Published : 21 Jan 2020 08:24 AM
Last Updated : 21 Jan 2020 08:24 AM

கும்பகோணம் பாலியல் குற்ற வழக்கு அணுகுமுறை தேசிய அளவில் ஏன் முக்கியமானது?

எஸ்.பிரேமலதா

ஒரு கொதிகலனைப் போல் கொதித்துக்கொண்டிருந்தது அந்தச் சிறு நகரம். கொதிகலனிலிருந்து தெறித்து விழும் சுடுநீராய் நாங்கள் சந்தித்த மனிதர்களிடம் தகித்துக்கொண்டிருந்தன கோபமும் ஆற்றாமையும். வேற்று மாநிலத்திலிருந்து வேலை நிமித்தமாகத் தங்கள் நகரத்தில் நம்பிக்கையுடன் கால் வைத்த ஓர் இளம்பெண்ணின் மேல் நிகழ்த்தப்பட்டிருந்த கொடூரத்தை ஜீரணிக்க இயலாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள் கும்பகோணத்தினர்.

அந்தச் சம்பவத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் காவிரி மாவட்டங்களைப் புரட்டிப்போட்டிருந்தது கஜா புயல். எண்ணற்ற இளைஞர்கள் இரவு, பகல் பாராது நிவாரணப் பணிகளில் சமூக உணர்வுடன் தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருந்தனர்; தமிழ்நாடே அவர்களைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது. இதற்கு நேரெதிராக டிசம்பர் 1, 2018 அன்று கும்பகோணம் நகரத்தின் 4 இளைஞர்கள், போதையில் ஓர் இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருந்தனர்.

டெல்லியைச் சேர்ந்த ஒரு தனியார் வங்கி அதிகாரியான அந்தப் பெண், தனது வங்கிப் பணி சார்ந்த பயிற்சிக்காக கும்பகோணம் வந்திருந்தார். அவர் பயணித்து வந்த ரயில் தாமதமாய் வந்துசேர்ந்ததால், இரவு 10 மணிக்கு மேல் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குச் செல்ல ஓர் ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதை உணர்ந்த அந்தப் பெண் கூச்சலிட்டதால், வழியிலேயே கும்மிருட்டில் அந்தப் பெண்ணை இறக்கி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது அந்த வழியில் இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் அந்தப் பெண்ணை மிக மோசமான கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

காவல் துறை காட்டிய வேகம்

இதுவரையிலான நிகழ்வுகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அடிக்கடி நிகழ்பவை; பின்னணிகள் மாறலாம். இனிவரும் நிகழ்ச்சிகள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் கவனிக்க வேண்டியவை.

எதிர்பாராத தாக்குதலில் துவண்டு முடங்கிவிடாமல், துணிவுடன் புகார் அளித்தார் அந்தப் பெண். துரித கதியில் இறங்கிய காவல் துறை உடனடியாகக் குற்றவாளிகளைக் கைதுசெய்தது. இந்த வழக்கைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து வங்கி நிர்வாகத்தையும், காவல் துறையையும் நிர்ப்பந்திக்கும் விதத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், சிஐடியு, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கம் போன்ற அமைப்புகள் இணைந்து கும்பகோணத்தில் டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 13, 2018 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன. பொதுச் சமூகம் கவனிக்கலானது. நீதித் துறை இந்த வழக்கில் வேகம் காட்டியது.

புகார் அளிக்கப்பட்ட நாள் முதல் தீர்ப்பு நாள் வரையிலான, தஞ்சாவூர் மாவட்டக் காவல் துறையின் துரிதமான நடவடிக்கைகள் இங்கே அவசியம் குறிப்பிடப்பட வேண்டியவை. பாலியல் குற்றம் நிகழ்ந்த உடனே குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு இளைஞர்களையும், ஆட்டோ ஓட்டுநரையும் கைதுசெய்து, பிணையில் வெளிவர முடியாத வகையில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, பதினைந்தே நாட்களில் குற்றவாளிகள் மீதான குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்ததோடு அடையாள அணிவகுப்பு நடத்தி, 33 சாட்சிகளை அரசுத் தரப்பில் நிறுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் எதிர்கொண்ட நடைமுறைப் பிரச்சினைகளையும் மனிதநேயத்துடன் கையாண்டது.

கவனம் ஈர்க்கும் தீர்ப்பு

ஜனவரி 13, 2020 அன்று இந்த வழக்கில், தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘நான்கு இளைஞர்களுக்கும் சாகும் வரை வாழ்நாள் சிறை’ எனும் மகத்தான அந்தத் தீர்ப்பு, வன்புணர்வுக்கு ஆளாகிய பெண்ணின் உறுதிக்கும், காவல் துறையின் கடமைவுணர்வுக்கும், மக்களின் ஒன்றுபட்ட போராட்ட உணர்வுக்கும் அளிக்கப்பட்ட மரியாதை என்றும்கூடச் சொல்லலாம்.

