கர்நாடகத்தில் கலந்த சமத்துவக் கனவு

கர்நாடகத்தில் கலந்த சமத்துவக் கனவு
Updated on
2 min read

பத்திரிகையாளர், கர்நாடகத் தமிழர் இயக்கச் செயல்பாட்டாளர் என்றளவில் மட்டுமே நினைவுகூரப்பட்ட வேதகுமாருக்கு வேறு பல முகங்களும் இருந்தன. அம்பேத்கரியம், திராவிட இயக்கம், பகுஜன் சமாஜ், தனித்தமிழ் அமைப்பு உள்ளிட்டவற்றின் தளகர்த்தராகவே விளங்கியவர். தன் வாழ்நாள் முழுவதையும் அரசியல், சமூகப் பங்களிப்புக்காக அர்ப்பணித்த அவர், பிப்ரவரி 16 அன்று காலமானார்.

அன்றைய வடஆற்காடு மாவட்டத்தின் எழுச்சி மிக்க தலித் அரசியல் பின்புலத்திலிருந்து வந்தவர் வேதகுமார். அவருக்குப் பள்ளிக் காலத்திலேயே அம்பேத்கர் அறிமுகமாகிவிட்டதால், பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பின் மாணவர் பிரிவில் இணைந்தார். அவரது அரசியல் தொடர்பானது ‘இரட்டைமலை சீனிவாசன் நாடக மன்ற’த்தை உருவாக்க விதைபோட்டது. வேதகுமாரின் தீவிரச் செயல்பாடு அவரைப் பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்பாகவே வடஆற்காடு மாவட்டப் பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பு மாணவர் அமைப்பின் தலைவர் ஆக்கியது. இதனால், அப்போதைய தலித் ஆளுமைகளான என்.சிவராஜ், மீனாம்பாள், சத்தியவாணி முத்து, பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, ஆம்பூர் ஆதிமூலம், செட்டிக்குப்பம் குப்புசாமி உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

1954-ல் குடியாத்தத்தில் காமராஜர் போட்டியிட்டபோது அவரை எதிர்த்துக் களமிறங்கிய பள்ளிகொண்டா கிருஷ்ணசாமிக்குத் தளபதிபோல வேதகுமார் தேர்தல் வேலை பார்த்திருக்கிறார். கிருஷ்ணசாமியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நாடகம் போடுவது, அவரது உரையைச் செய்தியாக்கி பத்திரிகைகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட வேலைகளைப் பார்த்திருக்கிறார். இந்த அனுபவங்களை மறதி சூழ்ந்த இறுதிகாலத்திலும் நெகிழ்ச்சியாக அசைபோட்டார். அதிலும் சென்னை மேயராகவும், அம்பேத்கரிய இயக்கங்களின் அனைத்திந்தியத் தலைவராகவும் இருந்த என்.சிவராஜின் உடல்மொழி, ஸ்டைலான கோட் சூட், பாலிஷ் மங்காத‌ ஷூ, சரளமான ஆங்கிலம், கம்பீரமான‌ ஆளுமையை விவரிக்கும்போது கேட்கையிலே நேரில் பார்ப்பதைப் போல் இருக்கும். அதேபோல, கோலார் தங்கவயலிலும் பெங்களூருவிலும் அம்பேத்கரை அருகில் இருந்து பார்த்ததைத் தன் வாழ்நாள் சாதனையாகக் கருதி, உடல் சிலிர்க்க விவரிப்பார்.

1956-ல் வேலை நிமித்தமாக பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தார் வேதகுமார். தமிழகத்தில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டதால் அதற்கு எதிரான அரசியலைக் கைக்கொண்டிருந்த அவர், தமிழகத்துக்கு வெளியே மொழிரீதியாக‌வும் ஒடுக்கப்பட்டதால் சாதி-மொழி இரு ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் கருவியாகத் தமிழர் அரசியலைக் கையில் எடுத்தார். பயனீர்சேரி பகுதியின் தோழர்களோடு சேர்ந்து ‘தென்னவர் தோழமைக் கழகம்’ மூலம் படிப்பகம் அமைத்துச் செயல்பட்டார். பின்னர், திமுகவில் இணைந்த வேதகுமார் தன் நாடகங்கள், பேச்சின் வாயிலாக திராவிடக் கருத்துகளைப் பரப்பினார். அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்டோருக்கு நெருக்கமானார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1970-களில் கர்நாடகாவில் எழுந்த தமிழர் விரோத அரசியலுக்கு, கன்னடரையும் உள்ளடக்கி திராவிடம் பேசிய திமுக போதிய எதிர்வினை ஆற்றவில்லை எனக் கட்சியிலிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு, மீண்டும் அம்பேத்கரியத்துக்குத் திரும்பினார் வேதகுமார். அம்பேத்கர் சுயமரியாதை இயக்கத் தோழர்களுடன் இணைந்து, 1980-களின் இறுதியில் ‘ஆக்ஸ்’ (கோடரி) ஆங்கில மாத இதழைத் தொடங்கினார். அதில் சாதிய எதிர்ப்பு, மதவிய எதிர்ப்பு, தமிழர் உரிமை சார்ந்த கருத்துகள் அதிகளவில் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்குவதற்காக கன்ஷிராம் மேற்கொண்ட பயணங்களில் வேதகுமார் பக்கபலமாக இருந்திருக்கிறார். கன்ஷிராம் தென்னகம் பற்றிப் புரிந்துகொள்வதற்குக் காரணமாக இருந்த ஏ.எஸ்.ராஜன், பாஸ்கரன், மருத்துவர் சேப்பன், சக்திதாசன் ஆகிய தமிழ் அம்பேத்கரியர்களுடன் வேதகுமாரும் உடனிருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் கர்நாடகக் கிளையாலும் தமிழர் பிரச்சினைகளுக்குப் போதிய கவனம் கிடைக்காததால் வேதகுமார் மீண்டும் தமிழர் இயக்கத்துக்குத் திரும்பினார். அந்தக் காலகட்டத்தில் நடந்த காவிரிக் கலவரம் லட்சக்கணக்கான தமிழரின் வாழ்வைச் சூறையாடியது. அதன் நேரடிச் சாட்சியமாக இருந்ததால், வேதகுமார் இறுதிவரை தமிழ் அடையாளத்திலே நிலைபெறக் காரணமானது.

கர்நாடகத் தமிழர் இயக்கத்தின் கருத்தியல் ஊடகங்களில் ஒன்றாக ‘தமிழர் முழக்கம்’ மாத இதழைத் தொடங்கி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரும் சிரமங்களுக்கிடையே நடத்தினார். ‘தமிழர் முழக்க’த்தில் அதன் பெயருக்கேற்றவாறு தமிழர் உரிமையும், அம்பேத்கரிய அரசியலும் அதிகம் இடம்பெற்றன. பண்டிதர் அயோத்திதாசரின் ‘தமிழன்’, ஜார்ஜ் கோமகனின் ‘முழக்கம்’ ஆகிய இரு இதழ்களின் பெயரையும் ஒன்றாக்கி, தன் இதழுக்குப் பெயர் சூட்டியதாக நெகிழ்ச்சியோடு சொல்வார்.

எந்த அரசியலுக்கு மாறியபோதும் அம்பேத்கரை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருந்தார்!

- இரா.வினோத், vinoth.r@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in