Published : 21 Feb 2020 07:54 AM
Last Updated : 21 Feb 2020 07:54 AM

காவிரிப் படுகையை வாய்க்கால்கள் வழிமறுபடியும் இணைக்க வேண்டும்: எஸ்.ஜனகராஜன் பேட்டி

இந்திய அளவில் மதிக்கப்படும் நீர் மேலாண்மை அறிஞர்களில் ஒருவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன். காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பாக கர்நாடக, தமிழக விவசாயிகளின் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்த ‘காவிரிக் குடும்ப’த்தின் ஒருங்கிணைப்பாளர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகக் காவிரிப் படுகையை அறிவிக்கும் அரசு, நீர் மேலாண்மைக் கோணத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளைப் பேசுகிறார்.

அமையவிருக்கும் வேளாண் மண்டலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

காவிரிப் படுகை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி தென்னிந்தியாவுக்கும் உயிர்மூச்சு. மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை மட்டுமின்றி, இந்த நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் உணவுக் களஞ்சியம். காவிரிப் படுகையில் மட்டும் 60 - 70 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் சுமார் 20 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள். காவிரிப் படுகையின் முக்கியத் தொழிலே விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும்தான். வேளாண் மண்டலம் என்றால், அங்கு வேறு எந்தத் தொழில்களும் செய்யக் கூடாது. விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும் மட்டும்தான் செய்ய வேண்டும். அரிசி ஆலை, பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்ற உணவுத் தயாரிப்பு தொழிற்சாலைகளைத் தொடங்கலாம். மற்றபடி அங்கு காகிதத் தொழிற்சாலை, எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற வேறு எந்தவிதமான தொழிற்சாலைகளையும் தொடங்கக் கூடாது. முக்கியமாக, எண்ணெய்த் துரப்பணப் பணிகள் அங்கு நடைபெறவே கூடாது. வேளாண் மண்டலத்தின் இந்த அம்சமே, காவிரிப் படுகையின் நீர்வளத்தைப் பாதுகாக்கப் போதுமானது.

வேளாண் மண்டலம் எனும் அறிவிப்பே முக்கியமானதில்லையா?

நிச்சயமாக. 14.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மிகவும் திறன்வாய்ந்த விவசாயத்தை நம்மால் செய்ய முடியும். காவிரிப் படுகை மாவட்டங்களில் மட்டும் 1971-2014 இடைப்பட்ட காலகட்டத்தில் 20% நிலம் விவசாயத்திலிருந்து விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கு மட்டுமே நிலங்களைப் பயன்படுத்தும் வகையில் இப்படியொரு சட்டத்தை இப்போது இயற்றாவிட்டால் வேறு எப்போதுதான் இயற்றப்போகிறோம்?

மத்திய அரசு இத்தகைய சட்டத்தை எப்படி அணுகக்கூடும்?

இந்த சட்டத்தை மாநில அரசு கொண்டுவர இருப்பதால் மத்திய அரசு அதைக் கட்டுப்படுத்துமா என்ற பெரிய கேள்வி எழுவது இயல்பானதுதான். உண்மையிலேயே, அது தெளிவில்லாத பகுதியாகத்தான் இருக்கிறது. நிலத்தடியில் உள்ள கனிமங்களை அகழ்ந்தெடுப்பது, பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்தெடுப்பது ஆகியவை எல்லாம் தங்களது அதிகாரத்தின் கீழேயே வருகிறது என்று மத்திய அரசு கூறலாம். அப்போது இது விவாதத்திற்குரிய ஒரு விஷயமாக மாறக்கூடும். ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று மாநில அரசு உண்மையான துடிப்போடும், முழுமையான உள்ளடக்கத்தோடும் சில விஷயங்களைத் துரிதமாகத் தொடங்கிவிட்டால் மக்கள் ஆதரவு அதற்குக் கிடைத்துவிடும் ; அதில் குறுக்கிடுவதற்கு மத்திய அரசாங்கம் தயக்கம் காட்டும்.

