Published : 13 Feb 2020 08:27 AM
Last Updated : 13 Feb 2020 08:27 AM

டிஎன்பிஎஸ்சியை முறைப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும்?

சத்யா

டிஎன்பிஎஸ்சியின் பணிகளோடு அதன் பொறுப்புகளையும் கணக்கில்கொண்டால், அதை வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு அமைப்பாக மட்டுமே சுருக்கிப் பார்க்க முடியாது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால், அது கடைநிலை அரசு வேலையாக இருந்தாலும்கூட, அது அந்தக் குடும்பத்தின் அல்லது அந்தச் சந்ததியின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கான துவக்கப் புள்ளியாக அமைகிறது. அதனாலேயே, அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஏனைய அமைப்புகளைக் காட்டிலும் பணியாளர் தேர்வாணையங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பை முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும் பட்டதாரிகள், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாக ‘சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்யும் தனியார் நிறுவனங்கள் குறித்த புள்ளிவிவரங்களையும் பார்த்தாலே டிஎன்பிஎஸ்சியின் முக்கியத்துவத்தை உணர முடியும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20,000 பேருக்கு அரசுப் பணியை வழங்கிக்கொண்டிருப்பது மட்டுமின்றி, லட்சக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரிகளின் விரக்தியும் கோபமும் அரசை நோக்கித் திரும்பிவிடாதபடி அவர்களை மடைமாற்றும் பணியையும் டிஎன்பிஎஸ்சி செவ்வனே செய்துவருகிறது. ஏனெனில், நமக்குத் தெரிந்த ஒரு எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ஒருவர் நம் கண் முன்னே வெற்றிபெறும்போது, டிஎன்பிஎஸ்சியின் நேர்மைக்கு அவர்கள் சாட்சியாகிவிடுகிறார்கள்.

முறைகேடுகள் புதிதல்ல

புதிய பட்டதாரிகளை வளாக நேர்காணல் மூலம் கொத்திக் கொண்டுபோய் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பணிகளுக்கு மீண்டும் புதிய பட்டதாரிகளை நியமிக்கும் தனியார் நிறுவனங்களின் ‘பயன்படுத்தித் தூக்கி எறியும்’ கலாச்சாரத்தை இளைஞர்கள் புரிந்துகொண்டதாலோ என்னவோ தொழில்முறைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள்கூட ‘குரூப் 4’ தேர்வுக்கு லட்சக்கணக்கில் முட்டி மோதுகின்றனர். எல்லாவற்றையும்விட, அரசு இயந்திரம் திறமையாகச் செயல்பட பல்வேறு நிலைகளுக்கு ஆகச் சிறந்த மனித வளத்தைத் தேர்வுசெய்து கொடுக்கும் பெரும் பங்கு டிஎன்பிஎஸ்சிக்கு உண்டு. அப்படிப்பட்ட அமைப்பு, தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுமுறைகள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது இது ஒன்றும் புதிதல்ல. காலங்காலமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள், பல்வேறு வழக்குகள், பல்வேறு சீர்திருத்த முயற்சிகள், மீண்டும் முறைகேடுகள் என்று தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என்றாலும், ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் முறையில் அதைக் கணினி கொண்டு திருத்துவதால் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை என்று அனைவரும் நம்பிவந்த சூழ்நிலையில், அந்த அடிப்படை நம்பிக்கையையே ராமேஸ்வரம் கீழக்கரை நிகழ்வுகள் தகர்த்திருக்கின்றன.

ஒரே வருடத்தில் ‘குரூப் 1’ மற்றும் ‘குரூப் 2’ தேர்வுகளை நடத்தி முடித்த வரலாற்றுச் சாதனையின் அதிர்வுகள் அடங்கும் முன்னால், ‘குரூப் 4’ மற்றும் ‘குரூப் 2ஏ’ தேர்வுகளில் நடந்துள்ள வரலாற்று முறைகேடுகள் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதைவிட அதிர்ச்சி, முறைகேட்டை ஒப்புக்கொண்டு அந்த முறைகேடு எப்படி நடந்தது என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தரப்பட்ட விளக்கம். ‘அழியும் மைகொண்ட பேனா’, ‘சென்னையை நோக்கி வரும் வழியில்’ என்பதெல்லாம் நம்பும் வகையில் இல்லை. ‘குரூப் 4’ தேர்வில் நடந்திருக்கும் முறைகேடுகள் தேர்வு மையங்களில் அல்லது விடைத்தாள் திருத்தும் மையங்களிலேயே நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இணையவழித் தேர்வு தீர்வாகுமா?

