Published : 11 Feb 2020 10:44 AM
Last Updated : 11 Feb 2020 10:44 AM

டெல்லியை அறிந்துகொள்ளல்!

ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடு எனும் அளவுக்கு மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் விரிந்திருக்கும் இந்தியாவின் மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் பெரிய ஒன்று கிடையாது. ஆனாலும், இந்தியாவைத் தாண்டியும் கவனம் ஈர்க்கும் தேர்தலாக டெல்லி தேர்தல் திகழ்கிறது. காரணம் என்ன? டெல்லியின் இன்றைய பின்னணி என்ன? டெல்லியைப் புரிந்துகொள்வோம்.

என்சிடி... என்சிஆர்!

டெல்லி நகரமானது, ஹரியானாவால் மூன்று பக்கங்களிலும் உத்தர பிரதேசத்தால் ஒரு பக்கத்திலும் சூழப்பட்ட நிலப்பரப்பு. டெல்லி நகரத்தைப் பொறுத்தவரை புது டெல்லி, தேசிய தலைநகர் பகுதி (என்சிடி), தேசிய தலைநகர் பிராந்தியம் (என்சிஆர்) என்று மூன்று வகையில் அடையாளப்படுத்தப்படுகிறது.

புதிய, பழைய டெல்லி: இது குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம், நாடாளுமன்றம், மத்திய அரசின் தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளைக் கொண்டது. பிரிட்டிஷார் தன்னுடைய நிர்வாகத்துக்காக உருவாக்கிய கட்டமைப்பை ஒட்டி உருவானது. பழைய டெல்லி என்பது முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த பகுதி; நெடுங்காலமாக உருவாகிவந்த டெல்லியின் நீட்சி அது. தேசிய தலைநகர் பகுதி: பழைய டெல்லி, புது டெல்லி இணைந்த ‘தேசிய தலைநகர் பகுதி’ (என்சிடி). இந்தப் பகுதிக்குத்தான் தற்போது தேர்தல் நடந்துள்ளது.

தேசிய தலைநகரப் பிராந்தியம்: என்சிஆர் என்று சொல்லப்படும் ‘டெல்லி தலைநகர பிராந்திய’த்தில் தேசிய தலைநகர் பகுதியுடன் (என்சிடி) அதைச் சுற்றியுள்ள உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஆனால், தேசிய தலைநகர் பகுதி நீங்கலாக, பிராந்தியத்தின் மற்ற பகுதிகளுக்கு இத்தேர்தல் பொருந்தாது. அவரவர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில்தான் அப்பகுதி மக்கள் வாக்களிப்பார்கள். அதேசமயம், டெல்லியை ஒருங்கிணைந்த வகையில் அரசு நிர்வகிப்பதற்காக இந்த வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது, சென்னைப் பெருநகரம் என்ற அமைப்பின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களை இணைத்து நகர்ப்புறத் திட்டமிடல், போக்குவரத்து, காவல் துறை ஆகிய துறைகளில் நிர்வகிப்பதைப் போன்றது.

மூன்றடுக்கு நிர்வாகம்

டெல்லி நகரமானது 1947-க்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய ஆட்சிக்கு உட்பட்ட நேரடிப் பகுதியானது. டெல்லி நகரத்தை நிர்வகிக்க நகராட்சி மன்றம்தான் முதலில் நிர்வாக அலகாக இருந்தது. பிறகு, நகரம் வளர வளர அது மாநகராட்சியானது. டெல்லியை மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட நிர்வாகப் பகுதியாக இருப்பதை மாற்றி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், புதுச்சேரியைப் போல டெல்லியும் சட்டமன்றத்துடன் இணைந்த நேரடி ஆட்சிப் பகுதியாக ஆக்கப்பட்டது.

சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, டெல்லியை மூன்றடுக்குகளில் வெவ்வேறு அமைப்புகள் நிர்வகிக்கின்றன. டெல்லியில் பாதுகாப்பு முக்கியம் என்ற காரணத்தின் பெயரால், டெல்லி காவல் துறையை மத்திய உள்துறை அமைச்சகம் தன் கையில் வைத்திருக்கிறது. டெல்லிக்கான திட்டமிடல் முக்கியம் என்ற பெயரில் டெல்லியின் நில நிர்வாகத்தை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தன் கையில் வைத்திருக்கிறது. ஆக, ஒரு மேயரைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதல் அதிகாரம்தான் டெல்லி முதல்வருக்கும் அடுத்த நிலையிலுள்ள உள்ளாட்சி நிர்வாகிகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்ற அதிகாரம்

டெல்லி சட்டமன்றத்தின் அதிகாரங்கள் பிற மாநிலங்களைப் போன்றவை அல்ல. துணை நிலை ஆளுநரின் கண்காணிப்பு, ஒப்புதல் அவசியம். அத்துடன் டெல்லி சட்டமன்றத்துக்கு ஒதுக்கப்படாத அதிகாரங்களும் ஆளுநருக்கே உரியது. இதனால், டெல்லி முதல்வரால் பிற மாநில முதல்வர்களைப் போல எல்லாத் துறைகளிலும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் துறைகளில் மட்டுமே முதல்வரால் முழு அதிகாரத்துடன் செயல்பட முடியும். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

ஐந்து உள்ளாட்சி நிர்வாகங்கள்

டெல்லி சட்டமன்றத்தில் 70 தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தொகுதிகள் 7. இதேபோல் உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ், ஐந்து உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன: கிழக்கு டெல்லி மாநகராட்சி, வடக்கு டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி மாநகராட்சி, புது டெல்லி மாநகர மன்றம், டெல்லி கன்டோன்மென்ட் வாரியம்.

நான்கு ஆட்சிமொழிகளின் நகரம்

பல்வேறு மொழிகள் பேசப்படும் மாநிலம். பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள் என்பதால், அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி மற்றும் உருது ஆகியவை டெல்லியின் ஆட்சிமொழிகளாக உள்ளன. டெல்லியில் இந்தி, பஞ்சாபி, உருது, ஆங்கிலம், ஹரியாண்வி, போஜ்புரி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபி, பாரசீக மொழிகளைப் பேசுவோர் வசிக்கிறார்கள்.

மக்கள்தொகை அடிப்படையில் இந்தி - 80.94%, பஞ்சாபி - 7.14%, உருது - 6.31%, வங்காளி - 1.50%, மற்ற மொழிகளைப் பேசுவோர் - 4.11%. இதில் தமிழ் - 0.49%, மலையாளம் - 0.53%, அடக்கம். சமயரீதியில் டெல்லியில் இந்துக்கள் 81.68%, முஸ்லிம்கள் 12.86%, சீக்கியர்கள் 3.4%, ஜைனர்கள் 0.99%, கிறிஸ்தவர்கள் 0.87%, பவுத்தர்கள் 0.11% வசிக்கிறார்கள். ஜொராஸ்டிரியர்கள் (பார்சிகள்), பஹாய்கள், யூதர்களும் வாழ்கின்றனர்.

டெல்லியானது நாட்டின் அரசியல், நிர்வாக, நீதித் துறைகளின் தலைநகரம் என்பதால் நாட்டின் பெரும்பான்மை அச்சு, மின்னணு ஊடகங்களின் தலைமையகங்கள் டெல்லியில் உள்ளன. மேலும், உலகில் உள்ள அனைத்து முக்கிய ஊடகங்களுக்கும் அலுவலகங்களும் நிருபர்களும் உள்ள நகரம் இது.

அரசுக்குச் சொந்தமான ‘பிடிஐ’ செய்தி நிறுவனம், ‘ஆகாஷ்வாணி’ வானொலி நிறுவனம், ‘தூர்தர்ஷன்’ ஆகிய மூன்றும் டெல்லியிலிருந்தே செயல்படுகின்றன. இதேபோல ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளி, மராத்தி, பஞ்சாபி, ஒடியா, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், குஜராத்தி என அனைத்து இந்திய மொழிகளின் ஊடகங்களும் இங்கே தங்கள் தலைமையகத்தையோ, கிளையையோ வைத்திருக்கின்றன. டெல்லியில் நடக்கும் சிறுநிகழ்வும் தேசியச் செய்தியாகும் பின்னணி இதுதான்!

