Published : 18 Feb 2020 07:40 AM
Last Updated : 18 Feb 2020 07:40 AM

வேளாண் விளைபொருட்களுக்கு விலைநிர்ணயக் கொள்கை தேவை- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

காவிரி நீர்ப் பங்கீடு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, வேளாண் விளைபொருட்களுக்கான நியாயமான விலை என்று விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட்டக் களத்தில் நிற்பவர் பி.ஆர்.பாண்டியன். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர். தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து...

வேளாண் மண்டலம் எவ்வாறு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தகவல்தொடர்பு போன்ற தொழில்களுக்கான மண்டலங்களைப் போலவே வேளாண் மண்டலமும் அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றிருக்க வேண்டும். பாசனத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். விளைநிலங்களையும் அவற்றின் உற்பத்தித் திறனையும் மேம்படுத்த வேண்டும். விவசாயக் கடன்கள் உள்ளிட்ட நிதியாதாரங்களை உருவாக்க வேண்டும். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் போலவே தங்களுடைய நிலத்தின் விலையின் மதிப்பு குறைந்துவிடக் கூடாது என்ற எண்ணமும் விவசாயிகளிடம் இருக்கிறது. இந்த இரண்டையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லாபகரமான விலையை நிர்ணயம் செய்வதற்கு அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுத்தாக வேண்டும். குறிப்பாக, எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி தமிழக அரசாங்கம் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான நிதியுதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். வேளாண் விளைபொருட்களைத் தடையில்லாமல் சந்தைப்படுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்குவது அவசியம். கிராமங்கள்தோறும் விளை பொருட்களை இருப்பு வைப்பதற்கான கிடங்கு வசதிகளைச் செய்வதும் முக்கியம்.

விவசாயிகளுக்கு விளைநிலம் மூலமாகக் கிடைக்கக்கூடிய வருவாய் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடைய குடும்பங்கள் பாதுகாக்கப்படும். எனவே, அரசாங்கம் முன்கூட்டியே இதையெல்லாம் ஆய்வுசெய்து தேவையான வழிகாட்டு நெறிமுறைகளோடுதான் இந்தச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல், தேர்தல் அறுவடைக்கான திட்டமாக செய்துவிடக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அத்தனை விவசாயிகளும் ஏகமனதாக வரவேற்கும் நிலையில், இந்தக் கருத்துகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வேளாண்சார் தொழில்களை வளர்த்தெடுக்க என்னென்ன திட்டங்களை முன்வைக்கிறீர்கள்?

நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் வகையில் பண்ணைக் குட்டைகளை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், மீன் வளர்ப்பும் இன்று விவசாயத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. கோழி வளர்ப்பு போன்ற கூட்டுப் பண்ணைத் திட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். காவிரிப் படுகையில் அமைந்துள்ள கொற்கை கால்நடைப் பண்ணையின் கட்டமைப்புகளைச் சரிசெய்ய வேண்டும். விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அதற்கான சாகுபடி முறைகளை விவசாயிகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இயற்கை விவசாயத்தின் அடிப்படையே கால்நடைகள்தான். ஆனால், கிராமப்புறங்களில் கால்நடைகளே அழிந்துவிட்டன. கால்நடை வளர்ப்பின் வாயிலாகத்தான் இயற்கை விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்களைத் தயாரிக்க முடியும்.

நெல் விவசாயம்தான் பிரதானமாக இருக்கிறது. மாற்றுப் பயிர் சாகுபடிக்கான வாய்ப்புகள் என்னென்ன?

நெல்லையே எல்லா நிலங்களிலும் எல்லா காலங்களிலும் பயிரிடுவது என்ற நிலையிலிருந்து மாறி, எந்தெந்த மண்ணில் என்னென்ன வகையான பயிர்களைப் பயிரிடலாம் என்று விவசாயிகளுக்கு உரிய முறையில் ஆய்வுகளின் அடிப்படையில் அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து செய்ய வேண்டும். மண் வளத்தைப் பாதுகாக்கும் பனைமரச் சாகுபடியை ஆதரிக்கும் வகையில் பதநீர் இறக்க அனுமதிக்க வேண்டும். அதைப் போல, கரும்பு பயிரிட்ட விவசாயிகள் சர்க்கரை ஆலைகளிடமிருந்து பணம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். எனவே, கரும்பிலிருந்து நாட்டு வெல்லம் தயாரிப்பது போன்ற குடிசைத் தொழில்களை வளர்த்தெடுக்க வேண்டும். பெண்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பாசனத் திட்டங்கள் போதுமானவை என்று நினைக்கிறீர்களா?

பாசனத் திட்டங்களைப் பொறுத்தவரை பரீட்சார்த்த முறை யில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியோடு ரூ.1,562 கோடி செலவில் திட்டமிடப்பட்டு முதற்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைப் பின்பற்றி அனைத்துப் பாசன ஆறுகளையும் வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். எல்லா நிலங்களுக்கும் சம அளவிலான நீர்ப் பங்கீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக, பாசனத்துக்கான நீரில் மூன்றில் இரண்டு பகுதி கடலுக்குப் போய்விடுகிறது. பாசனக் கட்டுமானங்கள் பலவீனமாகப் போனதன் விளைவு இது. குடிமராமத்துத் திட்டங்கள் விவசாயிகளுடைய குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களால்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அரசியல் தலையீட்டால் அந்த நிதியை வீணடிக்கிற முயற்சிகளைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். குடிமராமத்துக்கான விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும்.செல்வ புவியரசன்விவசாயிகளுக்கு விளைநிலம் மூலமாகக் கிடைக்கக்கூடிய வருவாய் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x