

தமிழக வாசகர்களின் உற்சாகத் திருவிழாவான சென்னைப் புத்தகக்காட்சி இம்முறை வாசகர்களின் எண்ணிக்கை, வாங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, விற்பனையான தொகை என எல்லா விதங்களிலும் இதுவரை இல்லாத புது உச்சத்தைத் தொட்டு நேற்றோடு நிறைவடைந்தது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 43-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற்றது. சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 750-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பிரமாண்ட புத்தகக்காட்சியில், ஏறத்தாழ பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வோர் ஆண்டும் முந்தைய ஆண்டின் விற்பனையைத் தாண்டும் சென்னைப் புத்தகக்காட்சி, சில ஆண்டுகளில் சொதப்புவதும் உண்டு. இந்த ஆண்டோ எதிர்பார்ப்பைத் தாண்டியதுடன் புதிய உச்சத்தையும் தொட்டது. இந்தப் புத்தகக்காட்சி பல லட்சம் வாசகர்களை ஒன்றுதிரட்டியிருக்கிறது. நிறைய புதிய வாசகர்கள் வாசிப்புலகுக்குள் நுழைந்திருப்பதான மகிழ்ச்சிக் குரல்களைப் பலரிடமிருந்தும் கேட்க முடிந்தது. புதுப் புது யோசனைகளோடு களம் இறங்கிய பதிப்பகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு புகார்களைக் கடந்தும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது இந்தப் புத்தகக்காட்சி.
கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்.
நல்ல விற்பனை. அயல் தமிழர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். சென்னைப் புத்தகக்காட்சியானது உலகத் தமிழர்களுக்கானதாக மாறிவருவது ஒரு நல்ல அறிகுறி. கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நடப்பதற்குச் சிரமப்பட்டார்கள். மூட்டுவலி, தடுமாறுவது, கீழே விழுவது எனக் கஷ்டப்பட்டார்கள். கூட்டங்களை எதிர்கொள்வதில் கடும் சவால் இருந்தது. வழக்கமாகவே இதுபோன்ற சிக்கல்கள் இருக்கும் என்றாலும் இந்த வருஷம் ரொம்பவே அதிகம். அதிக இடம் வேண்டும் என்பதை வெறும் விற்பனை சார்ந்ததாகப் பார்க்கக் கூடாது. இடப்பற்றாக்குறையால் எங்களால் எல்லாத் தலைப்புகளையும் காட்சிக்கு வைக்க முடியவில்லை. சர்ச்சைகள் நிரம்பிய புத்தகக்காட்சி இது. வழக்கமாக, ‘பபாசி’ தலை உருளாது; இம்முறை அது நடந்தது.
க.நாகராஜன், பாரதி புத்தகாலயம் பதிப்பகம்.
புத்தகக்காட்சி சிறப்பாக இருந்தது. எங்கள் பதிப்பகத்தில் வழக்கமாக அதிக அளவில் விற்பனையாகும் ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகங்கள் இந்த முறையும் வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றன. இந்தப் புத்தகக்காட்சியில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், சாதியை விவாதிக்கும் புத்தகங்களை நிறைய பேர் வாங்கிச்சென்றார்கள்.
காயத்ரி, ஸீரோ டிகிரி பதிப்பகம்.
இது எங்களுக்கு இரண்டாவது புத்தகக்காட்சி. இரண்டு வருடங்களுக்குள் 150 தலைப்புகளில் புத்தகங்கள் கொண்டுவந்திருக்கிறோம். லதா அருணாச்சலம், அராத்து, அய்யனார் விஸ்வநாத்தின் புத்தகங்கள் அதிகம் விற்றன. சாருவின் எல்லாப் புத்தகங்களும் அதிக அளவில் வாசகர்களால் வாங்கப்பட்டன; குறிப்பாக, ‘ஸீரோ டிகிரி’ நாவல். எங்கள் பதிப்பகத்தில் ‘ஸீரோ டிகிரி’தான் பெஸ்ட் செல்லர். எங்களுக்கு இது உற்சாகமான புத்தகக்காட்சிதான். ‘பபாசி’க்கு எனது ஒரே ஒரு பரிந்துரை என்னவென்றால் ‘எழுத்தாளர் முற்றம்’ அரங்கை கழிப்பறைகளுக்கு அருகே அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான். புத்தகக்காட்சி என்பது எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற விழா என்பதால், புத்தகக்காட்சிக்கு உள்ளேயே நான்கு அரங்குகளை ஒதுக்கித்தர முயலலாம்.