முறைகேடுகளுக்குத் தீர்வாகப் பெரும்பாலானவர்கள் இணையவழித் தேர்வை முன்வைக்கிறார்கள். ஆனால், நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில்கொண்டால், அதிலும் முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கிறது. காரணம், பொதுவாக ‘குரூப் 2’ மற்றும் ‘குரூப் 4’ தேர்வுகள் 10 லட்சம் முதல் 20 லட்சம் தேர்வர்கள் எழுதும் தேர்வு. அத்தனை லட்சம் கணினிகளுக்கு எங்கே செல்வது? தேர்வு மையங்களாகச் செயல்படும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் கணினிகளைக் கூட்டினாலும் எண்ணிக்கை போதாது.

அனைத்துக் கணினிகளுக்கும் வலைதள இணைப்பு, அதன் வேகம், தேர்வு நடக்கும்போது மின்தடை போன்ற இடையூறு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெனரேட்டர்கள் இருந்தாலும் மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக அவை இயங்க வேண்டும். ஏனெனில், போட்டித் தேர்வில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். ஏதாவது ஒரு சில தேர்வு மையங்களில் வலைதள இணைப்பிலோ, மின் இணைப்பிலோ அல்லது ஜெனரேட்டர் இயக்கத்திலோ ஒரு சிறு தொழில்நுட்பக் கோளாறு என்றால்கூட, அந்தத் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள், அவர்களது வெற்றி வாய்ப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஏனெனில், இது போட்டித்தேர்வு.

பொதுவாக, இணையவழித் தேர்வு நடக்கும் மையங்களில் இருக்கும் ‘கேபின்’ போன்ற அமைப்பு தேர்வர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் ஏதுவாக இருக்கும். அடுத்ததாக, ஒவ்வொரு கணினியிலும் வலைதள இணைப்பு இருக்கும் காரணத்தால், கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால் கூகுள் உதவியுடன் சரியான விடையை அளித்துவிட முடியும். இந்த முறைகேடுகளும் மேற்சொன்ன தொழில்நுட்பக் கோளாறுகளும் 2016-ல் நடந்த ‘குரூப் 2’ முதன்மைத் தேர்வில் நடந்தேறியது. அதுதான் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தேர்வர்களை உள்ளடக்கிய முதலாவது இணையவழித் தேர்வு. முதன்முறையாக ‘குரூப் 2’ முதன்மைத் தேர்வு ‘அப்ஜெக்ட்டிவ்’ முறையில் நடத்தப்பட்டதும் அப்போதுதான்.

முறைப்படுத்தல்கள் தேவை

நேர்மையான அதிகாரிகள் பலரும் தேர்வு முறைகேடுகளைக் களைய சீர்திருத்தங்களைச் செய்தாலும் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. 15 ஆண்டுகளாகப் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு ஆலோசனை அளித்துவரும் அனுபவத்தின் அடிப்படையில், எனது ஆலோசனைகள் இவை.

தேர்வு மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். மாவட்டத் தலைநகரில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். உதாரணமாக, ‘குரூப் 4’ தேர்வுக்கு ஒரு மாவட்டத்துக்குச் சராசரியாக 5 நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுகின்றன. எனவே, மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பு எல்லையும் விரிவானதாக இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி அனுப்பும் முத்திரையிடப்பட்ட வினாத்தாள்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பின், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்குப் பாதுகாப்புடன் அனுப்பப்பட வேண்டும். தேர்வு முடிந்தவுடன் மாவட்டத்தின் அனைத்துத் தேர்வு மையங்களிலிருந்தும் விடைத்தாள்களைப் பத்திரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டும். இவை அனைத்துக்கும் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. பிறகு, அந்த வினாத்தாள்கள் அங்கிருந்து சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

மாவட்டத் தலைநகரில் மட்டுமே தேர்வு நடத்துவதில் தேர்வர்களுக்குச் சிரமம் ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பவரும் தனது மாவட்டத் தலைநகரை சுமார் ஓரிரு மணி நேரத்தில் அடைந்துவிட முடியும். எனவே, இது சாத்தியமே.

நம்பிக்கை அளிக்குமா ஓஎம்ஆர்?

வினாத்தாள் பொதியின் முத்திரையைத் தேர்வு அறையில் மாணவர்கள் முன்னிலையில் உடைப்பது நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும், தேர்வு முடிந்தவுடன் ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மைய அலுவலகத்துக்குச் சாதாரணமாகவே எடுத்துச்செல்லப்படுகின்றன. விடைத்தாள்கள் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாகவே அனுப்பப்படுகின்றன என்ற நம்பிக்கை உருவாக வேண்டும்.

