

சார்பேட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபுபாய் பரம்பரை... இவையெல்லாம் குடும்பப் பரம்பரைகள் அல்ல. குத்துச் சண்டையைக் கற்றுக்கொடுத்து வளர்த்தெடுத்த பயிற்சி மையங்கள். வடசென்னையில் 1940-ல் தொடங்கி 1980-கள் வரை குத்துச் சண்டை மக்களின் வாழ்வோடு கலந்திருந்தது.
சார்பேட்டா பரம்பரையிலிருந்து பிரிந்துவந்த பாபு என்பவரால், கறியாரா பாபுபாய் பரம்பரை தொடங்கப்பட்டது. அவர் கறிக்கடை வைத்திருந்தவர் என்பதால் அந்தப் பெயர்.
தொழில்முறைப் போட்டிகள் நடத்தப்பட்ட விதம் சுவாரஸ்ய மானது என்கிறார் திஷா கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த தணிகைவேல் (35). இவரது தாய்வழிப் பாட்டனார் கண்ணப்ப முதலியார், புரொஃபஷனல் பாக்ஸிங்கில் பல்வேறு போட்டிகளை வென்றவர். ஞாயிற்றுக்கிழமைகளில்தான் போட்டிகள் நடக்கும். மாலை ராகு காலத்துக்கு முன் 4 மணிவாக்கில் தொடங்கி இரவு 9 மணிவரை நடைபெறும். வேடிக்கை பார்க்க மக்கள் திரளாக வருவார்கள். ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் டிக்கெட். தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, மாநகராட்சி ஆகிய துறைகளிடமிருந்து லைசென்ஸ் வாங்க வேண்டும். போட்டி குறித்த தகவல்களை எழுதி மாநகராட்சி ஏ.சி-யிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அவர் அதை கமிஷனருக்கு அனுப்புவார். கமிஷனர் போட்டிக்கு ஒரு நாள் முன்புதான் லைசென்ஸ் தருவார். சில நேரங்களில் போட்டி நடப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான் லைசென்ஸ் கிடைக்கும். டாக்டர் பரிசோதித்து ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் கொடுத்த பின்தான் போட்டியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
வெளியூர்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும்கூடப் போட்டியாளர்கள் வருவார்கள். அதிகபட்சம் 40 பேர் வரை இந்தப் போட்டிகளில் பங்கேற்பார்கள் (20 ஜதைகள்). 2 நிமிடம் போட்டி. இடையில் ஒரு நிமிட இடைவெளி. இது ஒரு சுற்று, இதுபோல் 3 சுற்று, 4 சுற்று, 6 சுற்று, 10 சுற்றுவரை போகும்.
இப்படியெல்லாம் விறுவிறுப்பாக நடந்த போட்டிகள் ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்டன. போட்டிகளில் ரவுடிகள் அதிகம் ஈடுபட்டதாலும் வெட்டுக் குத்து நடந்த தாலும் இந்த விளை யாட்டு நிறுத்தப்பட்டது என்கிறார் தணிகைவேல். எதிராளியை இப்படித் தான் தாக்க வேண்டும் என்ற விதிகள் இருக்க வில்லை. நடுவர்கள் கட்டுப்படுத்துவதும் குறைவு. பல நேரங்களில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்துக்கொள்வார்கள். ஒரு சிலர் போட்டியின் போதே உயிரிழந்தார்கள். போட்டி முடிந்ததும் நடந்த கோஷ்டிச் சண்டைகளில் பலரது உயிருக்கு ஆபத்து வந்திருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தொழில்முறை பாக்ஸிங் தடைசெய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் பரம்பரைகள் குத்துச்சண்டை மட்டுமின்றி சிலம்பம், மான்கொம்பு முதலான தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தன. இன்று இந்த மரபு கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. சில ‘பரம்பரை’கள் காலத்துக்கேற்ப ‘பாக்ஸிங் கிளப்’களாக மாறி இன்றும் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும், அந்த வேகம் அதன் பிறகு திரும்பவே இல்லை.