செந்தில்நாதன், பரிசல் பதிப்பகம்.
குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என எல்லாத் தரப்புகளிலிருந்தும் எண்ணற்ற புதிய வாசகர்கள் வந்திருந்தது ஒரு மகிழ்ச்சியான விஷயம். இலக்கியம், வரலாறு, ஆய்வு நூல்கள் அதிக அளவில் விற்றன. ஒவ்வொரு பிரிவுக்குத் தனித் தனி வாசகக் கூட்டம் இருக்கிறது. வாசகர்கள் அப்பளம் சாப்பிட வருவதாகக் கிண்டலடித்துப் பேசிக்கொண்டிருப்பது நவீன இலக்கியவாதிகள்தான். புத்தகக்காட்சி சுவாரஸ்யமாகவும் நல்லபடியாகவும் இருந்தது. வாசகர்கள் எங்களை ஏமாற்றவில்லை.
வாசுகி பாஸ்கர், நீலம் பதிப்பகம்.
அறிவுத் தளத்தில் உரையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் பா.ரஞ்சித் தொடங்கிய பதிப்பகம் இது. சென்ற வருடம் விற்பனையாளராகக் களம் இறங்கினோம்; இம்முறை பதிப்பாளராக! புதிதாகக் கொண்டுவந்த ஐந்து புத்தகங்களுமே 90% விற்றுத்தீர்ந்தன. புத்தகக்காட்சிக்கான மவுசு ஆண்டுக்காண்டு அதிகரித்துவருகிறது. அதிகாரமாக அது ‘பபாசி’யிடமிருந்து வெளிப்படுகிறது. சாப்பாட்டுக் கடையை வாடகைக்கு விடுவதைப் போல புத்தக அரங்குகளை நடத்தக் கூடாது. பணம் கொடுத்தால் வரலாம் என்ற எண்ணம் மாறி, நோக்கத்தைப் பொறுத்து ‘பபாசி’ செயலாற்ற வேண்டும்.
சரவணன், அல்லயன்ஸ் கம்பெனி பதிப்பகம்.
இந்தப் புத்தகக்காட்சியில் விற்பனை சிறப்பாக இருந்தது. சோ எழுதிய மகாபாரதமும் ராமாயணமும் அதிகளவில் விற்பனையாகின. சத்யாவின் நகைச்சுவை கட்டுரைகள் தொகுதிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ‘இதயம் பேசுகிறது’ மணியன், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஆகியோரின் புத்தகங்களை விரும்பிக் கேட்டு வாங்கிச் சென்றார்கள். அதிக புத்தகங்களை வாங்கும் வாசகர்கள் அதை வாகனங்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் அடுத்த புத்தகக்காட்சியில் ‘ட்ராலி’ ஏற்பாடுகளைச் செய்தால் நன்றாக இருக்கும்.
ராமச்சந்திரன், விடியல் பதிப்பகம்.
பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் புத்தகத் தொகுப்புகளை ரூ.1,000 விலைக்கு விற்றோம். 1,000 பிரதிகள் விற்றன. நிறைய இளைஞர்கள் இவற்றை வாங்கிச்சென்றது மகிழ்ச்சி தரும் செய்தி. வழக்கமாக நான்கு ஸ்டால்களை நடுவில் ஒதுக்கித் தருவார்கள். இந்த முறை கடைசியாகத் தள்ளியது சிரமமாக இருந்தது. சாப்பாடு மிகவும் சுமாராக இருந்தது. எளிதில் களைந்துவிடக்கூடிய விஷயங்கள்தான். அடுத்த முறை சரிசெய்துவிடுவார்கள் என்று நம்புகிறோம்.
மித்ரா, வாசகசாலை பதிப்பகம்.
