Last Updated : 20 Jan, 2020 09:40 AM

 

Published : 20 Jan 2020 09:40 AM
Last Updated : 20 Jan 2020 09:40 AM

புரிபடாத புத்தகங்களை எப்படி வாசிப்பது?

புத்தக வாசிப்பு தொடர்பாக நாம் அடிக்கடி கேட்கும் குற்றச்சாட்டு, ‘இந்தப் புத்தகம் புரியவில்லை’ என்பது. குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட புத்தகம் அநேகமாக ஒரு காத்திரமான இலக்கியப் படைப்பாக இருக்கும். இப்படிக் குற்றஞ்சாட்டுகிற வாசகர்கள் முதல் பார்வையிலேயே தாங்கள் எந்தச் சிரமத்துக்கும் உள்ளாக்கப்படாமல் எல்லாம் புரிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

‘லைட் ரீடிங்’ என்று ஒரு சொற்றொடர் தமிழ்ச் சூழலில் வெகு காலமாகப் புழக்கத்தில் இருக்கிறது. வாசகரை ஒக்கலில் இடுக்கிக்கொண்டு சங்கில் பாலைப் புகட்டிவிடவேண்டும் என்று இந்த ‘லைட் ரீடிங்’ வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இலக்கிய வாசிப்பு வாசகரைச் சிந்திக்கத் தூண்டும். சில நேரங்களில், அது முதல் படிக்கட்டிலிருந்து மூன்றாம் படிக்கட்டுக்குத் தாண்டிவிடும். இடையில் உள்ள படிக்கட்டை வாசகர்தான் உய்த்துணர வேண்டும். இதற்குப் பயிற்சி வேண்டும். அது சாத்தியமாகிறபோது வாசகருக்கு ஒரு புதிய கதவு திறக்கிறது. அந்த அனுபவம் அலாதியானது.

‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலில் சுந்தர ராமசாமி சொல்கிறார்: ‘ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும். அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம்.’ டோபையாஸ் வூல்ப் என்கிற அமெரிக்க எழுத்தாளர் சிறுகதையைப் பற்றிச் சென்னது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. “ஒரு சிறுகதை முடிவடைவதில்லை. அதில் நாம் உள்ளிடுவது குறைவாகவும் பெறுவது கூடுதலாகவும் இருக்கும்.” முடிவடையாத கதையை வாசகன்தான் இட்டு நிரப்பிக்கொள்ள வேண்டும். அப்போதும் அது நிறைவடைவதில்லை. இதைத்தான் சுந்தர ராமசாமி கதவைத் திறப்பதோடு ஒப்பிடுகிறார். ஒரு கதவைத் திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரிகின்றன. அதாவது, திறக்கக் திறக்கக் கதவுகள் வந்துகொண்டே இருக்கும். புத்தகமும் வாசிப்பும் அப்படித்தான் இருக்க வேண்டும். நல்ல புத்தகம் வாசகரை அடுத்தடுத்த கதவுகளைத் திறக்கச் செய்யும். புத்தகங்களை வாசிப்பதற்கான பயிற்சி நமது பள்ளிக்கூடங்களிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

ஆனால், நமது பள்ளி மாணவர்கள் பலரும் பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்கிறார்கள். அவற்றையும் பகலிரவாக மனனம் செய்கிறார்கள். புத்தகங்கள் அவர்களுக்கு அயற்சி அளிப்பதாக மாறிவிடுகிறது. படிப்பு முடிந்ததும் அவர்கள் புத்தகங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இதையும் தாண்டி புத்தகங்களின் பக்கம் வருபவர்கள் ‘லைட் ரீடிங்’குடன் நின்றுவிடுகிறார்கள்.

எனக்கு நம் சூழலை ஹாங்காங்கோடு ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஹாங்காங் பள்ளிகளில் அறிவியலைப் போலவே மொழி, இலக்கியம், சமூகம், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். 90% மாணவர்கள் தாய்மொழியில்தான் எல்லாப் பாடங்களையும் படிக்கிறார்கள். எந்தப் பள்ளி மாணவரின் முதுகுப் பையைத் திறந்து பார்த்தாலும் பாடநூல் அல்லாத ஒரு புத்தகமேனும் இருக்கும். கதைப் புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவது பாடத்திட்டத்தின் ஒரு பகுதி.

எந்தத் தொழிலைச் செய்பவர்களானாலும் அவர்களுக்குத் தங்கள் கருத்தை வாடிக்கையாளர்களிடமோ சக பணியாளர்களிடமோ மேலதிகரிகளிடமோ அரசாங்கத்திடமோ எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது; எழுத வேண்டியிருக்கிறது. இதற்குத் தொடர்ச்சியான வாசிப்பு அவசியம். சுயமாக எழுத முடிவதும் அவசியம். இது ஹாங்காங் கல்வியாளர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நமது கல்வித்திட்டத்திலும் புத்தக வாசிப்பு உட்படுத்தப்பட வேண்டும்.

மல்லார்மே ஒரு புகழ் பெற்ற பிரெஞ்சுக் கவிஞர். அவர் எழுதினார்: ‘ஓர் அழகான புத்தகமாகப் படைக்கப்படுவதற்காகவே இந்த உலகம் உருவாக்கப்பட்டது.’ புத்தகங்களின் வழியாக இந்த உலகத்தையே வாசிக்க முடியும். பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட புத்தகங்களின் ருசி பள்ளிக்காலத்திலேயே நம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மனனக் கல்வி முறையிலிருந்து நமது பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போது அவர்களுக்குப் புதிய கதவுகள் திறக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x