Published : 12 Feb 2020 08:14 am

Updated : 12 Feb 2020 08:14 am

 

Published : 12 Feb 2020 08:14 AM
Last Updated : 12 Feb 2020 08:14 AM

அமைப்புசாராத் தொழில்களை முறைப்படுத்துகிறோமா... அலட்சியப்படுத்துகிறோமா?

work-related

அமைப்புசாராத் தொழில்களின் வளத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அரசின் கொள்கைகள் முக்கியத்துவம் தரவில்லை; இது மத்திய நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு சந்தையையும் பொது வெளியையும் கவனிக்கும்போது புலப்படுகிறது. அரசும் அதன் கொள்கை ஆலோசகர்களும் தாங்கள் விரும்பும் வகையில் அமைப்புசாராத் தொழில்களை முறைப்படுத்த விரும்புகின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் அத்துறையின் வளர்ச்சித் திறனையே அவர்கள் மழுங்கடித்துவிடுவார்கள் என்று சமீபத்திய இரண்டு ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

முதலாவது அறிக்கை, பொருளாதார அறிஞர் சீமா ஜெயச்சந்திரன் தயாரித்து ‘பொருளாதார ஆய்வுக்கான தேசிய அமைப்பு’ (என்பிஇஆர்) மூலம் வெளியிடப் பட்டிருக்கிறது. அமைப்புசாராத் தொழில்களைக் கட்டமைப்புரீதியாக முறைப்படுத்துவதன் மூலம், அவற்றின் உற்பத்தியோ விற்பனையோ வளர்ச்சியோபெருகுவதில்லை என்று வளரும் நாடுகளில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

'சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு' (ஐஎல்ஓ) சார்பில் ஆய்வு மேற்கொண்ட சந்தோஷ் மெஹ்ரோத்ரா, அமைப்புசாராத் தொழில் அமைப்புகள் தாங்களாகத்தான் வளர்ந்து அமைப்புசார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் வர வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்துவதால் நன்மை ஏற்படாது என்று தனது ஆய்வின் முடிவாகத் தெரிவிக்கிறார்.

‘பொறி’யில் சிக்கவைப்பது

இங்கு முக்கியமான கேள்வி, அமைப்புசாரா சிறு நிறுவனங்களை முறைப்படுத்துவதன் மூலம் யாருக்கு நன்மை? முறைப்படுத்துவதால் சேவையைக் கடைக்கோடி வரை அளிக்க வேண்டிய வங்கிகளுக்குச் செலவு குறையும். இந்நிறுவனங்களைக் கண்காணிப்பதும் அவற்றின் மீது வரி விதிப்பதும் அரசுக்கும் எளிதாகிவிடும். ஆனால், இந்த நடைமுறை, அமைப்புசாரா நிறுவனங்களுக்கே மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மானுடவியல் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் சி.ஸ்காட் இதைத் தன்னுடைய ‘சீக்கிங் லைக் எ ஸ்டேட்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

இந்தியா இப்போது வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. அமைப்புசாராத துறையானது இளைஞர்களுக்கும், விவசாயம் சார்ந்த வேலைகளை விட்டு நகரங்களுக்குக் குடிபெயர்பவர்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, முறைப்படுத்தலால் ஏற்படக்கூடிய இன்னல்கள் என்ன என்று, அமைப்புசாராத் தொழில்புரிவோரினுடைய கண்ணோட்டத்தின் வழியாக ஆட்சியாளர்கள் முதலில் கவனிப்பது நல்லது. அரசும் அமைப்புசார்ந்த தொழில் துறையும் அமைப்புசாராத் தொழில்களை முறைப் படுத்தலுக்கு உள்ளாகத் திணிக்கும் நடைமுறைகள் முதலில் அவற்றின் உற்பத்திச் செலவைக் கூட்டுகின்றன. அமைப்புசார்ந்த அமைப்பாக மாறுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளைவிட இந்தச் செலவுகள் அவற்றுக்குச் சுமையாகிவிடுகின்றன என்று சீமா ஜெயச்சந்திரன் தெரிவிக்கிறார்.

அமைப்புசாரா நிறுவனங்கள் தங்களுடைய தொழில் அல்லது வர்த்தகத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ளத் தாங்களாகவே பல வழிகளில் முயன்று அதில் வெற்றியடைகின்றன. தங்களுடைய துறையிலேயே உள்ள மூத்த அமைப்புகளின் வழிகாட்டலைப் பின்பற்றி அவை லாபமடைகின்றன. சிறு நிறுவனங்களின் உரிமையாளர்களும் தொழிலாளர்களும் வேலையைச் செய்யும்போதே தங்களுடைய திறமையை மேலும் மேலும் வளர்த்துக்கொள்கின்றனர். இதுவே திறன் வளர்ப்புக்குச் சிறந்த வழி. இதற்கு முக்கியக் காரணம், தங்களுடைய தொழிலுக்காக வேறு எங்காவது பயிற்சிக்குச் செல்ல அவர்களுக்கு நேரமோ வசதிகளோ கிடையாது.

உலகச் சங்கிலி

இந்தியாவில் உள்ள அமைப்புசாரா நிறுவனங்களை உலகச் சந்தையில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆசை சிலரிடம் நிலவுகிறது. மிகக் குறைந்த விலையில் தங்களுக்குப் பண்டங்களையும் சேவைகளையும் அளிக்கக்கூடிய நிறுவனங்களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யவே பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன. பெரு நிறுவனங்களுக்குப் பண்டங்களை வழங்கப் பல்வேறு வகை நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. தங்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் அளிக்கும் நாடுகளில் ஊதியம் அல்லது செலவுகள் உயர்ந்தால், அதைவிடக் குறைவான செலவுள்ள நாடுகளைத் தேட ஆரம்பிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். இப்படித் தேடும்போது மிகக் குறைவான விலையில் தரக்கூடிய நிலையில் இருப்பவை அமைப்புசாராத் தொழில் நிறுவனங்கள்தான். எனவே, அமைப்புசார்ந்த நிறுவனங்களாக இவற்றை மாற்ற அரசு விரும்பினாலும், சந்தையின் தேவை என்னவோ அமைப்புசாராத நிறுவனங்களை நாடுவதாகத்தான் இருக்கிறது.

