

பிராட்வே பஸ் நிலையம்
காமராஜர், பக்தவத்சலம், ராஜாஜி, அண்ணாதுரை, கருணாநிதி… இப்படி வரலாற்று நாயகர்கள் எவ்வளவோ பேர் சென்னைக்கு வந்திறங்கியது இந்த இடம்தான் - பிராட்வே பஸ் நிலையம். ஒருகாலத்தில் சென்னை என்றால், எல்லோருக்கும் இதுதான் ஞாபகத்துக்கு வரும். கோயம்பேடு பஸ் நிலையம் வந்த பிறகு, இது புறநகர் பஸ் நிலையமாக மாற்றப்பட்டது.
தமிழகத்தில் மிகவும் மோசமாகவும் அலட்சியமாகவும் பராமரிக்கப்படும் அல்லது புறக்கணிக்கப்படும் பஸ் நிலையங்களில் ஒன்றாகிவிட்டது இது. 1.5 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இதில் கடைகள், குடிசைகள் ஆக்கிரமிப்புகள் அதிகம். பஸ் நிலைய மேற்கூரைகள் ஓட்டை - உடைசலாக இருப்பதால், மழைக்கு ஒதுங்க முடிவதில்லை. ஆங்காங்கே குப்பைக் கூளங்கள், மூத்திரவாடை, இரவு பயன்படுத்தி வீசியெறிந்த கருத்தடைச் சாதனங்கள், பான்பராக் போன்ற எச்சில் துப்பல்கள், வாந்திகள், மனிதக் கழிவுகள் என்று துர்வாடை தூக்கியடிக்கிறது. இரவில் விளக்கு வெளிச்சம் போதாது.
இப்போதும் மூன்று பிளாடஃபாரங்களில் 75 பஸ்கள் ஒரே நேரத்தில் நிற்க முடியும். அன்றாடம் 4,500 நடை நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. குண்டும் குழியுமாக உள்ள இதை அன்றாடம் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். பஸ் நிலையத்தை ஆக்கிரமித்திருப்பவர்கள் பொது வெளியிலேயே மலம் - சிறுநீர் கழிப்பதும், குளிப்பதும், தூங்குவதும், பாலியல் சேட்டைகள் செய்வதும் காணச் சகிக்கவில்லை. அமைச்சர் பெருமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சமூகத்தின் மேல்தட்டு மக்கள் வரவே அவசியம் இல்லாத இடம் என்பதால், யாராலும் சீந்தப்படாதது ஆயிற்றோ?