Published : 24 Feb 2020 08:34 am

Updated : 24 Feb 2020 08:34 am

 

Published : 24 Feb 2020 08:34 AM
Last Updated : 24 Feb 2020 08:34 AM

உடல் எடை குறைய எப்படிச் சாப்பிட வேண்டும்?

weight-loss-tips

உடல் எடை குறைய எப்படிச் சாப்பிட வேண்டும்?

சாப்பிடுவதற்கும் உடல் எடைக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. காலைச் சிற்றுண்டியை அதிக அளவிலும் சரிவிகிதமாகக் கலந்தும் சாப்பிடுவது மிகவும் நல்லது; மதியத்திலும் இரவிலும் சாப்பிடும் அளவைக் குறைப்பது அவசியம். இப்படி உணவு உண்டால் உடல் பருமன் குறைவதுடன், உயர் ரத்த சர்க்கரை அளவும் குறையும். இரவில் உணவைக் குறைத்தால்தான் செரிமானம் சரியாக இருக்கும், கொழுப்பும் சர்க்கரையும் ரத்தத்தில் அதிகமாகாது. ஜெர்மனியின் லுபெக் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. சாப்பிட்டதும் செரிமானம் அடைவதற்கும், ஊட்டச்சத்துகளைப் பிரித்தெடுத்து அவற்றை உரிய இடங்களுக்குக் கொண்டுசெல்லவும் சேமித்து வைக்கவும் ஆற்றலைச் செலவிடுகிறது உடல். இதை உணவால் தூண்டப்படும் வெப்ப உருவாக்கம் என்பார்கள். வளர்ச்சிதை மாற்றம் எப்படி நமக்குள் வேலை செய்கிறது என்பதை வெப்ப உருவாக்கத் தன்மையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இது சாப்பிடும் வேளைகளைப் பொறுத்து மாறுபடும். காலை உணவில் உள்ள கலோரிகள் எந்த அளவாக இருந்தாலும் வெப்ப உருவாக்கம் இரட்டிப்பாக இருக்கிறது. மதியம், இரவு வேளைகளில் இது குறைகிறது. இதை, சென்னை அரசு பொது மருத்துவமனையின் மூப்பியல் துறையின் நிறுவனரான மருத்துவர் வ.செ.நடராசனும் பல ஆண்டுகளாகக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.


காடுகளின் பசுமைப் பரப்பு உயர்ந்திருக்கிறதா?

இந்திய வனங்களின் வளம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகும் அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. காடுகளின் பசுமைப் பரப்பு உயர்ந்திருக்கிறது என்றாலும் கரிம அளவு குறைந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. காடுகளின் உட்பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதால் அடர்த்தி குறைந்து கரிமமும் குறைகிறது. காடுகளில் இருக்கும் உயிரினத் தொகுதி (பயோமாஸ்), மண், இறந்த மரங்கள், சருகுகள் உள்ளிட்ட குப்பைகள் மொத்தமும் கரிமமாகக் கருதப்படுகிறது. காட்டு நிலங்களை அழித்து விவசாயம் செய்வது, கனிமங்களுக்காகக் காடுகளிலேயே சுரங்கம் வெட்டுவது, அனல் - புனல் மின்நிலையங்களை அமைப்பது, சாலை போடுவது - அகலப்படுத்துவது உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வது போன்றவற்றால் காடுகளின் பரப்பளவு சுருங்குகிறது. வறட்சியும், திடீர் தீ போன்றவையும் காடுகளை அழிக்கின்றன. செயற்கைக்கோள்கள் உதவியுடன் காடுகளின் பசுமைப் பரப்பைக் கணக்கிட்டு காடு வளர்ந்திருக்கிறது என்கிறார்கள். தோட்டப் பயிர்களையும் கரும்புத் தோட்டங்களையும்கூட பசுமைப் பரப்பாகக் கணக்கில் சேர்க்கின்றனர். இதனால், காடுகளின் பரப்பளவு கூடிவிட்டதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது. ஆனால், உலக அளவிலான வனக் கண்காணிப்பு அமைப்பு, இந்தியாவில் 2010 முதல் 2018 வரையிலான காலத்தில் 1.26 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது. அரசின் அறிக்கைக்கும் உண்மை நிலைக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது.

தன்னம்பிக்கையின் அடையாளம்

எட்டாம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பைக் கைவிட்டவர், ஐந்து வயதில் அம்மாவின் அகால மரணம், பதினாறு வயதில் திருமணம், மருத்துவச் செலவுக்குப் பணமில்லாததால் ஒன்றரை வயது குழந்தையின் இறப்பு... இந்தியாவின் சராசரி கிராமத்துப் பெண் அனுபவிக்கும் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தவர் ருமா தேவி. ஆனால், இன்றைக்கு இந்தியப் பெண்களின் தன்னம்பிக்கைக்கான அடையாளம் இவர்தான். ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரியக் கைவினைக் கலைஞர் இவர். சிறுவயதில் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்ட சித்திரத் தையலே இவரது பாதையைத் தீர்மானித்தது. இவரும் இவருடைய தோழிகளும் சுயஉதவிக் குழு மூலமாக ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு தையல் இயந்திரம் வாங்கினார்கள். அங்கிருந்து தொடங்கியது ருமா தேவியின் வெற்றிப் பயணம். இதுவரை 75 கிராமங்களைச் சேர்ந்த 22, 000 பெண்களுக்குக் கைவினைப் பயிற்சி அளித்திருக்கிறார். சாதனை விருதுகள், பேஷன் ஷோ வடிவமைப்பு, அதற்காக வெளிநாட்டுப் பயணங்கள், சர்வதேசக் கருத்தரங்குகள் என்று உலகம் முழுக்கப் பறந்துகொண்டிருந்தாலும், மணல் பறக்கும் தார் பாலைவனம்தான் தனது நிலம் என்கிறார் ருமா தேவி.


Weight loss tipsஉடல் எடை குறைய எப்படிச் சாப்பிட வேண்டும்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x