Published : 20 Feb 2020 07:45 AM
Last Updated : 20 Feb 2020 07:45 AM

பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தயங்குவது ஏன்?

நிமோனியா என்ற பேராபத்து

வரும் 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 90 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் இறக்கும் சூழல் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 8.8 லட்சம் குழந்தைகள் வரும் 10 ஆண்டுகளில் நுரையீரல் அழற்சியால் (நிமோனியா) உயிரிழப்பார்கள் என்றும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு, தடுப்பூசியும் நோயுயிர்முறியும் (ஆன்டிபயாட்டிக்) கிடைக்காதது, காற்று மாசுபாடு ஆகியன நுரையீரல் அழற்சியினால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கியக் காரணங்களாக அமையும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றால் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு, காற்றுப் பைகளில் சீழ் நிரம்பி, நுரையீரல் வீங்கி, மூச்சு விட முடியாமல் திணறுவதுதான் நுரையீரல் அழற்சி. இது பின்தங்கிய நாடுகளில் அதிக அளவிலான குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 14 லட்சம் மரணங்களுடன் நைஜீரியா முதல் இடத்திலும் 8.8 லட்சம் மரணங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் மூன்றாவது, நான்காவது இடங்களில் முறையே காங்கோவும் எத்தியோப்பியாவும் இடம்பிடிக்கும் என்றும் தெரிகிறது.

2019-க்கான இந்தி வார்த்தை

ஆண்டுதோறும் ‘கடந்த ஆண்டின் ஆங்கிலச் சொல்’ ஒன்றை ஆக்ஸ்ஃபோர்டு அகராதிக் குழுவினர் தேர்ந்தெடுப்பது வழக்கம். கடந்த ஆண்டின் போக்கு, மனநிலை, இயல்பு போன்றவற்றைப் பிரதிபலிக்கும் சொல்லைத்தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். சமீப காலமாக இந்தியிலும் அப்படித் தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படிக் கடந்த ஆண்டின் சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி மொழிச் சொல் ‘சம்விதான்’ (அரசமைப்புச் சட்டம்). காஷ்மீர் தொடர்பான 370 சட்டம் நீக்கப்பட்டது, குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு போன்ற விவகாரங்கள் காரணமாக, கடந்த ஆண்டில் ஏராளமான விவாதங்கள், போராட்டங்கள் நடைபெற்றன. இவற்றிலெல்லாம் அதிகம் பேசப்பட்ட வார்த்தை அரசமைப்புச் சட்டம். இந்தியர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் காத்துக்கொள்வதற்கான தற்காப்புக் கேடயத்தை வழங்குவது அரசமைப்புச் சட்டம்தான். அந்தச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தப்படும்போது, அதுதான் மக்களின் சிந்தனை மையத்தை எடுத்துக்கொள்கிறது. ஆக்ஸ்ஃபோர்டின் ‘கடந்த ஆண்டு இந்திச் சொல்’லாக ‘சம்விதான்’ தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.

பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தயங்குவது ஏன்?

ரூபாய் நோட்டுகளை, துணிக் கந்தல்களை மீண்டும் கூழாக்கி அதிலிருந்து காகிதம் தயாரித்துத்தான் அச்சிடுகிறார்கள். இந்தியா உட்பட பல நாடுகள் இந்த வகை நோட்டுகளைத்தான் பயன்படுத்துகின்றன. ஆனால், வளர்ந்த நாடுகள் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றன. பிளாஸ்டிக் நோட்டுகள் அதிக காலம் உழைக்கும், கசங்காது, லேசில் கிழியாது, நுண்ணிய கிருமித்தொற்றும் அதிகமிருக்காது, கள்ளநோட்டு அச்சடிப்பவர்களுக்கும் போலிகளைத் தயாரிப்பது பெரிய சவாலாக இருக்கும். ஏடிஎம்கள் போன்ற கருவிகளில் பயன்படுத்துவதும் எளிது. ஆனால், காகித நோட்டுகளுக்காகும் செலவைப் போல இரண்டு மடங்கிலிருந்து நான்கு மடங்கு வரையில் ஆகும். பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டை அச்சடித்த முதல் நாடு ஆஸ்திரேலியா. 1988-ல் இம்முயற்சியைத் தொடங்கியது. 1996-ல் ஆஸ்திரேலியாவின் எல்லா முகமதிப்பு ரூபாய் நோட்டுகளும் பிளாஸ்டிக் ஆகிவிட்டன. கனடா, மாலத்தீவுகள், புரூணை, மவுரிடானியா, நிகாரகுவா, நியூஸிலாந்து, பப்புவா நியூகினி, ருமேனியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் பிளாஸ்டிக்கில் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

2019-ல் மேலும் 20 நாடுகள் தங்களுடைய ரூபாய் நோட்டுகளில் பகுதியளவை பிளாஸ்டிக்குகளாக மாற்றின. இந்தியாவில் அக்டோபர் 2002-ல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் உத்தேச யோசனை இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. 2009-ல் 10 ரூபாய் முக மதிப்பில் ரூ.100 கோடி அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்று உலக நிறுவனங்களிடம் ஏலம் கோரும் முயற்சியையும் எடுத்தது. ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் அம்முயற்சி கைவிடப்படுவதாகப் பிறகு ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது. ரிசர்வ் வங்கி இப்போது மீண்டும் மறுபரிசீலிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x