Published : 17 Jan 2020 09:55 am

Updated : 17 Jan 2020 09:55 am

 

Published : 17 Jan 2020 09:55 AM
Last Updated : 17 Jan 2020 09:55 AM

360: கர்நாடகத்திலும் விலையில்லா மடிக்கணினி

free-laptop-in-karnataka

கர்நாடகத்திலும் விலையில்லா மடிக்கணினி

தமிழ்நாட்டில் விலையில்லாமல் வழங்கப்படும் பொருட்கள் குறித்துப் பலரும் கேலி பேசுவதுண்டு. ஆனால், சமூக அளவில் தமிழ்நாட்டை முன்னிலையில் கொண்டுவருவதற்கு அந்தத் திட்டங்களெல்லாம் எந்த அளவுக்கு உதவின என்று அமர்த்திய சென் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திட்டங்களுள் ஒன்றுதான் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினித் திட்டம். இந்தத் திட்டத்தைத் தற்போது கர்நாடகமும் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது. இதன்கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளங்கலைக் கல்லூரி மாணவர்கள் மடிக்கணினியைப் பெறவிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்காக மொத்தமாக ரூ.300 கோடி செலவிடப்படுகிறது. ஒவ்வொரு மடிக்கணினிக்காகவும் கர்நாடக அரசு கொடுக்கும் விலை ரூ.28 ஆயிரம் ஆகும். எங்கும் கணினிமயமாகிவிட்ட சூழலில் கணினியைப் பெரிதும் கணினி ஆய்வகத்தில்தான் ஏழை மாணவர்கள் பார்க்க நேரிடும். பள்ளி, கல்லூரிகளில் பெரிதும் ஏட்டுப் படிப்பாகவே பல மாணவர்களுக்குக் கணினி அறிவியல் அமைந்துவிடும். இந்தச் சூழலில் தற்போது கர்நாடகத்தில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் மாணவர்களின் கணினி அறிவையும், இணையத்தின் மூலம் கிடைக்கும் உலக அறிவையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


18,000 பேருக்கு அரசுப் பணி

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் மாநிலத் தேர்வாணையங்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறார். பதினைந்து ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த குரூப்-டி நிலையிலான 18,000 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தி ஆறு மாதங்களுக்குள் பணி நியமன ஆணைகளையும் வழங்கியுள்ளார். அலுவலக உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், லிப்ட் இயக்குபவர்கள், தட்டச்சர்கள், தோட்டப் பராமரிப்பாளர்கள் என்று ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் குரூப்-டி பணியாளர்களின் பணி மிக அவசியமானது. ஹரியாணாவில் குரூப்-டி பணியாளர்கள் நியமனங்களில் தொடர்புடைய துறைகள் ஒவ்வொன்றும் தனித்தனி விதிகளை வகுத்துக்கொண்டிருந்தன. பெரும்பாலும் நேர்முகத் தேர்வு வாயிலாகவே இந்தப் பணிகள் நிரப்பப்பட்டுவந்தன. இந்த நேர்முகத் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை விவாதத்துக்குரியதாகவே இருந்துவந்தது. 74 துறைகளைச் சேர்ந்த குரூப்-டி பணியாளர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றிய கட்டார், உடனடியாகத் தேர்வையும் நடத்தி முடித்துவிட்டார். பதினெட்டு லட்சம் பேர் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்ததார்கள். ஹரியாணாவில் உள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் சராசரியாக மூன்று குடும்பங்களுக்கு ஒருவர் விண்ணப்பித்திருந்தார்கள். தனியார் வேலைவாய்ப்புகள் குறைந்துவரும் நாட்களில் அரசுத் துறையில் கடைநிலை ஊழியர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதே சரியான அணுகுமுறை என்று கட்டாருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

ஆப்பிளை உடைக்கும் டெய்சி

தற்காலத்தில் குப்பைகள் மேலாண்மையில் மிகப் பெரிய பிரச்சினை மின்னணுச் சாதனங்களை என்ன செய்வது என்பதுதான். ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன்களைக் கையாளும் விதம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். ஐபோன்களை உடைத்து அதிலுள்ள கனிமங்களை மறுபயன்பாட்டுக்காக ஆப்பிள் நிறுவனம் எடுத்துக்கொள்கிறது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம் ரோபாட்டுகளைப் பயன்படுத்துகிறது. இதற்கென்று உருவாக்கப்பட்ட ரோபாட்டின் பெயர் டெய்சி. லித்தியம் உள்ளிட்ட 14 கனிமங்களை இந்த ரோபாட் பிரித்தெடுக்கிறது. ஸ்மார்ட்போன்களைத் தயாரிப்பதற்குக் கனிமங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. ஆகவே, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பெரிதும் கனிமச் சுரங்கங்களைச் சார்ந்திருக்கின்றன. நிலத்துக்கு அடியில் உள்ள கனிமங்கள் கிடைக்கும் வரை பிரச்சினையில்லை என்றாலும் கனிமங்களை அவற்றுக்குரிய முக்கியத்துவத்தோடு பயன்படுத்த வேண்டும் என்பதால்தான் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னெடுப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


விலையில்லா மடிக்கணினி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author