Published : 24 Jan 2020 09:49 AM
Last Updated : 24 Jan 2020 09:49 AM

வெற்றிமாறன் வாக்கு

சூப்பர் ஹிட் கீழடி

மூடுண்ட துறையாகவே இருந்துவந்த தொல்லியல் துறையின் மீது பொதுமக்களின் கவனம் விழுந்தது, சமீபத்திய கீழடி ஆய்வு முடிவுகளுக்குப் பின்னர்தான். கீழடியை நேரடியாகக் கண்டு களிக்க முடியாதவர்களுக்கு ஒரு அரிய அனுபவமாக இருந்தது புத்தகக்காட்சி வளாகத்தில் அமைத்திருந்த கீழடி அரங்கு. மாதிரிகளைக் கண்டவர்களின் கண்களெல்லாம் அதிசயித்து விரிவதைக் காண்பதே அலாதியான அனுபவமாக இருந்தது. அதேபோல, தொல்லியல் துறை வெளியிட்ட ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ புத்தகமும் சூப்பர் டூப்பர் ஹிட்!

2020 திருவிழாவின் புத்தகம்

சோ.தர்மனின் ‘சூல்’ நாவல், 2019-க்கான சாகித்ய அகாடமி விருது பெற்றதைத் தொடர்ந்து, இந்தப் புத்தகத் திருவிழாவில் அதிகம் பேரால் ஆர்வத்தோடு வாங்கப்பட்ட புத்தகமாக அமைந்தது. சமீப ஆண்டுகளாகவே ‘காவல் கோட்டம்’, ‘கொற்கை’, ‘அஞ்ஞாடி’, ‘சஞ்சாரம்’ என சாகித்ய அகாடமி விருது பெறும் நாவல்களெல்லாம் புத்தகக்காட்சி விற்பனையில் உச்சம் தொடும் போக்குக்குத் தொடர் உதாரணமாகியிருக்கிறது ‘சூல்’. இந்த நாவலை வெளியிட்ட ‘அடையாளம் பதிப்பகம்’ சோ.தர்மனுக்கு ரூ.3 லட்சம் ராயல்டி தருவதாக அறிவித்திருப்பது, நாவலின் விற்பனை வீச்சை சொல்லாமல் சொல்வதாகும்.

நேசமணி வாசகர்கள்

புத்தகக்காட்சியின் ‘பளிச் புத்தகம்’ என்ற பெருமையை ‘வானவில்’ பதிப்பகம் வெளியிட்ட ‘நேசமணி தத்துவங்கள்’ தட்டிப் பறித்துச்சென்றது. வடிவேலுவின் வசனங்களை மேலாண்மைத் தத்துவங்களோடு பொருத்தி, சுரேகா எழுதிய இந்தப் புத்தகம், விற்பனையிலும் அசத்தியது.

தூள் கிளப்பிய நீலம்

அதிகமான வாசகர்கள் வந்து சென்ற அரங்குகளில் முக்கியமானது இயக்குநர் ரஞ்சித்தின் ‘நீலம் பதிப்பகம்’. முதல் முறையாகப் பதிப்பித்த 5 நூல்களோடு இந்தப் புத்தகக்காட்சிக்கு வந்திருந்தது ‘நீலம்’. தலித் ஆளுமைகளின் புத்தகங்கள் வெவ்வேறு பதிப்பகங்களில் இதுவரை பத்தோடு ஒன்றாக வந்தது போக, முதல் முறையாக அவர்களுடைய நூல்கள் பிரதானமாகக் கொண்டுவரப்பட்டதும், நல்ல வகையில் காட்சிப்படுத்தப்பட்டதும் பலர் கவனத்தையும் ஈர்த்தது. சாதி ஒழிப்பு தொடர்பான பலருடைய நூல்களும் இந்த அரங்கில் கிடைத்தன. ‘நீலம்’ பதிப்பதித்த நூல்களின் அட்டை வடிவமைப்பு ஈர்ப்பதாக இருந்தது.

