Last Updated : 03 Feb, 2020 08:58 AM

 

Published : 03 Feb 2020 08:58 AM
Last Updated : 03 Feb 2020 08:58 AM

பிரெக்ஸிட்: இனி அடுத்தது என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜனவரி 31 இரவு 11 மணிக்கு அதிகாரபூர்வமாகவே வெளியேறிவிட்டது பிரிட்டன். உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைத் தன்னுடைய காலனியாக ஒரு காலத்தில் வைத்திருந்த ‘சூரியன் மறையாத பேரரசு', தோளில் ஏறிக்கொண்ட கிழவனிடமிருந்து தப்பித்த சிந்துபாத்தைப் போல இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடியது. பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரெக்ஸிட் கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜ் ஆகியோர் கொண்டாடியவர்களில் முக்கியமானவர்கள். பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் வாக்காளர்களிலும் பெரும்பாலானவர்கள் பிரெக்ஸிட்டைப் பொறுத்தவரையில் கருத்தளவில் எதிரெதிர் நிலையிலேயே இருக்கின்றனர்.

‘நட்புணர்வுடன் கூடிய ஒத்துழைப்பில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது’ என்று போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டிருக்கிறார். ‘புதிய கொள்கைகளை வகுக்கவும், வெளிநாட்டவர் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், வரியற்ற சுதந்திரமான துறைமுகங்களை உருவாக்கவும், நம்முடைய மீனளத் தொழிலைக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கவும், தடையற்ற வர்த்தக உடன்பாடுகளை விருப்பம்போலச் செய்துகொள்ளவும் நமக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது' என்று பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் குதூகலிக்கின்றனர்.

ஆனால், பிரிட்டிஷ்வாசிகள் எல்லோரும் இப்படி மகிழ்ந்துவிடவில்லை. ஸ்காட்லாந்தின் ‘முதலாவது அமைச்சர்’ என்று அழைக்கப்படும் நிகோலா ஸ்டர்ஜன் பிரெக்ஸிட்டைக் கொண்டாடவில்லை. ‘மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டன் வந்துவிடும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒன்றியத்திலிருந்து விலகியிருந்தாலும் பிரிட்டனுடன் சுமுக உறவையே விரும்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் - தலைவர் உருசுலா வொன்டர் லேயன் தெரிவிக்கிறார். பிரிட்டனுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஜோவோ வேலா டி அல்மெய்டாவும் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.

மீண்டும் வருமா தாட்சரின் காலம்?

இந்த விலகல்கூட உடனடியாக அமலுக்கு வந்துவிடாது. மேலும் சில மாதங்களுக்கு இப்போதுள்ள ஏற்பாடுகள் தொடரும். வரியற்ற சுதந்திரமான ஒரே சந்தை, சரக்குகள், சேவைகள், மூலதனம், தொழிலாளர்கள் தடையில்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்குள் சென்றுவரும் உரிமை, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்ட நிலை ஆகியவை பிரெக்ஸிட்டுக்கு முந்தைய நிலையாகும். 2022-ல்தான் 'பிரெக்ஸிட்' முழுமை பெறும் என்று தெரிகிறது. பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் உடனடியாக எல்லா வகையிலும் வெளியேறிவிடத் துடிக்கிறார்கள். பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே குழு அல்லது பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களிலும் எதிரெதிர் கொள்கைகளும் லட்சியங்களும் நோக்கங்களும் உள்ளவர்கள் உள்ளனர். அரசியல்ரீதியாக ஆதரிப்போர், இனரீதியாக எதிர்ப்போர், வியாபார நோக்கில் வரவேற்போர், தேசிய அடிப்படையில் பிரிட்டன் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று நினைப்போர் என்று இவர்கள் பலதரப்பட்டவர்கள்.

பிரெக்ஸிட்டிலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டாலே பிரிட்டனுக்குள் சந்தைகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்ந்துவிடும், வரிவிகிதங்கள் குறைந்துவிடும், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரித்து விற்றுக்கொள்ள வழியேற்பட்டுவிடும் என்றெல்லாம் சிலர் பேசுகின்றனர். பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிட்டனுக்குள் வேலைதேடி வருவோரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் தேசியவாதிகள் விரும்புகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டு, நமக்குக் கட்டளை இடுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். 1945 முதல் 1979 வரையில் நிலவிய உயர் வருமான, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மீண்டும் ஏற்பட வேண்டும் என்று உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் விரும்புகின்றனர். மார்கரெட் தாட்சர் காலத்தில் அப்படி இருந்தது. அதை ஐரோப்பிய நாடுகள் கேட்டபோது, 'என் நாட்டில் தொழில் துறை மீதான கட்டுப்பாடுகளை நீக்கினேன், வரிகளைக் குறைத்தேன், அதனால் பிரிட்டனில் வளம் சேர்கிறது, அதைக் கேட்க நீங்கள் யார்?’ என்று தாட்சர் அவர்களைப் பார்த்து எதிர்க்கேள்வி எழுப்பினார். தனியார் துறைக்கு பிரிட்டிஷ் அரசு அப்போது தந்த நிதி மானியத்தால் முழு வேலைவாய்ப்பு நிலை ஏற்பட்டது.

உண்மை நிலை என்ன?

