Published : 23 Jan 2020 08:14 am

Updated : 23 Jan 2020 08:14 am

 

Published : 23 Jan 2020 08:14 AM
Last Updated : 23 Jan 2020 08:14 AM

சுலைமானி படுகொலையின் வழி ஈரான் ஜனநாயகத்துக்கு ட்ரம்ப் இழைத்த கேடு என்ன?

iran-vs-america

ஸ்டான்லி ஜானி

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக முக்கியமான ராணுவத் தலைவர் காசிம் சுலைமானியின் மரணம், அந்நாட்டு அரசுக்கு மிகப் பெரிய இழப்பு. மேற்காசியா முழுவதற்கும் ஈரானின் அதிகாரம் பரவுவதற்கான வழியைக் கண்டுபிடித்ததல்லாமல் அதை பரவச் செய்தவர் அவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிப் படையின் மூலம் உளவு வேலையையும் புறப்பாதுகாப்பையும் அவர் நிர்வகித்துவந்தார். பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே ஜனவரி 3-ல் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலையானது தனது முன்னணி ராணுவத் தளபதியைக்கூட ஈரானிய அரசால் பாதுகாக்க முடியவில்லை என்பதை வெளிப்படுத்தியது. அது மட்டுமல்ல, வெளித்தாக்குதலைத் தடுக்கும் ஆற்றல் ஈரானுக்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய பின்னடைவுகள் ஈரானிய அரசை வலுவிழக்கச் செய்துவிடுமா என்பது இதைவிடப் பெரிய கேள்வி. ஆனால், ஈரானில் நடப்பவையோ இந்தக் கேள்விக்கு எதிர்மாறானவையாகவே இருந்தன.

சில வாரங்களுக்கு முன்னர் வரை ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை அடக்குவதிலேயே ஈரானிய அரசு கவனம் செலுத்திவந்தது. அமெரிக்கா அறிவித்த பொருளாதாரத் தடை நடவடிக்கையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக முடக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பர் முதல் வாரத்திலிருந்து அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். அவற்றையெல்லாம் ஈரானிய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவந்தது. ராணுவத்தின் எதிர் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதனால், பெரும் நெருக்கடி யில் அரசு சிக்கியது. சில வாரங்களுக்குப் பிறகு தெஹ்ரான், மஷாத், ஆவாஸ், குவாம், கெர்மான் ஆகிய நகரங்களில் மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இந்த நிலையில்தான் தனது இறப்பின் மூலம் ஈரானின் பல்வேறு அரசியல் குழுக்களை சுலைமானி இணைத்துவிட்டார். இப்படி ஆகும் என்று அவரேகூடத் தனது வாழ்நாளில் கற்பனை செய்திருக்க மாட்டார்.

சுலைமானி பயங்கரவாதியா?

போரில் இறந்த ஒரு தளபதிக்காக இதுவரை இருந்திராத வகையில் நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு ஆதரவு தெரிவித்ததற்கான வேர், ஈரானின் வரலாற்றிலும் மத நம்பிக்கையிலும் இருக்கிறது. இந்தத் தளபதியைத்தான் ‘பயங்கரவாதி’ என்று சாடியிருந்தார் அமெரிக்க அதிபர். நவீன தேசிய அரசாக உருவாவதற்கும் முன்னதாக, பாரசீக நாகரிகம் காரணமாக ஈரான் என்பது தனி அரசியல் அடையாளமாகவே தொடர்ந்துவருகிறது. சஃபாவித் வம்சம் ஷியா பிரிவு இஸ்லாத்தை அதிகாரபூர்வ மதமாகத் தழுவியது முதல் ஈரான் (பாரசீகம்), ஷியா பெரும்பான்மை நாடாகவே இருக்கிறது. 1979-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சி, மன்னர் ரேசா பெஹ்லவியின் அரசைத் தூக்கி எறிந்தது. அதன் பிறகு, புரட்சி அரசைத் தாங்கி நின்றது ‘ஷியா’ என்ற மத உணர்வும், ஈரானிய தேசியவாத அபிமானமும்தான்.

ஈரானைப் பொறுத்தவரை மதத்துக்காகவும் தேசத்துக்காகவும் தியாகம் செய்வது போற்றுதலுக்கு உரியது. இமாம் அலி தொடங்கி மத நம்பிக்கைக்காக உயிரை அர்ப்பணித்த அனைவரையும் தியாகிகளாகவே வணங்குகிறது ஈரான். இஸ்லாமியப் புரட்சியைப் பின்பற்றியவரான சுலைமானியைத் தனது உத்தரவால் தியாகியாக்கிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தெரிந்தோ தெரியாமலோ ‘நாம் அனைவருமே பாதிக்கப் பட்டவர்கள்’ என்ற உணர்வை அந்நாட்டு ஷியாக்களிடமும் தேசியவாதிகளிடமும் ஏற்படுத்தி ஒன்றுபடுத்திவிட்டார்.