ஓஎம்ஆர் விடைத்தாள்களுடன் கரிம நகல் தாள் (கார்பன் காப்பி) ஒன்றும் இணைக்கப்பட வேண்டும். தேர்வு முடிந்தவுடன் நகல் தாள் தேர்வு எழுதியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். நகல் தாள் பதிவு சரியாக இருக்கிறதா என்பதைத் தேர்வறைக் கண்காணிப்பாளர் ஒப்பிட்டுச் சான்றளிக்க வேண்டும். அதைப் போலவே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின், ஒவ்வொரு தேர்வரும் தனது ஓஎம்ஆர் விடைத்தாளைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் டிஎன்பிஎஸ்சியின் வலைதளத்தில் வழங்கப்பட வேண்டும்.

முதன்மைத் தேர்வு மதிப்பீடு

முதன்மைத் தேர்வு விடைத்தாளைத் திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு நேரடியாக விடைத்தாள்களைத் தராமல், விடைத்தாள்களை ‘ஸ்கேன்’ செய்து அதைக் கணினித் திரை வழியாகப் பார்த்து மதிப்பெண் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். தேர்வர்களின் விடைத்தாள்கள் மீது மதிப்பீடு செய்பவர்கள் பேனாவை வைக்கவே கூடாது. இதன் மூலமும் நிறைய முறைகேடுகளைத் தடுக்க முடியும். இந்த முறையை 2019 ‘குரூப் 1’ முதன்மைத் தேர்வில் டிஎன்பிஎஸ்சி நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அது உண்மையெனில் மகிழ்ச்சி, தொடர்ந்து இந்த முறையைத் தொடர வேண்டும்.

முதன்மைத் தேர்வு எழுதியவர்கள், அவர்கள் தேர்வில் வெற்றிபெற்றாலும் இல்லையென்றாலும் தங்களது விடைத்தாள்களைப் பார்வையிடும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு, கலந்தாய்வில் பணி ஒதுக்கீடு முடிந்த பின், இணையத்தின் வழி தங்கள் விடைத்தாள்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கலாம். அதைப் போலவே, இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு, கலந்தாய்வில் பணி ஒதுக்கீடு முடிந்த பின் வெற்றிபெற்றவர்களின் விடைத்தாள்களை அனைவரும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுபோன்ற வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே தேர்வில் தோல்வியுற்றவர்கள் தங்களது விடைத்தாள்களின் தரத்தை வெற்றிபெற்றவர்களின் விடைத்தாள்களின் தரத்தோடு ஒப்பீடு செய்துகொள்ள முடியும். இதெல்லாம் நடக்கிற காரியமா, எவ்வளவு கால விரயம், எவ்வளவு மனித சக்தி தேவைப்படும் என்று கேள்விகள் எழலாம். ‘அதிவேக ஸ்கேனர்’களின் யுகத்தில் இதெல்லாம் ஒரு விஷயமே அல்ல.

நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள்

பொதுவாக, ‘குரூப் 1’ மற்றும் ‘குரூப் 2’ நேர்முகத் தேர்வில் ‘ஸ்லாப் சிஸ்டம்’ (படிநிலை முறை) பின்பற்றப்படுகிறது. ‘குரூப் 1’ நேர்முகத் தேர்வில் ஐந்து படிநிலைகள். முதல் படிநிலையில் 75 மதிப்பெண்கள். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது படிநிலைகளில் முறையே 67.5, 60, 52.5, 45. இதில் ஒரு படிநிலை மதிப்பெண்ணுக்கும் அடுத்த படிநிலை மதிப்பெண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். அதைவிட முதல் மதிப்பெண்ணுக்கும் கடைசி மதிப்பெண்ணுக்கும் உள்ள இடைவெளியைக் கவனியுங்கள். வெறும் ஒரு மதிப்பெண் இடைவெளியில் ஒருவரின் தர வரிசை மற்றும் அவருக்குக் கிடைக்கும் பணி என அவரின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்பட்டுவிடும். எழுத்துத் தேர்வில் முதலிடத்தில் இருப்பவருக்கு கடைசிப் படிநிலை மதிப்பெண்ணைப் போட்டு, அவரை நூற்றுக்கணக்கானவர்களுக்குப் பின் தள்ளி, அவரின் வெற்றி வாய்ப்பையே நிர்மூலமாக்க முடியும். அதேசமயத்தில், எழுத்துத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவருக்கு நேர்முகத் தேர்வில் முதல் படிநிலை மதிப்பெண் வழங்கி அவரைத் துணை ஆட்சியராகவோ அல்லது காவல் துறைத் துணை கண்காணிப்பாளராகவோ ஆக்கிவிட முடியும்.

