Published : 07 Feb 2020 09:37 AM
Last Updated : 07 Feb 2020 09:37 AM

360: மின்வெட்டால் துடிக்கும் காஷ்மீர்

மின்வெட்டால் துடிக்கும் காஷ்மீர்

காஷ்மீருக்குச் சோதனை மேல் சோதனைபோல! கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என்ற இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் கிட்டத்தட்ட முடங்கியது. இணையம், போக்குவரத்து போன்றவையும் முடக்கப்பட்டன. இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பிரதேசம் மீண்டுவருவதற்குள் தற்போது மின்வெட்டுப் பிரச்சினையால் தவித்துக்கொண்டிருக்கிறது. தினமும் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை அங்கே மின்சாரம் தடைபடுகிறது. கடுமையான குளிர்காலத்தில் இப்படி மின்வெட்டு ஏற்படுவது அங்குள்ள மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இடைவிடாத மின்சாரம் தேவைப்படும் மருத்துவமனைகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தினசரி 2,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் சூழலில், தற்போது தினமும் 1,200 மெகாவாட் மின்சாரமே காஷ்மீருக்குக் கிடைத்துவருகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ஜம்மு-காஷ்மீர் மக்கள்.

உயர்வான ஃபேஷன் ஷோ

மிகவும் உயரிய ஃபேஷன் ஷோ ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. ஆம்! கடந்த ஜனவரி 26-ம் தேதி நேபாளத்தில் 5,340 மீட்டர் உயரத்தில் நடந்த ஃபேஷன் ஷோதான் அது. எவெரெஸ்ட் சிகரத்துக்குச் செல்லும் அடிவார முகாமில் உள்ள காலா பத்தார் என்ற இடத்தில்தான் அந்த நிகழ்வு இடம்பெற்றது. தனியார் நிறுவனங்களும் நேபாளத்தின் சுற்றுலாத் துறையும் சேர்ந்து இந்த நிகழ்வை நடத்தியிருக்கின்றன. ‘நேபாளத்துக்கு வாருங்கள்’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பங்குதான் இந்த நிகழ்வு. பருவநிலை மாற்றமும் சூழலுக்கு இயைந்த ஃபேஷனும்தான் இந்த ஃபேஷன் ஷோவின் கருப்பொருள்கள். இத்தாலி, ஃபின்லாந்து, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்த அழகிகளும் அழகன்களும் இந்த அழகு நிகழ்வில் கலந்துகொண்டார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களில் பலவும் இயற்கை வழியிலான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஏற்கெனவே, குளிர் மிகுந்த அந்தப் பிரதேசம், இந்நிகழ்வால் மேலும் குளிராகியிருக்கிறது. கூடவே, மிக உயரத்தில் நடந்த ஃபேஷன் ஷோ என்ற கின்னஸ் சாதனையையும் இந்நிகழ்வின் மூலம் பெற்றிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x