Published : 05 Feb 2020 08:18 AM
Last Updated : 05 Feb 2020 08:18 AM

பின்லாந்து பிள்ளைகள் இப்படித்தான் படிக்கிறார்களா?- தனியார் பள்ளி தாளாளர் பேட்டி

கவிஞரும் எழுத்தாளருமான அவர், கட்டணம் இல்லாத தனியார் தொடக்கப் பள்ளியின் தாளாளர். அவர் நடத்தும் பள்ளியில் படிக்க வரும் மாணவர்கள் பெரும்பாலும் சமூக, பொருளாதார அளவில் பின்தங்கியவர்கள். இன்றைக்குப் பள்ளிக்கூடங்களில் என்னவெல்லாம் பிரச்சினை இருக்கின்றன? அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்களது பள்ளியில் மாணவர்களின் கற்றல் குறைபாட்டுக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

எங்களைப் போன்ற பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் நிறையவே இருக்கிறார்கள். தொடர்ந்து வெவ்வேறு பள்ளிகளில் அவர்கள் மாறி மாறிப் படிப்பதும் ஒரு காரணம். பெற்றோர்கள் வேலை தேடி வேறு வேறு ஊர்களுக்கு மாறும்போது, குழந்தைகளும் அவர்கள் கூடவே இடம்பெயர்கிறார்கள். விவசாயம் பொய்த்துவிட்டது. கூலி விவசாயிகள் பலரும் கட்டிட வேலைகளுக்காக இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்துவதில் ஆசிரியர்கள் அக்கறைகாட்டுவதில்லை. ஒருவேளை, பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டால், ஆசிரியர்கள் செயல்பாடு மேம்படலாம் என்று கூறப்படுவதைப் பற்றி...

ஆசிரியர்களை இன்னும் அதிகமாக வேலை வாங்கப் போகிறார்கள் என்பதை ஒரு தர்க்கத்துக்காக ஏற்றுக்கொண்டதாகவே வைத்துக்கொள்வோம். ஆசிரியர்களின் பணிகள் நிறைவாக இல்லை என்றால், அதற்கு ஆசிரியர்களைத்தான் பொறுப்பாக்க வேண்டுமே ஒழிய, அதற்காகக் குழந்தைகளை எப்படிப் பொறுப்பாக்க முடியும்? இப்படியெல்லாம் குழந்தைகளைப் பரிசோதிக்கலாம் என்று நமக்கு கல்வித் துறை தொடர்பான எந்த ஆய்வுகளும் சொல்லவில்லை. என்னைப் போன்ற மாற்றுக் கல்விமுறைகளைப் பின்பற்றுபவர்கள் தேர்வு முறையையே ஆதரிக்கவில்லை. என்றாலும்கூட இந்தியா போன்ற ஒரு நாட்டில் கல்லூரி சேர்க்கைக்காகத் தேர்வு என்கிற நடைமுறையை 10, 12-ம் வகுப்புகளில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். கற்றல் நடக்கவில்லை என்பதை ‘அஸர்’ போன்ற அறிக்கைகள் நமக்குத் தெரிவிக்கவே செய்கின்றன. அதே அறிக்கைகளில், கற்றல் ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. மாணவர்களுக்குக் கற்றல் குறைபாடுகள் இருக்கின்றன, உள்கட்டுமானப் பிரச்சினைகள் இருக்கின்றன, ஓர் ஆசிரியப் பள்ளிகள் இருக்கின்றன. அவர்களுக்கும் வேறு பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இவர்களில் எந்தக் குறைபாட்டையுமே பொதுத் தேர்வு சரிசெய்யப் போவதில்லை. அப்படியென்றால், இந்தக் குறைபாடுகளையெல்லாம் நாம் சரிசெய்யாமலே அதற்கான பழியைக் குழந்தைகளின் மீது போடுகிறோம். இதைத்தான் தவிர்க்க வேண்டும் என்கிறேன்.

ஆசிரியர்கள் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்?

தொடக்கக் கல்வியில் ஐந்து பாடங்கள் இருக்கின்றன. ஐந்து பாடங்களையும் ஒரே ஆசிரியர் நடத்துவது சிரமமானது. கற்பித்தல் என்பதை எல்லோராலும் எளிதாகச் செய்துவிட முடியாது. கற்பித்தல் என்பது கலை என்பதோடு, அது ஒரு அறிவியலும்கூட. கற்பித்தலில் உள்ள குறைகளைச் சரிசெய்யாத அரசு, தனது பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கிறது என்பதே உண்மை. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில்தான் பின்லாந்து நாட்டுக்குச் சென்றுவந்திருக்கிறார். அவருடன் ஒரு பெரிய குழுவே சென்றுவந்தது. திரும்பிவந்ததும் பின்லாந்து மாதிரிதான் இங்கும் பின்பற்றப்படும் என்று அமைச்சர் பேசினார். பின்லாந்தில் 7 வயதில்தான் பள்ளிக்கூடத்திலேயே சேர்க்கிறார்கள். 14 வயது வரைக்கும் அந்தக் குழந்தைகளுக்குத் தேர்வே கிடையாது. ஆனால், அங்கே எப்படி நல்ல கற்றல் சூழல் இருக்கிறது? அரசும் அமைச்சரும் அதிகாரிகளும் இதை யோசிக்க வேண்டும். ஒரு நல்ல முன்மாதிரியை அவர்கள் உருவாக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x