வெற்றிமாறன் வாக்கு

வருங்காலத்தில் இயக்குநர் வெற்றிமாறனிடம் நம்முடைய பதிப்பாளர்கள் இப்படிக்கூட ஒரு வேண்டுகோள் விடுக்கலாம். “நீங்க படம்கூட எடுக்க வேண்டாம் வெற்றிமாறன். எங்க புத்தகத்தைப் படமா எடுக்கப்போறன்னு ஒரு வரி சொல்லுங்க, போதும்!” ஆம்! வெற்றிமாறன் சினிமாவாக எடுத்த ‘வெக்கை’ நாவல் மட்டும் அல்லாது, சினிமா எடுக்கப்போவதாகச் சொன்ன ‘வாடிவாசல்’, ‘அஜ்னபி’ நாவல்களும் இந்தப் புத்தகக்காட்சியின் விற்பனையில் சக்கைப்போடு போட்டன.


புத்தகப் பரிமாற்ற அரங்கு

சென்னை புத்தகத் திருவிழாவில் ஒரு சுவாரஸ்யமான அரங்கு ‘லிட்ஸ் மீட்’. இங்கு புத்தக விற்பனை கிடையாது. நீங்கள் வாசித்த புத்தகங்களை இங்கு வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக வேறு புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். ‘டிசிகேப்’ என்ற மென்பொருள் நிறுவனம்தான் இந்த முயற்சியை மேற்கொண்டது. அந்த நிறுவனத்தின் ஊழியர்களே இந்த அரங்கை நிர்வகித்தார்கள். அவர்களில் ஒருவரான ஸ்ரீஜா, “வேலைக்கு சேர்றதுக்கு முன்னாடி எனக்கு வாசிக்கிற பழக்கம் கிடையாது. இந்த நிறுவனம்தான் என்னை வாசிக்க வெச்சது” என்றார். தங்கள் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் புத்தக வாசிப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற டிசிகேப் நிறுவனத்தின் முயற்சி முன்னுதாரணமானது.

அதிகம் விற்ற 10 புத்தகங்கள்

கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்
தொல்லியல் துறை வெளியீடு

சூல் | சோ.தர்மன்
அடையாளம் வெளியீடு

சுளுந்தீ | இரா.முத்துநாகு
ஆதி வெளியீடு

வைக்கம் போராட்டம் | பழ.அதியமான்
காலச்சுவடு வெளியீடு

இச்சா | ஷோபாசக்தி
கருப்புப் பிரதிகள் வெளியீடு

அயோத்திதாசர் | டி.தருமராஜ்
கிழக்கு வெளியீடு

மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (11 புதிய தொகுப்புகள்)
உயிர்மை வெளியீடு

தீம்புனல் | ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர் வெளியீடு

பீஃப் கவிதைகள் | பச்சோந்தி
நீலம் வெளியீடு

குதிப்பி | மா.காமுத்துரை
டிஸ்கவரி வெளியீடு

கொடியைப் பறக்கவிட்ட நான்கு தாதாக்கள்

தமிழ் இலக்கியத்தின் நான்கு தாதாக்களான ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் நூல்கள் வழக்கம்போல விற்பனையில் தனிக் கொடி நாட்டின. புத்தகக்காட்சி சமயத்தில் நூல்கள் வெளியீட்டு விழாக்களுக்கு வந்து சென்றதோடு ஜெ முடித்துக்கொள்ள... அன்றாடம் தங்களது பதிப்பகங்களில் வாசகர்களோடு கலந்துரையாடியபடி இருந்தனர் சாரு, எஸ்ரா, மனுஷ் மூவரும். இதற்கு வெளியே முகநூலில் மாமல்லனுக்கும் மனுஷுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த சரமாரி வார்த்தைத் தாக்குதல்கள் நாகரிக எல்லைகளைக் கடந்தன.

