சூடுபிடிக்கும் முட்டை அரசியல்

சூடுபிடிக்கும் முட்டை அரசியல்
Updated on
2 min read

சூடுபிடிக்கும் முட்டை அரசியல்

முட்டை விவகாரம் மத்திய பிரதேசத்தில் பெரிதாகிக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் 97,135 அங்கன்வாடிகள் இருக்கின்றன. இந்த அங்கன்வாடிகள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட 62 லட்சம் குழந்தைகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்கள் 7 லட்சம் பேருக்கும் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படும் திட்டத்தை கமல் நாத் உத்தேசித்துள்ளார். மக்களை அசைவ உணவுப் பழக்கத்துக்கு ஆளாக்கும் முயற்சி என்று பாஜகவும் சமண அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. 2016 தேசிய குடும்ப உடல்நல ஆய்வின்படி குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் முதல் மூன்று இடங்களுக்குள் மத்திய பிரதேசம் வருகிறது. 43% குழந்தைகள் குறைவான உடல் எடையுடனும், 26% குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 51.5% பழங்குடியினக் குழந்தைகளும், 45.9% பட்டியலினத்துக் குழந்தைகளும் எடை குறைவுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். “இந்தப் பின்னணியில் அவர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் முட்டை கொடுப்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதமாக அமையும், இதை எதிர்த்து உணவு அரசியல் செய்கிறார்கள் மத்திய பிரதேச பாஜகவினர்” என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

புகைப்பழக்கமும் செல்களின் அற்புத சக்தியும்

பல்லாண்டுகளாக புகைபிடிப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி. வெகு நாட்களாகப் புகைபிடித்ததில் உங்கள் நுரையீரல் செல்கள் சேதமடைந்திருக்கும். ஆனால், புகைபிடிப்பதை ஒரேயடியாக நிறுத்திவிட்டால் நுரையீரல் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் என்று ஜப்பானில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புகையிலையில் ஆயிரக் கணக்கான வேதிப்பொருள்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நுரையீரல் செல்களின் டிஎன்ஏவில் மாறுதலை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த மாறுதல் ஏற்பட்ட செல்கள்தான் புற்றுநோய்க்குக் காரணமாகின்றன. புகைபிடிப்பதை விட்டால் இந்த செல்களுக்குப் பதிலாக அந்த இடத்தில் ஆரோக்கியமான புதிய செல்கள் உற்பத்தியாகும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. புகைப்பழக்கத்தை விட்டவர்களின் 40% பேரின் நுரையீரல் செல்களானவை புகைப்பழக்கமே இல்லாதவர்களின் நுரையீரல் செல்கள் போலவே ஆகிவிடுகின்றன. இது மருத்துவத் துறைக்கே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கண்டுபிடிப்பாக அமைந்திருக்கிறது. நீண்ட நாட்களாகப் புகைபிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்தை விடுவதற்கு இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு இருக்க முடியாதுதானே!

இயந்திர மனிதனுக்கும் வியர்க்கும்!

மனிதர்களால் செய்யப்படக்கூடியவை, செய்ய முடியாதவை என்று எல்லாவற்றுக்கும் சேர்த்து இயந்திர மனிதர்கள் உருவாக்கப்படுகின்றன. செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் இயந்திர மனிதர்களின் அமைப்பை மேலும் மேலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்கிறது. இந்த நிலையில் மற்றுமொரு சிறப்பம்சத்தை இயந்திர மனிதனுக்குச் சேர்த்திருக்கிறார்கள் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தையும் இத்தாலிய தொழில்நுட்ப நிறுவனத்தையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். ஆம், சுணக்கமில்லாமல் வேலை செய்யும் இயந்திர மனிதர்களுக்கே வியர்க்க வைத்திருக்கிறார்கள். மனிதர்களுக்கு வியர்வை என்பது உடலின் வெப்பத்தைத் தணிப்பதற்கானது. அதேபோல் இயந்திர மனிதர்களும் அதிக வேலை காரணமாக அவற்றின் பாகங்கள் சூடாகும்போது அந்தச் சூட்டைத் தணிப்பதற்காகத்தான் இந்த வியர்வை. பெரும்பாலான இயந்திர மனிதர்கள் உலோகங்களால் ஆனவை. அந்த உலோகங்கள் தாமே சூட்டைப் பரவவிட்டுத் தணித்துக்கொள்பவை. ஆனால், மருத்துவத் துறையிலும் குறிப்பிட்ட சில தொழில் துறைகளிலும் பயன்படுத்தப்படும் இயந்திர மனிதர்களின் கைகள் ரப்பரால் செய்யப்பட்டிருக்கும். அவற்றுக்காகத்தான் இந்த வியர்வை ஏற்பாடு. மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைவதற்குப் பல லட்சம் ஆண்டுகள் தேவைப்பட்டன என்றால் இயந்திர மனிதர்கள் சில பத்தாண்டுகளுக்குள் அசுரத்தனமான பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in