இந்த சிக்கலை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ்நாடு அரசு வேளாண் மண்டலச் சட்டத்தை இயற்றும்போது அதற்கென்று ஒரு வல்லுநர் குழுவை உருவாக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் அளவிலேயே நடத்தும் பேச்சும், மேலோட்டமான சட்ட உருவாக்கமும் போதாது. அனைத்துத் துறைகளைச் சார்ந்த வல்லுநர்களையும் உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழுவில் நிலத்தடி நீரியல் நிபுணர், விவசாய வல்லுநர்கள், பொருளாதார அறிஞர்கள், சமூகவியலாளர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் விவாதித்து இந்தச் சட்டத்துக்கு முழு உள்ளடக்கத்தைக் கொடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக, பெயரளவுக்கு ஏனோதானோ என்று சட்டத்தை இயற்றினோம் என்றால், அது மோசமாகிவிடும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை மட்டுமே நம்பி வேளாண்மை மண்டலத்தை உருவாக்குவது சாத்தியமா?

காவிரியிலிருந்து நமக்குப் போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற பார்வை தவறானது என்பதை நெடுங்காலமாகச் சொல்லிவருகிறேன். கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தும் பாசனத் திட்டங்களில்தான் நாம் பின்தங்கியிருக்கிறோம். நீர்ப் பாசன முறைகளில் இன்னமும் நாம் பழங்காலத்திய முறைகளையே பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்; நவீனமாக வேண்டும்.

சரியான வகையில் நீர் மேலாண்மை செய்தால் காவிரியில் நமக்குத் தமிழகத்திலிருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டே படுகையில் முப்போகம் சாகுபடி செய்யலாம் என்று ஒருமுறை சொல்லியிருந்தீர்கள்... விவரிக்க முடியுமா?

தற்போது 1 டிஎம்சி தண்ணீரில் 5,000 ஏக்கர்தான் விவசாயம் செய்கிறார்கள். அதே தண்ணீரில் குறைந்தபட்சம் 8,000 ஏக்கரிலிருந்து 10,000 ஏக்கர் வரை விவசாயம் செய்ய முடியும். குறிப்பாக, கல்லணைக்குக் கீழே ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனியாகத்தான் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. திறந்துவிட்டால் தண்ணீர் அதன் போக்கில் பாய்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக ஒவ்வொரு வயலையும் பைப்லைன்கள் மூலமாக இணைத்து கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம், 50 ஏக்கர் அளவு கொண்ட பரப்பளவுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுமோ அதை மட்டும் பாய்ச்சினால் போதுமானதாக இருக்கும். தொடர்ந்து ஆற்றில் மணல் அள்ளுவதால் ஆற்றின் உயரம் குறைந்து வயல்வெளியின் உயரம் அதிகரித்து பாசன ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியின் அசல் ஆவணங்களைப் பார்க்கும்போது கல்லணைக்குக் கீழே உள்ள பிரதான வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் என்று அனைத்து வாய்க்கால்களையும் சேர்த்தால், அவற்றின் மொத்த நீளம் 47,000 கி.மீ. அந்த வாய்க்கால்கள் அனைத்தும் இன்று இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லையா அல்லது அகலம் சுருங்கிவிட்டதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். அந்த வாய்க்கால்கள் காணவில்லையென்றால், அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை நம்மால் உருவாக்க முடியும். கல்லணைக்குக் கீழே 950 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் பல இன்று விளையாட்டுத் திடல்களாக இருக்கின்றன. 2018-ல் 145 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது. ஆனால், ஒரு ஏரியில்கூட தண்ணீர் இல்லை. ஏனென்றால் வாய்க்கால்கள் இல்லை. முறையாகப் பராமரிக்கப்படாததால் முற்றிலுமாகத் தூர்ந்துபோய்விட்டன. தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி மூலமாகச் சில பகுதிகளில் பாசனத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால், இப்படி ஆங்காங்கே சிறு சிறு அளவில் பாசனத் திட்டங்களை மேற்கொள்வதைக் காட்டிலும் ஒருங்கிணைந்த ஒரு பாசனத் திட்டம்தான் நமக்குத் தேவை.

