸ்டான சான்டர்ஸைப் போல பேசும் மனநிலையோ பேசுபொருளோ அவர்களிடம் இல்லை. இத்தகைய விவாதங்களில் சான்டர்ஸ் எந்தக் காயமும் இல்லாமல் தப்புகிறார். காரணம், அவரை வீழ்த்தும்படியான தொன்மச் சித்தரிப்புகள் அவர்களிடம் ஏதும் இல்லை. சான்டர்ஸின் திட்டங்களுக்கு அதிகச் செலவு பிடிக்கும் என்ற அவர்களின் விமர்சனம், வெற்றிகரமாக அவர் உருவாக்கிவிட்ட தொன்மத்துக்கு எந்த வகையிலும் ஈடாக இல்லை.

இந்தத் தேர்தல் பருவத்தில் பெரும்பாலான நாட்கள் பிரச்சாரக் கூட்டங்கள், விவாதங்கள் ஆகியவற்றுக்குப் போகாமல் வாக்காளர்களைப் பேட்டி காண்பதில் செலவிட்டேன். லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள காம்ப்டன், வாட்ஸ் பகுதிகளுக்குச் சென்றேன். போகும் இடங்களிலெல்லாம் அரசின் நிர்வாக அமைப்பு கடமையாற்ற முடியாமல் திணறுவதையே பார்த்தேன். பள்ளிக்கூடங்கள், வீடுகட்டும் நிறுவனங்கள், குடும்ப அமைப்புகள், பன்மைத்துவத்தை இட்டு நிரப்பக்கூடிய அக்கம்பக்கக் குடியிருப்புகளுக்குள்ளான சுமுக நிலை ஆகியவை பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தன. பொருளாதாரம், தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்தான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். பன்மைத்துவம் உள்ள சமூகத்தில் சமூக நம்பிக்கையை ஏற்படுத்துவது கடினம்.

தோல்வியுறும் ஒற்றுமை முயற்சி

மக்களில் ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினருக்கு எதிராக நிறுத்தும் முயற்சிகளை முறியடிக்கும் செயல்களையும் சிலர் மேற்கொள்வதைப் பார்க்கிறேன். இவர்கள் அதிகரித்துவருகின்றனர். தங்களுடைய வாழ்க்கையில் நேர்ந்த சேதங்களைச் சரிசெய்ய மக்களே தயாராகிவருகின்றனர். மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள், சேர்ந்து வாழ்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள், நடைமுறைக்கேற்ற மாற்றங்களைச் செய்துகொள்கின்றனர்.

ஒற்றுமையை ஏற்படுத்த மேற்கொள்ளும் எந்த முயற்சியும் - ‘நண்பன் - எதிரி’ என்ற வார்த்தைகள் மூலமும், வேறு வகையிலும் - மக்களில் ஒரு பிரிவினரை இன்னொரு பிரிவினருக்கு எதிராக நிறுத்தும் பேச்சுகளால் முறியடிக்கப்படுகிறது. சான்டர்ஸ், ட்ரம்ப் போன்றோர் எந்தக் காலத்திலும் கட்சி அமைப்புக்குள் செயல்பட்டோ கட்சிக்குக் கட்டுப்பட்டோ நடந்தவர்கள் அல்ல. எனவே, மேடையில் நின்றுகொண்டு எதையாவது அலறிவிட்டுப்போகிறார்கள்.

தொன்மங்களில் வரும் கதாநாயகர்களுக்கு இருக்கும் நல்ல குணங்கள் ட்ரம்ப், சான்டர்ஸ்களிடம் கிடையாது. திறந்த மனது, நீக்குப்போக்கான அணுகுமுறை, பிறர் சொல்வதைக் கேட்டு முடிவெடுக்கும் திறன், கூட்டாகச் சேர்ந்து செயல்படப் பலரையும் பழக்கும் ஆற்றல், அடிப்படையான மனிதத்தன்மை ஆகிய அனைத்தையும் அந்தக் கதாநாயகர்களிடம் காணலாம். உறவுகளை வளர்த்துக்கொள்ளும் பண்பிலிருந்துதான் நாம் தலைவர்களை மதிப்பிட முடியும்; சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் குணங்களால் அல்ல. அனைவரையும் ஒன்றுசேர்க்கும் தொன்மம்தான் சரியான மாற்று. அதில் இன்னொரு அனுகூலமும் இருக்கிறது - அது சத்தியமானது.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x