இப்படி பிரிட்டிஷ் தேசியர்கள் அந்த நாட்களை நினைத்து உருகி உருகிப் பேசினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையால்தான் பிரிட்டனால் தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதே உண்மை. பிரிட்டன் ஏற்றுமதி செய்யும் 45% சரக்குகளையும் சேவைகளையும் ஐரோப்பிய நாடுகள்தான் வாங்கிக்கொள்கின்றன. எனவே, அந்தச் சந்தை இல்லாவிட்டால் பிரிட்டனின் பாடு திண்டாட்டம்தான். 35,000 கோடி டாலர்கள் மதிப்புக்கு உணவுப் பண்டங்கள், மருந்து - மாத்திரைகள், வாகனங்கள், நிதிச் சேவைகள் ஆகியவற்றை பிரிட்டன் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்கிறது. ஒன்றியத்திலிருந்து முற்றாக விலகிய பிறகு, பிரிட்டனுக்கு அங்கே செல்வாக்கு இருக்காது. விருப்பப்படி பொருட்களை விற்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பிரிட்டன், இனி வெளியில் நின்றுகொண்டு அவர்களிடம் சலுகைக்காக மன்றாட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தரக் கட்டுப்பாடுகளை மீற முடியாது. ஏற்றுமதி மதிப்புக்கும், அளவுக்கும் கட்டுப்பாடுகள் வரக்கூடும். எனவே, அதன் சந்தை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு விற்று ஐரோப்பியச் சந்தையில் இழப்பதை ஈடுகட்டிவிட முடியும் என்று பிரிட்டன் நினைக்கிறது. இந்த நாடுகள் முன்பிருந்த மாதிரி காலனி நிலையில் இப்போது இல்லை. 'பிரிட்டனுடன் மனித ஆற்றல் துறையில் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டால், ஆஸ்திரேலிய சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களையும் தேர்ந்த செவிலியர்களையும் பிரிட்டன் அழைத்துச் சென்றுவிடும், அதன் தேசிய சுகாதாரத் துறைக்கு எப்போதும் ஆள் பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கிறது' என்கிற அச்சம் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது. கனடாவுக்கு அது தயாரிக்கும் பொருட்களை விற்கும் சந்தையாக அமெரிக்கா அதன் வீட்டு வாசலிலேயே அமைந்திருக்கிறது. பிரிட்டன் வரை வந்து விற்க அது மெனக்கெட வேண்டியதில்லை. இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள விரும்பினால், தன் நாட்டிலிருந்து தொழிலாளர்களையும் மாணவர்களையும் வரம்பின்றி பிரிட்டன் ஏற்றுக்கொள்வதாக இருந்தால்தான் சலுகை தர முடியும் என்று இந்தியா வலியுறுத்தக்கூடும்.

காலம் பதில் சொல்லும்

ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து நாடுகளின் மொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பு 3.3 லட்சம் கோடி டாலர்கள் மட்டுமே. இது பிரிட்டனின் மொத்த உற்பத்தி மதிப்பைவிட 55,000 கோடி டாலர்கள்தான் அதிகம். இந்தச் சந்தைக்காக ஐரோப்பாவை இழப்பது பிரிட்டனுக்குத்தான் தீங்காக அமையும். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு பிரிட்டனுக்குச் சமமானதுதான். எனவே, இந்திய வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரிய லாபம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதே வேளையில், ஐரோப்பாவின் மொத்த உற்பத்தி மதிப்பு 18.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். எனவே, பக்கத்து வீட்டுக்காரரைப் பிடிக்கவில்லை என்பதற்காக பக்கத்துத் தெருக்காரர்களின் சகவாசத்தை நாடுகிறது பிரிட்டன். அவை பிரிட்டனை வரவேற்கும் மனநிலையில் உள்ளனவா என்பதும் சந்தேகம்தான். அதைவிட முக்கியம், இந்த நாடுகள் தனக்கு ஒரு காலத்தில் காலனியாக இருந்தவை என்பதாலும் காமன்வெல்த் அமைப்பில் தொடர்வதாலும் சொன்னால் கேட்டுக்கொள்ளும் என்ற ஆதிக்க மனோபாவம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இன்னமும் காணப்படுகிறது.

இந்த நாடுகளின் ஜனநாயக முதிர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் ஆதிக்கங்களைத் தொடர்ந்து ஏற்கும் மனநிலையை அவற்றுக்குத் தராது. பிரிட்டனுக்கு சமமாகத்தான் அவை அமர்ந்து பேரங்களில் ஈடுபடும். எல்லா நாடுகளிலுமே வேலையில்லாத் திண்டாட்டமும் உற்பத்திக்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கின்றன. எல்லா நாடுகளுமே ஏற்றுமதிக்கு சந்தைகளைத் தேடுகின்றன. பிரிட்டன் கையிலிருந்த வெண்ணெயை வீசிவிட்டு, வேறெங்கோ நெய்யைத் தேடுகிறதோ என்றும் உலக அரசியல் பார்வையாளர்கள் சந்தேகப்படுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு, இயந்திரமயமாக்கல் என்று தொழில்துறை உற்பத்தி முறைகள் மாறிவிட்ட நிலையில், எல்லா நாடுகளும் பரஸ்பர சந்தைகளாக இருந்தால்தான் சாத்தியம். பிரெக்ஸிட் பிரிட்டனுக்கு வரமா, சாபமா? காலம் பதில் சொல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x