பெரும்பாலும் அதிகம் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் இத்தகைய வழக்குகளில் காவல் துறை காட்டக்கூடிய மெத்தனமே நீதித் துறை மீதான அழுத்தமாகவும் மாறி ஒருகட்டத்தில் மரண தண்டனை போன்ற இடத்துக்குத் தீர்ப்புகள் நகர்ந்துவிடுவது இங்கே நடப்பது வழக்கம். தஞ்சாவூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி மிகுந்த கவனத்தோடு இந்த வழக்கைக் கையாண்டிருக்கிறார்.

சமூக அமைப்புகளின் அழுத்தம்

முக்கியமான அடுத்த விஷயம், போராட்டங்களை முன்னெடுத்த அமைப்புகள் அப்போதே சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்தை நேரில் சந்தித்து, “பாதிக்கப்பட்ட பெண் எதிர்கொண்ட பாலியல் தாக்குதல், பணி சார்ந்த பிரச்சினையாகவே கருதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தன. மேலும், அந்தப் பெண் இந்த எதிர்பாரா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுவரத் தேவையான சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு, உளவியல்ரீதியிலான சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவச் சிகிச்சைகளுக்கும், வங்கி நிர்வாகம் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” எனும் கோரிக்கையையும் அழுத்தமாக முன்வைத்திருந்தன. சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் இதை ஏற்று அமலாக்கியது.

இந்தச் சம்பவத்தைத் தனித்த ஒன்றாகப் பார்க்காமல், “தொலைதூர இடங்களுக்குப் பணிநிமித்தமாகச் செல்ல நேரிடும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். பயண ஏற்பாடு, தங்குமிடம் முதலிய அம்சங்களில் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டிய முழுப் பொறுப்பையும் நிர்வாகங்கள் ஏற்க வேண்டும்” எனும் கோரிக்கையைப் பரவலாக்கலானது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம். “அலுவலகம் அல்லது பணி வளாகம் மற்றும் வேலை நேரம் முதலிய வரையறைகளைத் தாண்டி, உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பணி சார்ந்த அச்சுறுத்தல்களும், பணியிடப் பிரச்சினைகளாகவே கருதப்பட வேண்டும்” எனும் விரிந்த பார்வையை இப்போது தொழிற்சங்கங்கள் கையில் எடுத்துள்ளன.

கும்பகோணம் போன்ற சிறு நகரங்கள்கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்பது ஒருபுறம். வங்கித் துறை போன்ற அமைப்புசார் துறைகளின் பெண் ஊழியர்களின் பாதுகாப்புகூட உத்தரவாதப்படுத்தப்படவில்லை எனும் நிதர்சனம் மறுபுறம். இவற்றினூடாக இந்த விவகாரம் சுட்டும் முக்கியமான விஷயங்கள் சில உண்டு.

பாலியல் வன்முறை ஒரு சமூகப் பிரச்சினை. ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பு, பாகுபாடான சமூகப் படிநிலை, பெண்ணுடலைப் போகப்பொருளாக முன்நிறுத்தும் நுகர்வுக் கலாச்சாரம் என்று பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் என்று தொடர்வதில் தனிநபர்களின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சமூகக் காரணிகள் பலவும் பின்னிற்கின்றன. ஆகையால், பாலியல் வன்முறை போன்ற ஒரு சமூகக் குற்றத்தை எதிர்கொள்ளும் போராட்டத்திலும் ஒட்டுமொத்த சமூகமும் பங்கெடுத்துக்கொள்வதே தீர்வுக்கு வழிவகுக்கும்.

ஏறக்குறைய 14 மாதங்களுக்குள் துரிதமான, நேர்மையான விசாரணைகள் மூலம், குற்றம் இழைப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக மட்டுமல்ல; எதிர்கொண்டு போராடும் போராளிகளுக்கும் நம்பிக்கைக்கீற்றாய் வெளிவந்துள்ள இத்தீர்ப்பை தேசிய அளவில் விவாதிக்க வேண்டும். ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரச்சினையானது எப்படி ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினை ஆகிறது; சமூகத்தின் பல்வேறு அங்கங்களும் கை கோர்க்கையில் ஒரு பிரச்சினை எவ்வளவு வேகமாகவும், தீர்க்கமாகவும் அணுகப்படுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்!

- எஸ்.பிரேமலதா, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், பெண் ஊழியர் துணைக் குழு.

தொடர்புக்கு: prems060773@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x