Published : 20 Jan 2020 09:35 AM
Last Updated : 20 Jan 2020 09:35 AM

காந்தி வரலாறு மாற்றப்படுகிறதா?

டெல்லியில் காந்தி படுகொலைசெய்யப்பட்ட இடமான ‘பிர்லா இல்லம்’ இப்போது ‘காந்தி ஸ்மிருதி’ என்று அழைக்கப்படுகிறது. அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில மாற்றங்கள் சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றன. கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை ஒட்டி புகழ்பெற்ற பிரெஞ்சு புகைப்படக்காரர் ஆன்ரி கார்த்தியே -பிரெஸோனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மாற்றப்பட்டது இந்தச் சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் காந்தியின் கொள்ளு பேரனான துஷார் காந்தி. காந்தி கொல்லப்பட்டது தொடங்கி அவருடைய இறுதி யாத்திரை வரை சித்திரிக்கும் இந்தப் புகைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. அவற்றை காந்தி நினைவில்லத்துக்கே கொடையாக அளித்துவிட்டார் பிரெஸோன்.

நினைவில்லத்தின் தாழ்வாரங்களிலும் சுவர்களிலும் பெரிய அளவில் மாட்டப்பட்டிருக்கும் இந்தப் படங்களை ஒருவர் வரிசையாகப் பார்த்து, கீழேயுள்ள படவரிகளைப் படிக்கும்போது அன்றைய நிகழ்வுகளை வரிசையாகக் காணும் அனுபவத்தைப் பெறுவார். இப்போது அந்தப் படங்கள் அகற்றப்பட்டு, நினைவில்லத்தில் உள்ள டிவியில் சிறிய அளவிலான படங்களாகப் பட விளக்கம் ஏதும் இல்லாமல் ஓடும் வகையில் மாற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே காந்தி நினைவில்லம் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. முன்னதாக, 1948 ஜனவரி 20 அன்று காந்தியைக் கையெறி குண்டு மூலம் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியுற்று, அந்தக் குண்டு தரையில் ஏற்படுத்திய சேதமானது அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் பராமரிக்கப்பட்டுவந்தது; அந்தச் சேதம் சிமென்ட் பூசி மறைக்கப்பட்டபோது, காந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி உண்டானது.

அடுத்ததாக இப்போது, பிரதமர் மோடியின் ஆலோசனையின்பேரில், காந்தி நினைவில்லத்தை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கைகளும் பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றன. “காந்தி என்றால் எளிமை; தன் வாழ்வே தான் விட்டுச்செல்லும் செய்தி என்று சொன்னவர் அவர். அவருடைய வரலாறு எளிமையாகவும் கண்ணியமாகவும் சொல்லப்பட வேண்டும்” என்ற குரல்கள் ஒலிக்கின்றன. துஷார் காந்தி “இப்போதைய மாற்றங்கள் காந்தி ஸ்மிருதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேலும் ஒரு அவமதிப்பு” என்றே இதைக் குறிப்பிட்டிருப்பதோடு, “காந்தி நினைவில்லத்தில் உள்ள உருவப்படங்களை நீக்கியது, அவற்றை டிஜிட்டல் வடிவில் வைக்கத்தான்” என்று நினைவில்ல இயக்குநர் தீபங்கர் ஸ்ரீஞான் விளக்கம் கூறியிருப்பதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “இது நேர்மையற்ற விளக்கம். வரலாற்றை மறைக்கும் முயற்சி. காந்தி ஸ்மிருதியில் முன்னர் வைத்திருந்த புகைப்படப் பிரதிகள் மீண்டும் அதே வடிவில், அதே நிலையில் வைக்கப்பட வேண்டும்” என்றும் துஷார் காந்தி கோரியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x