ஆயிரம் தாண்டிய பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர்

2017-ல் பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து ‘பெரியார்: இன்றும் என்றும்’ என்ற தலைப்பில் புத்தகம் கொண்டுவந்த ‘விடியல்’ பதிப்பகம், அடுத்தடுத்த வருடங்களில் அம்பேத்கர், மார்க்ஸுக்கு ‘இன்றும் என்றும்’ வரிசை நூல்களைக் கொண்டுவந்தது. இந்த ஆண்டு மூன்று தொகுப்பு நூல்களையும் சேர்த்து ரூ.1,000 விலையில் விற்பனைக்கு வைத்திருந்ததற்கும் வழக்கம்போலவே நல்ல வரவேற்பு. வந்த வேகத்தில் இந்தத் தொகுப்பு நூல்கள் 1,000 பிரதிகள் விற்றுத்தீர்ந்தன. அடுத்தடுத்து அச்சடித்துக் கொண்டுவந்தார்கள்.

டிரெண்ட் ஆன அண்ணா

நம்முடைய ‘இந்து தமிழ்’ கொண்டுவந்த ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் வருகை ஏற்படுத்திய தாக்கத்தைப் புத்தகக்காட்சியில் பட்டவர்த்தனமாகப் பார்க்க முடிந்தது. அண்ணாவின் மொத்த எழுத்துகளையும் 110 நூல்களில் தொகுத்து ரூ.55,000 விலையில் ‘தமிழ் மண்’ பதிப்பகத்தால் கொண்டுவரப்பட்ட ‘அண்ணாவின் அறிவுக் கொடை’ தொகுப்புக்கு என்றே தனி அரங்கு அமைத்திருந்தார்கள். அண்ணாவின் பல நூல்களைப் பல்வேறு பதிப்பகங்கள் மறுபதிப்பில் கொண்டுவந்திருந்தன. நம்முடைய ‘இந்து தமிழ்’ அரங்கிலும் விற்பனையில் உச்சம் அண்ணாதான். ரஜினியின் ‘துக்ளக்’ நிகழ்ச்சிக்குப் பேச்சுக்குப் பின் பெரியார் நூல்கள் விற்பனையிலும் நல்ல வேகம் இருந்ததாகக் குறிப்பிட்டார்கள் பல விற்பனையாளர்கள்.

ஒரு ஆஹா!

அதிகரித்துக்கொண்டேயிருந்த நெருக்கடியைக் குறைக்கும் வகையில் அரங்குகள் எண்ணிக்கையைத் துணிச்சலாகக் குறைத்தது ‘பபாசி’. இதைச் சரிக்கட்டும் வகையில், அரங்குகளுக்கான கட்டணம் கூட்டப்பட்டிருந்தபோதும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் ஒவ்வொரு அரங்குக்கும் வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாகவும் விற்பனையிலும் அது பிரதிபலித்ததாகவும் பல கடைக்காரர்கள் சொன்னார்கள். வாசகர்கள் தரப்பில் ‘அலைச்சல் அங்கலாய்ப்பு’ இம்முறை குறைந்திருந்தது. சென்னை புத்தகத் திருவிழாவைத் தொடக்கிவைக்க வந்திருந்த முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பில், “இனி ஆண்டுதோறும் புத்தகக்காட்சிக்கு ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும்” என்ற அறிவிப்பைப் பெற்றதானது ‘பபாசி’ நிர்வாகிகளுக்குக் கிடைத்த பெரும் வெற்றி. அடுத்த முறை பெரிய கனவுகளோடு ‘பபாசி’ களம் இறங்க, முதல்வரின் இந்த அறிவிப்பு உத்வேகமூட்டி இருக்கிறது.

ஒரு களங்கம்!

ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான புத்தகங்களை அரங்கில் வைத்திருந்தனர் என்று, அரசு கொடுத்த மறைமுக அழுத்தத்தின் விளைவாக, ‘மக்கள் செய்தி மையம்’ அரங்கை காலிசெய்யுமாறு சொன்னதோடு, ‘அரசுக்கு எதிராகப் புத்தகங்களை விற்பது விதிமீறல் ஆகும்’ என்று ‘பபாசி’, சம்பந்தப்பட்ட அரங்கின் நிர்வாகியான அன்பழகனுக்குக் கடிதம் கொடுத்து வெளியேற்றியதும், அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டதும் கடுமையான எதிர்ப்புகளை உண்டாக்கியது. “அரசுக்கு எதிரான புத்தகம் என்று கருதினால், அரசு அதற்குத் தடை விதிக்கட்டும்; ‘பபாசி’க்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” என்ற கேள்வியோடு பலகட்டப் போராட்டங்கள் நடந்தன. தொடர்ந்து, ‘அரங்குகளில் புத்தகம் வெளியிடக் கூடாது’, ‘எழுத்தாளர்கள் அரங்குகளில் அமர்ந்து கையெழுத்திடக் கூடாது’ என்றெல்லாம் அடுத்தடுத்து ‘பபாசி’ வெளியிட்ட அறிவிப்புகள் மேலும் எழுத்தாளர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கின. பல எழுத்தாளர்கள் பேரரங்குப் பேச்சையும், ‘எழுத்தாளர் முற்றம்’ நிகழ்வையும் புறக்கணித்தார்கள். மக்களவை உறுப்பினரும் சாகித்ய விருது வென்றவருமான சு.வெங்கடேசன் ‘பபாசி’க்குக் கண்டனம் தெரிவித்து, அதன் மேடையிலேயே பேசியதோடு, தன்னுடைய உரையையும் புறக்கணித்துச் சென்ற காணொலி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது.

‘என்பிடி’ எங்கேப்பா?

ஒரு வருடம் வருவதும், மறு வருடம் காணாமல்போவதும் ‘என்பிடி’க்கு வாடிக்கையாகிவிட்டது. ‘என்பிடி’ வெளியிடும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களுக்கும், குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கும் எப்போதுமே ஒரு மவுசு உண்டு; புதிய வெளியீடுகளைக் கொண்டுவராதபோதிலும். மத்திய அரசின் நிறுவனம் இப்படி முக்கியமான கலாச்சாரத் திருவிழாவில் கலந்துகொள்ளாமல்போவதற்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஏராளமான வாசகர்கள் சொல்லிச்சென்றனர்.

நீ......ண்ட தலைப்பு

தன் கவிதைத் தொகுப்புகளுக்கு நீண்ட தலைப்பு வைப்பதை ஒரு பாணியாகவே உருவாக்கிவருகிறார் கவிஞர் பெருந்தேவி. புத்தகக்காட்சிக்கு வெளியான அவரது புதிய கவிதைத் தொகுப்பின் தலைப்பு: ‘இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம்’. கவிதைத் தொகுப்பை வெளியிடும்போது திக்கித்திணறி, தலைப்பைச் சொல்லும்போது சொதப்பிய சக படைப்பாளிகளிடம், “தலைப்பைத் தடுமாறாமல் சொல்பவர்களைத்தான் இனி நான் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளப்போகிறேன்” என்று சொல்லியிருக்கிறாராம். நண்பர்கள் ஜாக்கிரதை!

புதிய போக்கு

இளையோர் புத்தகம் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை உடைத்தெறிந்தது இந்தப் புத்தகக்காட்சியின் முக்கியமான செய்தி. அலையலையாகப் புதிய வாசகர்கள் வந்தார்கள். “15-25 வயதுக்குட்பட்ட நிறைய இளைஞர்களைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக இளம்பெண்கள் அதிகம். வரலாறு, நாவல்கள் இரண்டையும் அவர்கள் ஆர்வத்தோடு கேட்டு வாங்கினார்கள்” என்றார் ‘தேசாந்திரி’ பதிப்பாளர் ஹரி பிரசாத்.

லட்சமாவது பிரதி!

ஒரு லட்சம் பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு ‘கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கை’ புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருக்கும் ‘பாரதி புத்தகாலயம்’, புத்தகத்தின் லட்சமாவது பிரதிக்கு வெளியீடு நடத்தி வியப்பில் ஆழ்த்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இதை வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x