எனவே இந்திய அரசின் நோக்கம், அமைப்புசாராத் தொழில் பிரிவுகளை அளவில் குறைப்பதாக இருக்கக் கூடாது. அதற்கு மாறாக, இத்துறையில் உள்ள தொழிலாளர்கள் அதிக ஊதியம் பெறுவதற்கான சூழலை அது ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அமைப்புசாராத் தொழிலில் ஈடுபடுவோரை அப்பிரிவுகளின் உரிமையாளர்கள் நியாயமாக நடத்துவதை உறுதிசெய்வதே நல்ல சீர்திருத்தமாக இருக்கும்.

மீள்பார்வை அவசியம்

இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருக, வருவாய் உயர, உற்பத்தி அதிகரிக்க அமைப்புசாராத் துறைகள் தொடர்பான தனது கொள்கையை அரசு மீள்பார்வை செய்வது அவசியம். இது தொடர்பாக சில நடவடிக்கைகளை அரசு எடுத்தாக வேண்டும். முதலாவதாக, அமைப்புசாராத் தொழில் துறையை மட்டம்தட்டுவதை அரசும் அதன் ஆலோசகர்களும் நிறுத்த வேண்டும். அத்துறையைக் குறுக்கவும் முயலக் கூடாது. இரண்டாவதாக, அமைப்புசாராத் தொழில் பிரிவுகளுக்குள் தொழிலாளர்களும் தொழில் முனைவோர்களும் எப்படி விரைவாகத் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்று கொள்கை வகுப்பாளர்கள் ஆராய வேண்டும். மூன்றாவதாக, அமைப்புசாராத நிறுவனங்கள் எந்த வகையில் வளர வேண்டும் என்று விரும்புகின்றனவோ அந்த வகையை ஆதரிப்பது எப்படி என்று அரசின் கொள்கை வகுப்பாளர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுடைய வசதிக்காக, எப்படி முறைசார்ந்த அமைப்பாக மாறுவது என்ற கருத்தை அவற்றின் மீது கட்டாயப்படுத்தக் கூடாது. நான்காவதாக, சிறுதொழில் பிரிவுகளின் வலையமைப்புகளும் தொகுப்புகளும் வலுப்படுத்தப்பட வேண்டும். ஐந்தாவதாக, தொழிலாளர் துறைச் சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசின் தொனி மாற வேண்டும்.

முதலாளிகள் நினைக்கும்போது வேலைக்கு வைத்துக்கொள்ளவும், விரும்பாதபோது வீட்டுக்கு அனுப்பவுமான நடைமுறை மாறி, தடையில்லாத தொழில் சூழல் நிலவ வேண்டும் என்று சீர்திருத்தத்தின் மைய அம்சமாகப் பலர் கோரிவருகின்றனர். அரசிடம் அனுமதி பெறாமல் தொழில் நடத்தும் தொழில் பிரிவுகளில் வேலைசெய்யும் தொழிலாளர் எண்ணிக்கையை மேலும் பல மடங்கு உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். அதாவது, தொழிற்சாலை ஆய்வாளரோ வேறு அதிகாரிகளோ குறுக்கிடாதபடியும் அரசின் எந்தச் சட்டத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதபடிக்கும் தொழில் நிறுவனங்களுக்கான வடிவ இலக்கணங்களையே மாற்றிவிட வேண்டும் என்று பலர் கோருகின்றனர்.

சிறுதொழில்களில் வேலைக்கு அமர்த்தவோ நீக்கவோ இப்போதும் எந்தச் சட்டமும் தடையாக இல்லை. பெரும்பாலான சிறு பிரிவுகளில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் தொழிலாளர்கள் வேலைசெய்கின்றனர். தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்வதாக இருந்தால், அதை வேறு மாதிரி செய்ய வேண்டும். சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும், நிர்வாகம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இறுதியாக, அமைப்புசாராத் துறையில் வேலை தேடுவோருக்கு மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பும் சுகாதாரச் சேவைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும். பணியின்போது விபத்தால் ஊனமடைந்தால் அதற்கேற்ப இழப்பீடுகளும் தொடர் பணப் பயன்களும் வழங்கப்பட வேண்டும். வயது முதிர்ந்த தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும். தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புகளை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டும். தொழில் செய்வதற்கு வசதியான சூழலை உருவாக்குகிறோம் என்ற நோக்கில், தொழிலாளர்களின் நலன்களைப் புறக்கணிக்கக் கூடாது, அவர்களைச் சுரண்டும்படி விட்டுவிடக் கூடாது.

- அருண் மைரா,திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர்.© ‘தி இந்து’, தமிழில்: சாரி.


அமைப்புசாராத் தொழில்கள்தொழில்களை முறைப்படுத்துவதுதொழில்களில் அலட்சியம்பொறியில் சிக்கவைப்பதுமீள்பார்வை அவசியம்இந்தியாவில் வேலைவாய்ப்புமுதலாளிகள் நினைப்பதுஅமைப்புசாரா நிறுவனங்கள்தொழில் வர்த்தகம்சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author