நேர்முகத் தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண் படிநிலைகளின் எண்ணிக்கையையும் ஒவ்வொரு அடுக்கு மதிப்பெண்ணுக்கு இடையே உள்ள மதிப்பெண் இடைவெளியையும் குறைத்தே ஆக வேண்டும். உதாரணமாக, ‘குரூப் 1’ நேர்முகத் தேர்வில் ஐந்து படிநிலைகள் என்ற முறையை மூன்றாகக் குறைத்து ஒவ்வொரு படிநிலையிலும் உள்ள மதிப்பெண் இடைவெளியை இரண்டு மதிப்பெண் என்று குறைக்கலாம். அதாவது ‘குரூப் 1’ நேர்முகத் தேர்வில் முதல் படிநிலை மதிப்பெண் 75. இரண்டாம் படிநிலை மதிப்பெண் 73. மூன்றாவது படிநிலை மதிப்பெண் 71. இவ்வாறு செய்தால், நேர்முகத் தேர்வு பற்றிய நெடுநாள் குற்றச்சாட்டுகளுக்கு வழியில்லாமல் போய்விடும்.

நேர்முகத் தேர்வில் ஒரு மதிப்பீட்டுக் குழுவில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் ஒருவர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருப்பார். மற்ற மூவரும் பல்வேறு அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிபவர்களாகவும் தேர்வாணையத்தின் அழைப்பை ஏற்று வருகைதருபவர்களாகவும் இருப்பார்கள். நேர்முகத் தேர்வுக்கு வரும் தேர்வரிடம் 20 நிமிடங்களோ அல்லது 30 நிமிடங்களோ கேள்விகளைக் கேட்பார்கள். முடிவில், அந்தத் தேர்வருக்கு எந்த ‘அடுக்கு’ மதிப்பெண் வழங்குவது என்பதை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் மட்டுமே முடிவெடுக்கிறார், சிறப்பு அழைப்பாளர்களாக வருகைபுரியும் மற்ற மூவருக்கும் மதிப்பெண் வழங்கும் அதிகாரம் இல்லை என்றே சொல்லப்படுகிறது. நேர்முகத் தேர்வு முடிந்து, மதிப்பீட்டுக் குழுவில் இடம்பெற்ற நால்வரும் தனித்தனியாக வழங்கிய மதிப்பெண்களிலிருந்து சராசரியைக் கணக்கிட வேண்டும்.

முடிவுகளில் வெளிப்படைத்தன்மை

எந்தத் தேர்வின் முடிவாக இருந்தாலும், அதைக் குறிப்பிட்ட மாணவர் மட்டுமே தெரிந்துகொள்ளும் வகையில் ரகசியமாக வெளியிடாமல், வெற்றிபெற்றவர்களின் பெயர், பதிவு எண், சொந்த மாவட்டம், தேர்வு எழுதிய மாவட்டம் போன்ற அனைத்துத் தகவல்களும் அடங்கிய முடிவுகளை ‘பிடிஎஃப்’ வடிவத்தில் வெளியிட வேண்டும். ‘குரூப் 4’ தேர்வில் நடந்த முறைகேடுகள் தற்போது வெளியே வருவதற்குக் காரணமே தொடர் பதிவெண்களைக் காட்டிக்கொடுத்த ‘பிடிஎஃப்’ வடிவம்தான்.

இறுதியாக, மாநிலத் தேர்வாணையத்துக்கு நியமிக்கப் படும் உறுப்பினர் தேர்வுமுறையிலேயே திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். தற்சமயம் அரசுப் பணியில் ஒருவர் பத்தாண்டுகள் பணியாற்றியிருந்தால் போதும், அவரைத் தேர்வாணைய உறுப்பினராக ஆளுநர் நியமிக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், பெரும்பாலும் ஆளுங்கட்சி யாரைப் பரிந்துரைக்கிறதோ அவரையே ஆளுநர் நியமிக்கும் நடைமுறை இருக்கிறது. ஆளுங்கட்சியின் ஆதரவோடு தேர்வாணைய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆறாண்டு காலம் அந்தப் பதவியை வகிக்கிறார். மாநில அரசுப் பணிகளில் இருந்தவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஆட்சிப் பணித் துறை தேர்வெழுதி வென்ற இளம் அதிகாரிகளையும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கலாம். மாநில அரசின் மூத்த அதிகாரிகள், ஆட்சிப் பணித் துறையைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் இருவரும் சேர்ந்து பணியாற்றும்போது, டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மை மேலும் அதிகமாகும். இதெல்லாம் சாத்தியமா? நமக்கு அரசியல் உறுதிப்பாடு இருந்தால், நிச்சயம் சாத்தியமே.

- சத்யா, போட்டித் தேர்வு ஆலோசகர்.

தொடர்புக்கு: sathyaiasacademy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x