தியாக அரசியல்

கர்பலாவில் நடந்த சண்டையானது, ஷியாக்களின் மத நம்பிக்கையிலும் அரசியல் வரலாற்றிலும் முக்கிய இடம் வகிக்கிறது. தன் உயிருக்கே ஆபத்து என்ற நிலையிலும் தன்னுடைய கொள்கையைக் கைவிட விரும்பாத இமாமைத் தியாகத்தின் உயர்ந்த அடையாளமாகப் பார்க்கின்றனர். ஈரானில் மாமன்னர் ரேசா பெஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக இஸ்லாமியப் புரட்சியைத் தொடங்கிய அயதுல்லா கொமேனி, தங்களுடைய முன்னோடி இமாம் தியாகம், தீரம் ஆகிய இரண்டுக்கும் உறைவிடமாக இருந்ததை முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். கொடுங்கோன்மை அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுமாறு குரல் கொடுத்தார். அந்த வேண்டுகோளை மக்கள் ஏற்றனர். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டவர்களும் ஷாவுக்கு எதிராக ஒன்றுதிரண்டனர். அதனால், நாட்டை விட்டே அவர் ஓட நேர்ந்தது. மாமன்னரின் ஆட்சி குலைந்தவுடன் இஸ்லாமியப் புரட்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றி 1979 முதல் ஈரானை இஸ்லாமியக் குடியரசாக மாற்றிவிட்டனர்.

புரட்சிக்குப் பிறகு முல்லாக்களால் ஈரானைத் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள முடியாது; ஏனென்றால், ஈரான் மதச்சார்பற்றதாகவும் நவீனமடைந்ததாகவும் இருக்கிறது என்றே அரசியல் விமர்சகர்களும் வெளிநாடுகளின் அரசியல் தலைவர்களும் அப்போது கருதினர். புரட்சி நடந்த ஓராண்டுக்குள் இராக் அதிபர் சதாம் ஹுசைன் ஈரான் மீது படையெடுத்தார். அயதுல்லா கொமேனியை வீழ்த்திவிட முடியும் என்று அவர் நம்பினார். மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்து அதிகாரம் கைமாறிய அந்நாளில், நாட்டில் ஸ்திரநிலையை ஏற்படுத்த முல்லாக்கள் மிகவும் தடுமாறினர். இடதுசாரிகள், தொழிற்சங்கவாதிகள், இஸ்லாமி யர்கள், சுதந்திரச் சிந்தனையாளர்கள் என்று அனைவரும்தான் மன்னருக்கு எதிரான புரட்சியில் இணைந்து போராடினர். ஆனால், முல்லாக்கள் தங்களுடைய ஆட்சியில் இவர் களிடையே பிளவை ஏற்படுத்திவிட்டனர்.

சதாம் ஹுசைன் தாக்குதல் தொடுத்தவுடன் மக்கள் அனைவரையும் தனக்குப் பின்னால் அணிவகுத்துவரச் செய்ய கொமேனியால் முடிந்தது. இடதுசாரிகளுக்கும் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கும் எதிராகக் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை அவிழ்த்துவிட்டது கொமேனி அரசு. அப்போது போர் நடந்துகொண்டிருந்ததால் மக்கள் யாரும் அரசுக்கு எதிராக இதற்காகக் கிளர்ந்து எழவில்லை.

மேற்காசியப் பகுதியில் இருந்த சன்னி மன்னர்களின் அரசுகளும் அமெரிக்காவும் அளித்த ஆதரவில் ஈரான் மீது சதாம் ஹுசைன் படையெடுத்ததால் ஈரானிய அரசை மக்கள் ஆதரித்ததால் முல்லாக்களால் தங்களுடைய அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடிந்தது. இராக்கியப் படைகளுக்கு எதிராக ‘தற்கொலைப்படைத் தாக்குதல்கள்’ பலவற்றை ஈரானியர்கள் மேற்கொண்டனர். மதப்பற்றும் தேசாபிமானமும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தன. மதத்துக்காக, நாட்டுக்காக உயிரைத் துறந்து தியாகி ஆவதைக் கடவுள் அங்கீகரித்த வழியாகவே அவர்கள் பார்த்தனர்.

தவறான கணிப்பு

ஈரான், இராக்கில் இப்போது நடப்பதெல்லாம் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றின் எதிரொலிகளே. ‘ஜுல்ஃபகர்’ என்ற பட்டத்தை சுலைமானிக்கு 2019 மார்ச் மாதம் வழங்கிய அயதுல்லா அலி கமேனி கூறியது கவனிக்கத்தக்கது. “சுலைமானிக்குப் பேரின்ப வாழ்க்கையை வழங்கி அல்லா ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன், அவரும் தன்னுடைய வாழ்க்கையை அல்லாவுக்கு அர்ப்பணிப்பார் - வெகு விரைவில் அல்ல, நீண்ட நாட்கள் கழித்து” என்று வாழ்த்தியிருந்தார். அவர் வாழ்த்திய ஓராண்டுக்குள் சுலைமானி தியாகி ஆகிவிட்டார். அப்படி ஆக்கியதன் மூலம் ஷியாக்களின் அரசியல் நோக்கங்களைப் பூர்த்திசெய்துவிட்டார் ட்ரம்ப். இந்த இடத்தில்தான் தவறிழைத்துவிட்டார் ட்ரம்ப்.

சுலைமானியைக் கொன்றதன் மூலம் ஈரானியர்களின் மத, தேசிய உணர்வுகளைக் கிளறிவிட்டு, அயதுல்லா கமேனி அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையே ஏற்படுத்தியிருக்கிறார் ட்ரம்ப். தனது செயலால் தனக்கே தீமை செய்துகொண்டுவிட்டதை ட்ரம்ப் உணர்ந்திருக்க மாட்டார்.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: சாரி


ட்ரம்ப் இழைத்த கேடுசுலைமானி படுகொலை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author