Last Updated : 17 Feb, 2020 07:25 AM

 

Published : 17 Feb 2020 07:25 AM
Last Updated : 17 Feb 2020 07:25 AM

எளியோரின் ரட்சகர் விஜயராகவன்!

அவர் யார் என்று தெரியாமலே நம்மில் பலர் அவரைக் கடந்துபோயிருக்கலாம். ஏனென்றால், அவர் ஒரு சாதாரணர். பெயர் விஜயராகவன். காலை 7 மணிக்கு காபி குடித்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவார். மின்சார ரயிலிலும் பேருந்திலும்தான் பயணிப்பார். இறங்கி, வழியில் பட்டாணியோ வேர்க்கடலையோ வாங்கிக் கொறித்துக்கொண்டே விறுவிறுவென்று நடப்பார். 80 வயதைக் கடந்தவர் என்று கணிக்க முடியாத மிடுக்கு நடை. மத்திய அரசு ஊழியராகப் பணியாற்றியவர். ஓய்வுபெற்ற பிறகு, நீதிமன்ற வளாகங்களில் தென்படும் வழக்கறிஞராக அறியப்பட்டவர்.

எத்தனை நிகழ்வுகள்!

ஒருநாள் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ஒரு இளம் பெண் தன் தாயுடன் ஏதோ விவாதம் செய்வதைக் கேட்டிருக்கிறார். ‘என்ன... ஏது’ என்று விசாரித்தார். பொறியியல் பட்டம்பெற்ற முதல் தலைமுறைப் பெண் அவள். கிராமத்திலிருந்து புறப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறாள். நுனிநாக்கு ஆங்கிலம் பேசத் தெரியாததால் தேர்வாகவில்லை. தனக்கு வேலை கிடைக்க வாய்ப்பேயில்லை என்ற விரக்தியில் இருந்தாள் அந்தப் பெண். தாயையும் மகளையும் அழைத்துக்கொண்டு அந்த நிறுவனத்துக்குப் போனார் விஜயராகவன். ‘நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியெல்லாம் இருந்தால், இன்னும் கொஞ்சம் சம்பளம் அதிகம் கிடைத்தால் வேறு கம்பெனிக்குப் போய்விடுவார்கள். இந்தப் பெண்ணுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். பழகப் பழக ஆங்கிலமெல்லாம் வந்துவிடும்’ என்று வாதிட்டார். வெளியில் காத்திருந்த பெண்ணின் கையில் ‘அப்பாயின்ட்மென்ட் ஆர்ட’ரைக் கொடுத்து மகிழ்ந்தார். பஞ்சாபில் வசிக்கும் கூலித் தொழிலாளர் தம்பதி தங்கள் கைக்குழந்தையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார்கள். குழந்தைக்கு இதயத்தில் அறுவைசிகிச்சை செய்தாக வேண்டும். அதற்கான பணவசதி அவர்களிடம் இல்லை. யாரோ விஜயராகவனைத் தொடர்புகொள்ளும்படி சொல்லியிருக்கிறார்கள். சென்ட்ரலிலிருந்து அவர்களை அழைத்துப்போய், ஒரு தனியார் மருத்துவமனையில் இலவச அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். 15 நாட்கள் சமாளித்து சிகிச்சை முடிந்து குழந்தையுடன் புறப்பட்டுப் போனார்கள் தம்பதியினர்.

உலகெலாம் தன் சொந்தம்

பஸ்ஸில் உட்கார்ந்திருந்த இவர் புத்தக மூட்டையுடன் நின்றுகொண்டிருந்த அந்த மாணவியைப் பார்த்திருக்கிறார். அந்த சுமையைத் தன் மடியில் வாங்கி வைத்துக்கொண்டார். ‘என்னம்மா படிக்கிறாய்?’ என்று விசாரித்தார். மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த அந்தப் பெண் ‘இன்று வரை பி.காம்., படிக்கிறேன். ஆனால் நாளையிலிருந்து நான் கல்லூரிக்கே போக வேண்டியிருக்காது’ என்றாள். கட்டணம் செலுத்த முடியாததால், ‘டி.சி.’ கொடுத்துவிட்டார்களாம். கடவுளிடம் முறையிட்டால்கூட நடக்கும் நடக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், விஜயராகவனின் காதில் போட்டுவிட்டால் தீர்வு நிச்சயம். படிப்பைத் தொடர்ந்தாள் மாணவி. வேலையும் கிடைத்துவிட்டது. சமீபத்தில் தன் திருமண அழைப்பிதழில் ‘சுற்றமும் நட்பும்’ வரிசையில் விஜயராகவனின் பெயரைத்தான் முதலில் குறிப்பிட்டிருக்கிறாள்.

ஒருநாள் இரவு நேரத்தில் தாம்பரம் ரயில்வே நிலையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் மனம் குழம்பிய நிலையில் போகும் இடம் தெரியாமல் அலைந்துகொண்டிருந்தாள். உடையும் உடைமைகளும் நடுத்தர வர்க்கத்துப் பெண் என்பதைத் தெரிவித்தது. அவர் பேசிய மொழி எவருக்கும் புரியவில்லை. சில ஆண்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சீண்டுவதையும், பதிலுக்கு அவர் சீறுவதையும் என் மாணவர் ஒருவர் கவனித்திருக்கிறார். என்னைத் தொலைபேசியில் அழைத்து தகவல் சொன்னார். ‘விஜயராகவன் என்று ஒருவர் வருவார். அவர் வரும் வரை நீ அந்த இடத்தை விட்டு நகராதே’ என்று மாணவரிடம் சொல்லிவிட்டு, பிறகுதான் விஜயராகவனைத் தொடர்புகொண்டேன். தூக்கத்தை உதறிக்கொண்டு எழுந்து, துரிதமாக ரயில் நிலையத்துக்குப் போனார். அந்தப் பெண்ணைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிட்டுத்தான் வீடு திரும்பினார். இப்படி எத்தனையோ நிகழ்வுகள்!

வாழ்க்கையின் அர்த்தம்

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் இவரைத் தொலைபேசியில் அழைத்து அடிக்கடி பேசும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார். டி.என்.சேஷன் போன்று பிரபலமான பலருடனும் அவருக்குத் தொடர்பு இருந்தது. ஆனாலும், விளிம்புநிலை மனிதர்களுடன் கைகுலுக்கி அன்பைச் சொரிவதில்தான் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிக்கொண்டிருந்தார். மரபில் வேரூன்றி நின்றுகொண்டே தன் கிளைகளைப் பேதமின்றி விரித்து, மானுடத்தைத் தழுவிக்கொண்டிருந்தார் விஜயராகவன். ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் விழுமியங்களைச் சுமந்துகொண்டிருந்த விஜயராகவனுக்கு மனைவி இந்திராவும் மூன்று மகள்களும் ஒத்திசைவாக இருந்தார்கள். ஊருக்கு நேர்ந்துவிட்டதைப் போல் அவர் இருந்ததை உள்ளபடி ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

நடமாட்டத்தில் இருக்கும்போதே தான் இறந்துவிட வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அதன்படியே சில நாட்களுக்கு முன் அவருக்கு மரணம் வாய்த்தது. இறுதி அஞ்சலி செலுத்தவந்த பெருங்கூட்டத்தில் வர்க்கம், சாதி, மதம் மற்றும் இனம் கடந்த மனிதர்களைப் பார்க்க முடிந்தது.

- கே.பாரதி, எழுத்தாளர். தொடர்புக்கு: bharathichandru14@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x