காவிரிப் படுகைக்கு வந்து சேரும் நீரே கடந்து வரும் வழியில் காகிதத் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் ஆகியவற்றால் மாசுபட்டுத்தான்வருகிறது. மாசுபாட்டிலிருந்து காவிரி நீரைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

பவானி, அமராவதி, நொய்யல், காலிங்கராயன் கால்வாய் என்று காவிரியின் அனைத்து உபநதிகளுமே தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபட்டிருக்கின்றன. நொய்யல் ஆறு முழுவதுமே சாயப்பட்டறையால் பாழாக்கப்பட்டிருக்கிறது. நொய்யல் ஆற்றில் ஒரத்துப்பாளையம் அணையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். சாயப்பட்டறைக் கழிவுகளால் அந்த அணையின் நீரே நிறம் மாறிவிட்டது. அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று விவசாயிகள் போராடுகிறார்கள். நிலங்கள் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். காவிரிப் படுகையில் நீர் வளத்தைப் பாதுகாக்கிற அதேசமயம், அதற்கு முன்பாக இருக்கும் மாவட்டங்களிலிருந்து ஆற்றில் கழிவுகள் சேர்வதையும் கட்டுப்படுத்தியாக வேண்டியது மிகவும் அவசியம். இதைத் தவிர, காவிரியின் கரைகளில் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான நகரங்கள் இருக்கின்றன. ஆற்றிலிருந்து நீரை எடுத்துக்கொள்ளும் இந்த நகரங்கள், தங்களது கழிவுநீரை ஆற்றிலேயே கலந்துவிடுகின்றன. அதையும் கட்டுப்படுத்தியாக வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதன் நோக்கம் முழுமை பெறாது.

காவிரிப் படுகையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் தாக்கம் எப்படி இருக்கிறது?

பிச்சாவரம் தொடங்கி வேதாரண்யம் ஏரி வரைக்கும் கடல் உள்வாங்கல் மற்றும் கடல் அரிப்பால் ஏறக்குறைய 2,000 ஏக்கர் நிலம் கடலுக்குள் சென்றுவிட்டது. கடல் அரிப்புப் பிரச்சினை தீவிரமாகிக்கொண்டே இருக்கிறது. கடல் மட்டம் உயரும்போது தண்ணீர் இன்னும் மேலேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உள்ள வாய்க்கால்களில் கடல் தண்ணீர் 10, 12 கிமீ வரைக்கும் மேலேறும். அதைத் தடுப்பதற்காக நாம் இன்னும் எந்தத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. காவிரிப் படுகை பகுதியில் 12 ‘டெயில் என்ட் ரெகுலேட்டர்’ அமைப்புகள் இருக்கின்றன. அதாவது, காவிரியின் பெரிய கிளை ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் உள்ள இந்த ரெகுலேட்டர்களை வைத்து ஆற்றுத் தண்ணீர் கடலில் முழுவதுமாகக் கலக்காதவாறு பார்த்துக்கொள்வார்கள். அந்தத் தண்ணீரைப் பம்ப் மூலமாக விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கொள்வார்கள். இந்த ரெகுலேட்டர்களைப் பயன்படுத்தி மட்டுமே ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்துகொண்டிருந்தது. இன்று அந்த ரெகுலேட்டர்கள் அனைத்துமே முறையாகப் பராமரிக்கப்படாமல் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் உவர்நிலமாகிவிட்டன. இவற்றையும் மீட்டெக்க வேண்டும். நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏறக்குறைய நிலத்தடி நீர் முழுவதுமே உவர்நீராக மாறிவிட்டது. திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 60% - 70% வரையில் உவர் நீராக மாறிவிட்டது. இன்னொருபக்கம் கடல் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்திற்குள்ளாக இருக்கக்கூடிய பகுதிகளை ‘தாழ்வான கடற்பகுதிகள்’ என்று ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இந்தப் பகுதிகள் பெருமளவு பாதிக்கப்படவும் கடலில் மூழ்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல பகுதிகள் 5 மீட்டர் உயரத்திற்குள்ளேயே இருக்கின்றன. அடுத்துவரும் 20 ஆண்டுகளில் கடலில் மூழ்குவதற்கான அபாயத்தையும் நாகப்பட்டினம் மாவட்டம் எதிர்கொண்டிருக்கிறது. எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இந்த விஷயங்களைப் பற்றி தீவிர கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x