Published : 03 Feb 2020 09:07 am

Updated : 03 Feb 2020 09:07 am

 

Published : 03 Feb 2020 09:07 AM
Last Updated : 03 Feb 2020 09:07 AM

அண்ணா ஆட்சியின் சாதனைகள்

achievements-of-anna

ஒரே ஆண்டில் 505 கிளைகள்

சாமானியர்களை அரசியல்மயப்படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் கிளைகளை உருவாக்கினார் அண்ணா. திமுக உறுப்பினர் கட்டணம் 50 காசுகள். குறைந்தது 25 பேர் கொண்ட அமைப்புகள் கிளைகளாகப் பதிவுசெய்யப்பட்டன. ஓராண்டுக்குள் 2,035 பொதுக்கூட்டங்களில் பேசினார்கள் திமுக தலைவர்கள். ஆளாளுக்குப் பத்திரிகைகளை உருவாக்கி நடத்தினார்கள். மாணவர்கள் தம் பங்குக்கு ஓய்வு நேரங்களில் பூங்காக்களிலும் தெருமுனைகளிலும் இயக்கப் பத்திரிகைகளை வாசித்துக் காட்டினார்கள். தமிழருக்கு என்று தனி நாடு என்ற கனவு எல்லோர் மனதிலும். விளைவாக, ஒரே ஆண்டில் 35 ஆயிரம் உறுப்பினர்கள், 505 கிளைகளைக் கொண்ட இயக்கமாக உருவெடுத்தது திமுக. கிட்டத்தட்ட விடுதலை இயக்கமாகத்தான் அப்போது திமுக பார்க்கப்பட்டது. திராவிட இயக்கத்தில் சேர்வது தீவிரவாத இயக்கத்தில் இணைவதுபோலக் கருதப்பட்ட காலத்திலும் இவ்வளவு பேர் ஆர்வமாகச் சேர்ந்தது வியப்போடு பார்க்கப்பட்டது.


அண்ணா ஆட்சியின் சாதனைகள்

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது. கட்சி தொடங்கப்பட்டது முதல் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் திமுக வலியுறுத்திவந்ததோ, அவற்றையெல்லாம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்ற முயன்றது அண்ணாவின் கட்சி. ‘ஆகாஷ்வாணி’ என்ற வார்த்தைக்குப் பதிலாக வானொலி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. படி அரிசித் திட்டம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாய்மொழி வாக்குறுதிதான் என்றாலும், 15.5.1967-ல் படி அரிசித் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார் அண்ணா (பின் வந்த அவரது தம்பி – தங்கையர் விலையில்லா அரிசியாக அதை விரிவுபடுத்தினர்). 27.6.1967-ல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது அண்ணாவின் அரசு. அடுத்த மாதமே சுயமரியாதைத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை அறவே ஒழிக்க ஏதுவாக, இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா.

மகளிரணி உதயம்

சேவல் பண்ணைபோலக் காட்சி தந்தது ஆரம்ப கால திமுக. பெண்களை உள்ளிழுக்க மகளிர் மன்றத்தை யோசித்தார் அண்ணா. பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்துக்கும் ஒருசேரக் குறியீடுபோல சத்தியவாணி முத்துதான் மன்றத் தலைவர் என்றும் முடிவெடுத்துவிட்டார். சரி, யாரை முதலில் உள்ளே கொண்டுவருவது? திமுக தலைவர்களின் மனைவியரே முதல்கட்ட உறுப்பினர்கள் என்றானது. 21.8.1956-ல் என்.வி.நடராசன் வீட்டில் நடந்த அமைப்புக் கூட்டத்தில், மன்றத் தலைவராக சத்தியவாணி முத்து, செயலாளர்களாக ராணி அண்ணாதுரை, அருண்மொழி செல்வம், வெற்றிச்செல்வி அன்பழகன், புவனேசுவரி நடராசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தயாளு கருணாநிதி, நாகரத்தினம் கோவிந்தசாமி, சுலோச்சனா சிற்றரசு, பரமேசுவரி ஆசைத்தம்பி, என்.எஸ்.கே.யின் மனைவி டி.ஏ.மதுரம் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களானார்கள். தலைவர்களே வீட்டோடு இயக்கத்தில் இறங்கியதன் விளைவு, தொண்டர்களும் அலையலையாகத் தங்கள் மனைவியை மன்றத்தில் உறுப்பினர்களாக்கினர். திமுக கூட்டங்கள் இப்போது குடும்பத்தோடு பங்கேற்கும் கூட்டமானது. பெண்கள் அரசியல்மயமானபோது கழகம் குடும்பமானது.


Achievements of annaஅண்ணா ஆட்சியின் சாதனைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author