வாக்கு வங்கிகள்

நாடு பிரிவினையால் பாதிக்கப்பட்டபோது, பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் டெல்லியில் குவிந்தனர். பஞ்சாப் மாநிலம் பக்கத்திலேயே இருப்பதால், சீக்கியர் - பஞ்சாபி ஆதிக்கம் டெல்லியில் அதிகம். சமீப காலங்களில் டெல்லியைச் சுற்றி காஜியாபாத், பரீதாபாத், குருகாவோன், நொய்டா, ரேவாரி ஆகிய ஊர்களில் தொழிற்பேட்டைகள் ஏற்பட்டதால் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தவர்களும் அதிகம் குடியேறினர்.

வேலை நிமித்தமாக வங்காளிகளும் பிஹாரிகளும் கணிசமான தென்னிந்தியர்களும் வடகிழக்கு மாநில மக்களும் டெல்லியில் குடியேறியுள்ளனர். சாதிரீதியாக பிராமணர்கள், ஜாட்டுகள், குஜ்ஜார்கள், பனியாக்களும் மதரீதியில் சீக்கியர்கள், முஸ்லிம்களும், பிராந்திய அடிப்படையில் உத்தராகண்ட், வங்காளப் பகுதிகளிலிருந்து வந்தவர்களும் குறிப்பிடத்தக்க வாக்குப் பின்புலத்தைக் கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் எல்லா வகையிலும் இங்கு சிறுபான்மையினர்தான். தேர்தலில் பெரிய செல்வாக்கு ஏதும் கிடையாது.

தனிநபர் வருமானம்

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 5% பங்கை டெல்லி கொண்டிருக்கிறது. நாட்டிலேயே தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கும் பிராந்தியங்களில் ஒன்று டெல்லி. உதாரணமாக, ஒரு பிஹாரியின் சராசரி ஆண்டு வருவாயைக் காட்டிலும் ஒரு டெல்லியரின் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 8 மடங்கு அதிகம்.

விரியும் எல்லை... விரைவான வளர்ச்சி...

உலகளவில் ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவுக்கு அடுத்தபடியாகத் தொடர்ந்து விரிவடையும் நகரமாக இருக்கிறது டெல்லி தலைநகரப் பிராந்தியம் (என்சிஆர்). டோக்கியோவின் உத்தேச மக்கள்தொகை 3.7 கோடி. டெல்லிக்கு அடுத்தபடியாக ஷாங்காய், சாவ் பவ்லோ, டாக்கா, கெய்ரோ, பெய்ஜிங் ஆகியவை உலகின் மிகப் பெரிய நகரப் பிராந்தியங்களாக இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய முதல் 10 நகரங்களில், 2010-2020 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துவரும் நகரம் டாக்கா. அதற்கு அடுத்த இடத்தில் வேகமாக வளர்ந்துவரும் நகரமாக டெல்லி உள்ளது.

நாடுகளுக்கு இணையான நகரம்

டெல்லியின் உத்தேச மக்கள்தொகை 2.01 கோடி. இது ஏறக்குறைய 140 நாடுகளின் மக்கள்தொகையைக் காட்டிலும் அதிகமானது. டெல்லியின் மக்கள்தொகையைக் காட்டிலும் சுமார் 50 நாடுகளே அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கின்றன; என்றாலும் பரப்பளவு அடிப்படையில் அவை அதிகமானவை. பரப்பளவு அடிப்படையில் ஒப்பிட வேண்டும் என்றால், பஹ்ரைனைக் காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது. 1,483 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது டெல்லி. 778 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது பஹ்ரைன்.

உலகின் 9 நாடுகள் பரப்பளவு அடிப்படையில் டெல்லியைக் காட்டிலும் சிறியவை. இவ்வளவு விஸ்தீரணமான ஒரு பகுதிக்கான நிர்வாக அதிகாரத்தையும் பெரும்பான்மையை மத்திய அரசே வைத்துக்கொள்ளக் கூடாது என்பது டெல்லி மக்களிடம் வளர்ந்துவரும் எண்ணமாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் டெல்லியை மையமாகக் கொண்டு பேசும் ஆஆக போன்ற கட்சிகள் பெரும் சக்தியாக உருவெடுக்கின்றன.

- தொகுப்பு: சாரி, புவி, வடிவமைப்பு: சோ.சண்முகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x