எங்களுக்கு இது முற்றிலும் புதிய அனுபவம். வாசகர்களாக உலவிய இடத்தில், பிற அரங்குகளில் ‘வாசகசாலை’ புத்தகங்களை வைத்துக்கொண்டிருந்த இடத்தில் முதன்முறையாகத் தனி அரங்கு பெற்று புத்தகக்காட்சியில் கலந்துகொண்டோம். மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வு. இம்முறை சிறார் இலக்கியத்தில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டிருப்பது எங்கள் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. தீவிர இலக்கிய அமைப்பு என்பதைத் தாண்டி, குழந்தைகளைச் சென்றடையும் பொறுப்பும் கடமையும் இருப்பதாகவே நினைக்கிறோம்.
புவனேஸ்வரி, வானதி பதிப்பகம்.
புத்தகக்காட்சியில் ‘வானதி பதிப்பகம்’ எந்த மூலையில் இருந்தாலும் எங்களைத் தேடி வரும் வாசகர்கள் இருக்கிறார்கள். இந்தப் புத்தகக்காட்சியிலும் வழக்கமான விற்பனை. காஞ்சி மகாபெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, சாண்டில்யன் நாவல்கள் நன்கு விற்பனையாகின. புத்தகக்காட்சியில் பராமரிப்பு விஷயங்களுக்கு இன்னும் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும்.
வாகன நெருக்கடி
இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை மேலாண்மை செய்வதில் இந்த முறை பெரும் குளறுபடி நடந்தது. உள்ளே வரவும் வெளியே செல்லவும் பெரும் சிரமப்பட்டனர். புத்தகக்காட்சிக்கு வெளியே பிரதான சாலையிலெல்லாம் இரு சக்கர வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
கதற வைத்த கழிப்பறைகள்
இந்த முறையும் கழிப்பறைப் புகார்கள் வழக்கம்போல வந்துகுவிந்தன. கழிப்பறை பகுதிகளுக்குள் அமைத்திருந்த பலகைகளில் நடந்துசெல்ல பெரும் சிரமப்பட்டார்கள். குறிப்பாக, முதியவர்கள்.
புஸ் கார்டுகள்
கூட்டம் அதிகமாகிவிட்டால் ‘கிரெடிட் கார்டுகள்’, ‘டெபிட் கார்டுகள்’ பயனற்றுவிடுகின்றன. ஏடிஎம்களின் எண்ணிக்கையும் போதவில்லை. கூடுதல் கவனம் வேண்டும்.
மூச்சு முட்டுகிறது
விடுமுறை தினங்களில் இம்முறை எக்கச்சக்கக் கூட்டம். கடுமையான புழுக்கத்தை வாசகர்கள் உணர்ந்தார்கள். பலர் ஓரிரு வரிசையோடு புத்தகக்காட்சியை விட்டு வெளியேறினர். வளாகத்தை இன்னும் விரிவாக்கி கூடுதல் காற்றோட்டத்துக்கு வழிசெய்யுங்கள். கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அரங்குகள் திணறின; ஏராளமான புத்தகங்கள் திருடுபோனதாகவும் புகார்கள் எழுந்தன. விஸ்தாரமான அரங்குகள் அமைப்பது குறித்து யோசிக்கலாம்.
ஆங்கிலப் புத்தகங்கள் நிரம்பியிருந்த புக் ஸ்டால். முதுகுக்குப் பின் ஒரு இளைஞனின் குரல். ஒரு வரலாற்றை விவரித்துக்கொண்டிருந்தான். ‘‘அந்த புக்ல இதைப் படிச்சேன், ஆனா அதுக்கு காண்டிராஸ்டா இதுல இப்படி இருந்துச்சு’’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். சன்னமா ஒரு குரல் “அப்படியா?”
ஒவ்வொரு புத்தகக்காட்சியிலும் ஒரு காதல் பூக்கத்தான் செய்கின்றது.
- உமாநாத் செல்வன்
பதிப்பக ஓனர்: டேய் தம்பி.. அந்தா அங்க போறது அந்த எழுத்தாளர்தானே?
தம்பி: ஆமாண்ணே.
பதிப்பக ஓனர்: போயி அவரக் கூட்டிட்டு வா.
அவர் வந்தவுடன் ஆரத்தழுவல்களுக்குப் பிறகு...
பதிப்பக ஓனர்: இப்போது இந்தப் புத்தகத்தை இந்த எழுத்தாளர் வெளியிட்டு நான்கு வார்த்தைகள் பேசுவார்.
- வேதா அர்ஜூன்